என்னது திருக்கோஷ்டியூரா…!

wp-16452038669085980429362768020932.jpg

பிள்ளையார்பட்டி கோவிலிலிருந்து வெளியே வந்து காரிலேறி ‘சிவனையும் பெருமாளையும் வணங்குவோர்க்கேயுள்ள திமிர்…’ என்ற முந்தைய பதிவை செல்லிடப் பேசியில் மூழ்கி எழுதி பதிவிட்டுவிட்டு நிமிர்கையில், ‘இறங்குங்க சார்!’ என்கிறார்கள்.

‘இது என்ன ஊரு?’

‘திருக்கோஷ்டியூர்?’

‘அடடா! ராமானுஜர் திருக்கோட்டியூர் நம்பியிடம் கத்துகிட்டாரே, அதை மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாரே… அந்த ஊரா?’

‘ஆமாம்!’

‘ரெண்டு நாள் முன்னால நியூஸ்பேப்பர்ல திருக்கோஷ்டியூர் தீர்த்தவாரின்னு படத்தோட செய்தி வந்ததே, அந்த ஊரு இங்கயா இருக்கு!’

‘ஆமாம் வாங்க பரமன் சார்!’

பெருங்கூட்டம், பெரிய கோவில். நடக்கிறேன். ‘திடீர்னு வந்து சர்ப்ரைஸா எறக்கிட்டாங்க! இங்க இருக்கற பெருமாள் பேரு கூட தெரியாதே நமக்கு!’ நடக்கிறேன்.

நீண்டு வளைந்து நெளிந்து நெளிந்து கம்பி வழிக்குள் காத்திருக்கும் நீண்ட வரிசை மக்கள்.

கோவிலின் நிர்வாகத் தலைமை அதிகாரியிடம் அறிமுகப் படுத்தப்படுகிறோம். எங்கள் மூவரையும் நேராக உள்ளே அழைத்துப் போகிறார். மதிய ஓய்வு சாயரட்சை முடித்து பெருமாள் எழும் போது, முதலில் எங்களை கொண்டு போய் நிறுத்துகிறார்கள்.

அடேயப்பா… பெரிய்ய கிடக்கும் பெருமாள். அழகான பெருமாள். தில்லை சித்ரகூடம் போலவே, திருவரங்கம் போலவே, கரிய பெருமாள், வெள்ளியில் அணிகலன்கள் அழகு செய்ய அருகில் தேவி அமர்ந்திருக்க கிடக்கும் பெருமாள். என் பின்னே இருவர், என் முன்னே சில அடி தூரத்தில் பெருமாள். எனக்கும் பெருமாளுக்கும் இடையில் எவருமில்லை.

திடுப்பென கண்ணில் நீர் திரள்கிறது. ‘உன்னைப் பாப்பேன்னு நான் நினைச்சுக்கூடப் பாக்கலியே. திருக்கோட்டியூர் என் பட்டியல்லயே இல்லையே! இப்படி என்னை இழுத்துட்டு வந்து முன்னால நிறுத்திட்டியே! இதுக்கு மேல நான் என்ன கேக்கறது!’

‘பெருமாள் கிடந்த கோலம். பாருங்கோ!’ என்கிறார் சேவை செய்யும் ஐயர், உள்ளே நுழைந்தபடியே.

நீண்ட பெருமாளை முழுதும் பார்க்க முடியவில்லை. வலது கடைசியில் தெரியும் பாதம் பார்க்க இடது பக்கம் தாவி ஓடுகிறேன். இடதில் இருக்கும் முகம் காண மறுபடியும் வலது பக்கமே நகர்கிறேன்.
‘எங்கிருந்தும் நிறைந்தோனே, எல்லை இலாதானே, எங்கேயும் எப்போதும் என் குலம் காப்பவனே!’

தாயார் சன்னதிக்கு அழைத்து வருகிறார்கள். வெளியேறும் போது சொல்கிறார்கள். ‘இதோ இந்த இடத்திற்குப் பின்புறம்தான் ராமானுஜர் மத்தவங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்!’

நடக்கிறேன்.

‘ஒரு குருநாதரே தன் சீடனை உயர்த்தி மதித்து போற்றி ‘பெருமானே!’ என்று சொல்லும் போது எப்படி இருந்திருக்கும்! திருகோஷ்டி நம்பியும், ராமானுஜரும் என்ன நிலையில் நின்றிருப்பார்கள்!’ நடக்கிறேன்.

கோவில் அதிகாரிக்கு நன்றி சொல்கிறோம். அறிமுகப்படுத்தப்பட்ட கோவில் சேவை செய்யும் ஒரு பட்டர் இளைஞன், ‘இங்கே பெருமாளுக்கு எல்லாக் காய்கறியும் போட்டு சமைத்து பிரசாதம் செய்வோம். ‘திருமால் சம்பா’ன்னு பேரு. உங்க வெஜ் பிரியாணி மாதிரி இருக்கும். இந்தோங்கோ!’

வாங்கிக் கொண்டு நடக்கிறோம்.

‘போன வாரம்தானே,ராமானுஜரைப் பத்தி வளர்ச்சியில எழுதனோம்! ராமானுஜர் இருந்த எடத்துக்கு வந்துட்டோம்!  ‘திருக்கோட்டியூர் என் லிஸ்ட்லயே இல்லையே! எதனால் இப்படி இழுத்து வரப்பட்டேன்!’

நடக்கிறேன்.

– பரமன் பச்சைமுத்து
திருக்கோட்டியூர்,
18.02.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *