21: புவனகிரி பள்ளி: நிறைவுபுவனகிரி பள்ளி: நிறைவு

*21*

*புவனகிரி பள்ளி: நிறைவு*

திரவியம் தேட திரைகடல் ஓடி, அனுபவங்களோடு திரும்ப வந்து ஊரெல்லாம் சுற்றி,
முப்பத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் திடீரென்று உள்ளெழுந்த ஓர் உந்துதலால் புவனகிரிப் பள்ளியில் உடன் படித்த மாணவர்களைத் தேட, ஜெகன், சங்கர், பாலு, ராஜாராமன் என நால்வர் அகப்பட, வாட்ஸ்ஆப் குழுவொன்றைத் தொடங்கி வைத்தோம்.

‘பள்ளி நினைவுகளை கொஞ்சம் அசைபோடுட்டு இவர்களை மகிழ்விப்போமே!’ என்று இந்த நண்பர்களுக்காக விளையாட்டாய் எழுதத் தொடங்கியதே ‘புவனகிரி பள்ளி’ தொடர்.  குழுவிலும் சுந்தர், பாலவிநாயக முருகன், பரமகுரு, ஸ்ரீதர், மோகன், கார்த்தி என தோழர்கள் ஒவ்வொருவராய் சேர சேர, இரண்டு அல்லது மூன்று பதிவுகள் என்று நீட்டித்து எழுதத் தொடங்கிய அந்த குழுவிற்கான பதிவு, வெளியே கசிந்து பகிரப்பட தீயென பற்றிப் படர்ந்தது.

’50 ஆண்டுகளுக்குப் பின்னே போய் வாழ்ந்து விட்டு வந்த அனுபவம் தருகிறது தம்பி எனக்கு. அதை நிறுத்தாதீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். நான் துரைராஜ், புவனகிரி பள்ளியில் ஆசிரியர்!’ என்று அவராகவே வந்து பேசி அதிர வைத்தார் மனிதரொருவர்.

‘நான் புவனகிரி தாமரைக் குளத்துத் தெரு டாக்டர் நடராஜன்! புவனகிரிப் பற்றி எழுதறது… அடடா!’ என்று ஓர் அழைப்பு.

சாயப்பு வாத்தியார் பற்றிய பதிவை படித்துவிட்டு, உணர்ச்சி பூர்வமாக ‘நான் இன்று திரைத்துரையில் நடிப்பில் இருப்பதற்கு மூல காரணமே சாயப்பு வாத்தியார் போட்ட விதைகள்தான்!’ என்று பகிர்ந்தாராம் மூத்த மாணவர் வேல்முருகன்.

துபாயிலிருந்து முதலில் ராஜவேலு சித்தப்பா வழியே, பிறகு எனக்கே நேராக என வாராவாரம் குரல் பதிவு கண்ணன் ஐயரிடமிருந்து.

‘நாந்தான் புவனகிரி ஸ்கூல் ப்ரேயர்ல நியூஸ் வாசிப்பேன் அப்பெல்லாம்!’ என்ற ரீதியில் ஒவ்வொரு வாரமும் உணர்ச்சி பீறிட பகிர்வார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து வேதியியல் முனைவர் சரவணன்.

அமெரிக்காவிலிருந்து ஒளியும், புவனகிரியிலிருந்து கலியும் பொன்னையனிடம் சிலாகித்துக் கொள்வார்கள் வாராவாரம்.

‘உனக்கு எப்படி எல்லாம் ஞாபகத்துல இருக்கு? 16டிபி மெமரியோ!’ – இது ஜெகன்.

‘பரமன் பச்சைமுத்துவா? நான் புவனகிரியிலிருந்து, நீங்கள் குறிப்பிட்டு எழுதியிருந்தீங்களே அந்த தமிழ் ஆசிரியர் ஜெயராமன்…’ என்று என்னை வாய் பிளக்க வைத்த அழைப்பு ஒன்றும் வந்தது.

‘பார்த்தே ஆக வேண்டும்!’ என்று கடலூரில் வழிமறித்து நிற்கிறார் சிபிசிஐடி அதிகாரியான முன்னாள் புவனகிரி பள்ளி மாணவர்.

புவனகிரிக்கு ராகவேந்திரர் வந்ததை விவரித்து நாம் எழுதிய புவனகிரி பள்ளி பதிவு, பெங்களூரூர் வாழ் மாத்வா நண்பர்கள் குழுவிலிருந்து எனக்கே பகிரப்பட்டதும் நடந்தது.

பள்ளி நண்பர்களுக்காக நாம் எழுதிய இந்த தொடர், மற்றவர்களை விட எனக்கே நிறைய அனுபவங்களைத் தந்தது.  ஒவ்வொரு முறை எழுத அமரும் போதும் இருக்கும் இடத்தை மறந்து, புவனகிரியின் தெருக்களிலும் மனிதர்களோடும் புவனகிரி பள்ளியோடும் வெள்ளாற்றோடும் நினைவுகளில் இருந்தேன், திரிந்தேன். (இப்போது கூட சென்னையிலிருந்து மதுரை போகும் விமானத்தில் சீட் 14ஏவில் அமர்ந்து புவனகிரியை உள்ளூர நினைத்து எழுதிக் கொண்டுள்ளேன், தரையிறங்குவதற்குள் இதை முடித்து விட வேண்டும் என்ற முடிவோடு). உள்ளே பொதிந்திருந்த புவனகிரி நினைவுகள் உணர்வுகளோடு கலந்து எழுத்தில் வந்தன.

புவனகிரி பள்ளி பற்றி எழுதும் போது அனுபவித்து எழுதினேன், உங்களில் பலரும் சிலாகித்தீர்கள். நன்றி! ‘That which has begun will end’ என்கிறது ஆன்மீகத்தின் அடிப்படையான நிலையாமை விதி. தொடங்கிய தொடர் ஒரு நிலையில் முடியும்தானே!   இதோடு ‘புவனகிரி பள்ளி’ தொடர் நிறைவு பெறுகிறது.

இருபது வாரங்களாக தொடர்ந்து வாசித்த அனைவருக்கும், வாசித்த போது வந்த உணர்வுகளை வெளிப்படுத்திய சிலருக்கும், வெளிப்படுத்த வில்லையென்றாலும் தொடர்ந்து வாசித்த பலருக்கும்… நன்றி!

நடேச செட்டியார் வீடு, மகாலிங்கம் செட்டியார் வீடு இருந்த தெரு, தாமரைக் குளத் தெரு, ராமலிங்க சாமி மடமும் அதில் இருந்த நல்லதம்பி அவர்களும், சாந்தா டீச்சர், நக்கீரன் வாத்தியார், பள்ளியில் பெல் அடிக்கும் ஒன்றரை கண் பியூன், பள்ளிக்கு குடித்து விட்டு வரும் ஓர் ஆசிரியர், மதியம் சில நாடகளில் சாப்பிட போய் உட்காரும் பெருமாத்தூர் மாட்டு ஆஸ்பத்திரி, அடுத்த தெருவில் இருந்த அவல்பட்டறை, பாரதி ஆங்கிலப் பள்ளி, ஐயப்பன் கோவிலுக்கு அடுத்து இருந்த இந்தி டியூஷன் சென்டர், சிற்பி தியேட்டர், முருகன் டாக்கீஸ், சாயப்பட்டறை, சௌராஷ்டிரத் தெரு புருஷோத்தமன், என்டிசிக்கு கீழே இருந்த மாற்றுத்திறனாளியின் பெட்டிக்கடை, அவரை ஏமாற்றி கமர்கட்டு சாப்பிட்ட சிறுவர்கள், திமுகவிலிருந்து வைகோ வெளியேறிய போது புவனகிரியில் கட்சியினரிடையே கிளம்பிய கொந்தளிப்பும் பிளவும் என புவனகிரியைப் பற்றி எழுத பல சங்கதிகள் உள்ளேயே இருக்கின்றன, எழுதப்படாமலேயே போகின்றன. ‘எவ்வளவு எழுதி முடித்த பின்னும், எழுத இன்னும் இருக்கிறது!’ என்று தன் முன்னுரை ஒன்றில் எழுதியிருப்பார் ஜெயகாந்தன் என்பதை இங்கே நினைத்துக் கொள்கிறேன்.

புவனகிரியில் வாழும், புவனகிரியில் வாழ்ந்த – நம்முள்ளே புவனகிரி என்றும் வாழ்கிறது. புவனகிரி பள்ளியின்  வடிவம் எப்படி மாறினாலும் நம்முள்ளே அது அப்படியே இருக்கிறது, இருக்கும், உயிர் பிரிந்து சிவபுரம் போன பின்னும் என் நினைவுகளில் என்னோடு இப்போதும் எப்போதும் வாழும் என் தந்தை மு பச்சைமுத்துவைப் போல.

இப்போதைக்கு ‘புவனகிரி பள்ளி’ தொடரை முடித்துக் கொள்கிறோம். வேறொரு தளத்தில் வேறு வடிவத்தில் சந்திப்போம், தொடர்வோம் என்று நம்புகிறேன்.

(இதுவரை வந்த அனைத்தையும் ஒன்றாக்கி ஒரே ‘பிடிஎஃப்’பில் தர எண்ணம். அவகாசம் வேண்டும். அது வரை ParamanIn.com என்ற இணைய முகவரில் ‘புவனகிரி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி’ என்ற தலைப்பின் அடியில் ( https://www.paramanin.com/?cat=1703 )  அனைத்துக் கட்டுரைகளையும்  படித்துக் கொள்ளலாம்)

நன்றி!

இறையருள் பெருகட்டும்,
இன்பங்கள் கூடட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
(மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில்)
17.02.2022

[email protected]

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *