உயரம் என்பது எதை வைத்து?

wp-1648197244922.jpg

உயரம் என்பது எதை வைத்து? மனித உடலின் அளவை வைத்தா, உள்ளிருக்கும் உள்ளத்தின் அளவை வைத்தா,  மனிதன் ஆற்றும் அளவை வைத்தா?

உடல் உயரம் கொண்டவர்கள் உயர்ந்தவர்களாக ஆகாமல் போகலாம், உயர்ந்த உன்னத மனிதர்கள் உடலளவில் உயரமாக இல்லாமலும் போகலாம். 

ஓடும் உசேன் போல்ட்டின் ஓட்ட வேகத்திற்கும் உடல் உயரத்திற்கும் சம்மந்தம் இருக்கலாம். கர்மவீரர் காமராஜுக்கும் கல்வியில் அவர் செய்த புரட்சிக்கும் என்ன சம்மந்தம்? நாலு பனை உயரத்திற்கு கற்றளி எடுத்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் உயர்ந்து நிற்கும் பேரரசன் ராஜராஜன் உருவத்தில் உயர்ந்தவனா, தெரியாது. கங்கை வரை, கடராம் வரை வென்ற பேரரசன் ராஜேந்திர சோழன் உருவ உயரம் என்னவென்று தெரியாது.  உயரம் குறைந்த சச்சின் டெண்டுல்கர் தன் ஆற்றலால் அடைந்த உயரம் அதிசயக்கத் தக்கது.

உடல் என்பது இந்தப் பிறவியில் சில பல காரியங்களை ஆற்றுவதற்காக கொடுக்கப்பட்ட ஒரு கருவி. கருவியின் நீள அகலத்தைக் கொண்டல்ல, கருவியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறோம் என்பதைப் பொறுத்தே கொள்கிறோம் உயரம், அடைகிறோம் உயரம்.

வாழ்க்கையைப் பொறுத்த வரை அமிதாப்பச்சன்களும் உயராலாம், சச்சின் டெண்டுல்கர்களும் உயரலாம்.  எவ்வளவு உயரமாக சிந்தித்தாலும், எப்போதும் போல அதற்கும் உயரே உச்சத்தில் சிந்தித்து எழுதி வைத்து விட்டுப் போய்விட்டான் உயர்ந்த வள்ளுவப் பேராசான். ‘மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு’ என்பது எத்தனை ஆழம், எத்தனை உயரம்! அடேயப்பா!

வாழ்வின் ஒரு வடிவச் சிக்கலே சில மனிதர்கள் அடையும் உயரம் வெளியில் தெரியும், சிலர் கொள்ளும் உயரம் வெற்றுக் கண்களுக்குத் தெரியாது என்பதுதான். நிறுவனத்தில் தொழிலில் பங்காற்றி அடையும் ஆண்மகனின் உயரம் கண்ணில் பட்டுவிடும். சிதறிப் போயிடலாம் என்ற நிலையில் இருந்த ஒரு குடும்பம் உயர்ந்திட தன் ஊணை உயிரை உருக்கி ஊற்றி அடியுரமாகத் தந்து உயர்த்திட்ட பெண்மணிகளின் உன்னதமும் உயரமும் வெற்றுக் கண்களுக்குத் தெரிவதேயில்லை.

இரும்பு எடைகள் தூக்கி உடற்பயிற்சி செய்பவனின் புடைத்து வெளி நிற்கும் மார்பும், தோள்களுமே கவனிக்கப் படுகின்றன, பாராட்டு பெறுகின்றன. இவை மொத்தமும் நடந்தேற காரணமான பின்னிருக்கும் முதுகெலும்பு எப்போதுமே கண்ணில் படுவதில்லை, கவனம் பெறுவதில்லை. முதுகெலும்புகள் அவற்றை சட்டை செய்வதேயில்லை. எப்போதும் போல தங்கள் பங்கை செய்து கொண்டேயிருக்கின்றன.

“வரப்புயர நீருயரும்
   நீருயர நெல் உயரும்
  நெல்லுயரக் குடி உயரும்
  குடி உயரக் கோல் உயரும்
கோல் உயரக் கோன் உயர்வான் “
                                            என்றாள்  ஔவை.  கோன், குடி எல்லாம் உயர முதற்காரணமான வரப்பாக நின்று வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். அவர்களின் பங்கு உயரமாக கொள்ளப்படட்டும். அந்த உயரங்கள் மதிக்கப்படட்டும்.

வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
மதுராந்தகம்
25.03.2022

#HomeMakers
#PillarsOfLife
#PillarsOfFamily
#Family
#Women
#UmaParthasarathy
#Akka
#Paraman
#ParamanPachaimuthu
#Height
#Uyaram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *