20:‘புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’

*’20’*

*’புவனகிரி பள்ளி:’*

( சென்ற பதிவில் ஜனார்த்தனன் சார் பற்றிப் படித்து விட்டு அவர் நினைவுகளை சிறிதும் பெரிதுமாக பலர் எழுதியிருந்தனர். ‘தறி வாத்தியார் ஒருவரல்ல, இருவர்!’ என்று தகவல்களும் அனுப்பியிருந்தனர். 

புவனகிரி பள்ளி பற்றிய தொடர் பதிவு ஓர் அனுபவமாக உள்ளது என்று பலரும் மின்னஞ்சல் செய்திருந்தனர்.

தொடர்ந்து வாசிப்பதற்கும், வாசித்து வந்த உணர்வுகளை பகிர்வதற்கும் நன்றி)

*20*

*’புவனகிரி பள்ளி : புவனகிரி டுடோரியல் சென்டர்கள்’*

நல்ல ஆசிரியர்கள், நன்றாகப் படிக்கும் மாணவர்கள் என்று புவனகிரிப் பள்ளியைப் பற்றி எவ்வளவு தொடர்ந்து எழுதினாலும், அதேயளவு ‘கடமை’ செய்த ஆசிரியர்களும், படிப்பின் நாடியைப் பிடிக்க முடியாமல் திக்கித் திணறி விழி பிதுங்கிய பெருமளவு மாணவர்களும் உண்டு புவனகிரி பள்ளியில் என்பதையும் குறிப்பிட்டேயாக வேண்டும்.

அந்நாளைய புவனகிரியின் அந்தப் பெரும்பான்மை மாணவர்களை அணைத்துக் கரை சேர்த்தவை டுடோரியல் சென்டர்கள், ட்யூஷன் சென்டர்கள் என்பதும் மறுக்கவே முடியாத உண்மை.

நிறைய ஆசிரியர்கள் நிறைய  ட்யூஷன்கள் இருந்திருந்தாலும், சில மொத்த புவனகிரியிலும் பெயர் பெற்றவை, முதன்மையானவை.
….

*முதன்மையானது – என்டிசி:*

ஆதிவராக நல்லூரிலிருந்து பெரியவர் ‘பாண்டியன் டுடோரியல்ஸ்’ தொடங்கி சிதம்பரத்திற்கு சென்று விட, அவரைத் தொடர்ந்து அவரின் வழி காட்டுதலில் புவனகிரிக்கு வந்தார் அடுத்த சகோதரர் இரா அன்பழகன் என்பார்கள்.

அப்படி புவனகிரியில் அவரால் தொடங்கப்பெற்றதே
‘என்டிசி’ எனப்பட்ட ‘நியூ டுடோரியல் சென்டர்’. ரெங்கராஜா திரையரங்கம் போகும் வழியில் இடது புறம் ஏஜிஎஸ் அவர்களின் இடத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் வந்து புவனகிரியில் பக்தர்கள் அறிமுகமாகி சேர்ந்து கொண்டிருந்த அந்த நேரங்களில் (ஏஜிஎஸ்ஸின் குடும்பத்தினர், பட்டாபி போன்றோர் தீவிரமாக செவ்வாடை சக்தி வழிபாடு என இயங்கினர்), மிக மிக உச்சத்தில் இயங்கிக் கொண்டிருந்தது ‘என்டிசி’ எனப்பட்ட ‘நியூ டுடோரியல் சென்டர்’

புவனகிரி அஞ்சல் அலுவலகம், காவல்நிலையம் கடந்து போனால் வலப்புறம் ‘கோவிந்தராஜூலு செட்டியார் சன்ஸ்’ குடும்பத்தினரின் ஒரே மாதிரி மூன்று வீடுகள். (ஸ்ரீதர், பிரகாஷ், ஜெகன், ஜவகர், மோகன், பாபு) அதன் தரை தளத்தில்தான் அப்போதெல்லாம் இயங்கியது ‘இந்தியன் வங்கி’.  இந்தியன் வங்கிக்கு எதிரே ‘கமர்கட்டு’ செய்யும் வீடு, அடுத்து பெட்டிக்கடை அதையொட்டிய ஒரு பச்சை வண்ணம் பூசப்பட்ட கட்டிடம். அதில்தான் இயங்கியது என்டிசி. உண்மையில் அது மாத வாடகைக்கு அறைகளை விடும் கீழ்த்தளம் மேல்தளம் என இருதளங்களிலும் அறைகள் கொண்ட ஒரு ‘மேன்சன்’ (மாத வாடகை லாட்ஜ்).

கீழ்த்தளத்தில் நகை ‘கில்ட்’ பிடிப்பவர், வெளியூரிலிருந்து வந்து வணிகம் செய்வோர் என பலர் வாடகைக்கு இருக்க, மேல்தளத்தின் முகப்பை எடுத்துக் கொண்டு ‘பால்கனி’ அமைப்பின் மேலே கூறை வேய்ந்து பெரிய வகுப்பறையாக மாற்றியிப்பார் அன்பழகன் சார்.

மேற்குக் கோடியில் கரும்பலகை, ஆசிரியர் நின்று பாடமெடுக்க கொஞ்சம் இடம், அதற்கடுத்து மாணவர்கள் அமர வரிசையாக மரப்பெஞ்சுகள் என்ற அமைப்பில் வகுப்பறைகள். புவனகிரி பெண்கள் பள்ளி, புவனகிரி ஆண்கள் பள்ளி என இரண்டு இடங்களிலிருந்தும் மாணவர்கள் வர சராசரியாக எழுபது எண்பது பேர் எல்லாம் படித்ததாக நினைவு.  கணக்குப் பாடத்துக்கு ஆதனாவூர் சண்முகம் சார், வரலாறு புவியலுக்கு ஆதனாவூர் ராஜ்குமார் சார், தமிழுக்கு ஒரு தமிழ்ப்புலவர், அறிவியலுக்கு அழிச்சிக்குடி நாராயணசாமி சார் என ஒவ்வொரு பாடத்துக்கும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு சிறப்பாக நிர்வகித்தார்கள். ஆங்கிலத்தை அன்பழகன் சார் எடுப்பார்.

வளரும் வயதில் ஆண்கள் பெண்கள் என ஒரே இடத்தில் இருபாலினரும் இருந்ததால், வயதிற்கான கதைகளும் நிரம்ப இருந்தன. ‘நான் பாமாவை லவ் பன்றேன்’ ‘நிர்மலாவை லவ் பன்றேன்’ ‘உஷா என் ஆளு’ வகையான ஒரு பக்க கற்பனை கிளப்பும் நாயகர்களும், இவற்றை ரசித்த ஆனால் இவை எதிலும் சிக்காத பெரும்பாலானவர்களும் உண்டு.

பள்ளியில் வேறுவேறு வகுப்புகளில் இருந்து அல்லது வெறுமனே பார்த்து, என்டிசியில் படிக்கையில் நெருக்கம் பெற்று உயிர் நண்பர்களான பலரை எனக்குத் தெரியும்.

என்டிசி இருந்த காலத்தில் இயங்கிய மற்றொரு டுடோரியல் ‘தாகூர் டுடோரியல் சென்டர்’.  பள்ளியில் பத்தாவதில், பன்னிரெண்டாவதில் தேர்ச்சி பெறாமல் விழுந்து, என்டிசியின் துணையோடு தாகூர் டுடோரியல் துணையோடு ஓராண்டு படித்து பத்தாவதை, பன்னிரெண்டாவதை நன்றாக முடித்து தேர்ச்சி பெற்ற பலர் உண்டு.

புதிதாக துவங்கப்பட்டு இயங்கிய புவனகிரியின் மற்றுமொரு டியூஷன் சென்டர் – ‘என்என்டிசி’ எனப்படும் ‘நியூ நாலந்தா டுடோரியல் சென்டர்’.  என்டிசியில் தரப்படும் அதே ‘எஸ்ஸே / சமரி’ ‘கேள்வி பதில்கள்’ ‘பாடங்கள்’  இங்கும் தரப்பட்டது என்பது அந்நாளைய அதிசயச் செய்தி.

மாதாந்திர கட்டணங்கள் பெற்று இயங்கிய இந்த மையங்களால் சராசரி மாணவர்கள் நல்ல பலன் பெற்று தேர்ச்சி அடைந்தார்கள்.

( ‘ஆறாம் வகுப்புக்கு ஆறு ரூபாய், ஏழாம் வகுப்புக்கு ஏழு ரூபாய்’ என்ற கட்டண விகிதத்தில் இயங்கிய சாயப்பு வாத்தியாரின் ட்யூஷன் பற்றி முன்பே ஒரு பதிவில் எழுதிவிட்டோம். அங்கு ட்யூஷன் படிக்கும் மாணவர்களே பள்ளி தேர்வு விடைத்தாள்களைத் திருத்தினார்கள் என்பது சீரணிக்க முடியாத அல்லது சிரிப்பை வரவழைக்கும் செய்தி)

காலை எட்டு மணிக்கும், மதியம் ஒரு மணிக்கும் உலகமே கேட்கும் அளவிற்கு ‘ஊஊஊஊவ்!’ என்று ஒலித்து சத்தமாக இயங்கிக் கொண்டிருந்த புவனகிரி பேரூராட்சியின் அந்நாளைய  மின்சார சங்கு போல ஊருக்கே தெரியும் அளவிற்கு இயங்கிக் கொண்டிருந்தன புவனகிரியின் இந்த டுடோரியல்கள் அந்நாட்களில்.

கால மாற்றம், பள்ளிப் பாட திட்டங்கள் மாற்றம், மாணவர்களின் தரம் உயர்வு, ஆங்கில மெட்ரிக் சிபிஎஸ்ஸி பள்ளிகள் வருகை உருவாக்கம் என பல காரணங்களால் புவனகிரியின் இந்த டுடோரியல்கள் இன்று இல்லை. ஆனால், அந்நாளைய புவனகிரி மாணவர்களுக்கு இவை அடைக்கலம் தந்து உதவின என்பது மறுக்க முடியாத உண்மை.

(அடுத்த பதிவில் நிறைவு பெறும்)

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
11.02.2022

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *