ஆர் ஆர் ஆர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

wp-1648475879805.jpg

1920களில் பிரித்தானிய ஆதிக்க இந்தியாவில், தன் லட்சியத்தை அடைவதற்காக காடு மலை ஆறு என பலதையும் கடந்து பயணித்து வந்த ஒரு மலைவாழ் பழங்குடி இன மனிதனும்,  தன் குடும்பமே சிதைந்து போய் விட ஊர் மக்களுக்கு வாக்குக் கொடுத்து விட்டு புறப்பட்ட தன் லட்சியத்தை அடைவதற்காக எந்த வழியிலும் பயணிக்கலாமென செயல்கள் புரியும் கோதாவரி ஆற்றுப் பிரதேச மனிதனும், தலைநகர் தில்லியில் சந்தித்து நட்பு கொள்ள, பிறகு அவரவர் உண்மை முகம் அடுத்தவருக்குத் தெரிய வரும் போது… ரணம், ரத்தம், ரௌத்திரம்! (ஆர் ஆர் ஆர்)

எதிரெதிர் புறத்தில் நிற்கும் இருவரும் தங்கள் லட்சியங்களை அடைந்தனரா, பெரும் சக்தியும் ஆதிக்க உள்ளமும் கொண்ட பிரித்தானிய ஆட்சியாளர்களோடு மோதி இதை அவர்களால் சாதிக்க முடிந்ததா என்பனவற்றை ஈர்க்கும் காட்சிப்படுத்துதல் மூலம் காதல் காட்சிகள், நகைச்சுவை என எதையும் சேர்க்காமல் மூன்று மணி நேரப் படமாகத் தந்து வெற்றி பெற்று விட்டார் இயக்குநர் ராஜமௌலி.

(ராமாயணத்தை அப்படியே வேறு திசையில்… ராமன் சிறை பட்டு கிடக்க, தவித்து துயரில் நிற்கும் சீதாவுக்கு வானாந்திர வாசியான பலசாலி அனுமன் (பீம்) வாக்கு கொடுத்து விட்டு, எதிரிகள் சூழ் பிரதேசத்தில் இறங்கி, மீட்டு தோளில் தூக்கி வந்து கொண்டு சேர்த்தால் எப்படி இருக்கும்… என்ற சிந்தனை படம் பார்க்கும் போது உங்களுக்கு வரலாம், குறிப்பாய் படத்தின் இறுதிக் காட்சிகளில். ராஜமௌலி இப்படி சிந்திருப்பார் என்றே தோன்றுகிறது)

ராம ராஜூவாக ராம் சரணும், பீமாக ராம ராவும் ( ஜூனியர் என்டிஆரும்) அவரவர் பாத்திரத்தில் அதகளப்படுத்துகிறார்கள். பிரித்தானிய கவர்னர், அவரது அதிகாரிகள் என அனைவரும்  அவரவர் பங்கை சரியாக செய்துள்ளனர்.  ‘பான் இண்டியா’ சந்தைக்காக அஜய் தேவ்கன், ஆலியா பட் போன்றோரும் உள்ளனர் (‘ஏம்ப்பா ஆலியா பட்டின் இந்த தோற்றத்துக்கு ஷ்ரேயாவா இன்னும் நல்லாருக்காங்கப்பா!’ என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை!)

அந்தக் காலத்து நீராவி எஞ்சின் புகை வண்டி, சண்டைக் காட்சிகள், காடு சம்மந்தப் பட்ட காட்சிகள், பிரிட்டிஷ் – மக்கள் மோதும் (உக்ரைனில் எடுக்கப்பட்ட) காட்சிகள் என படம் நெடுக கலை இயக்குநர், ஒளிப்பதிவாளர், தொழில் நுட்பக் கலைஞர்கள் போட்டி போட்டுக் கொண்டு தங்களை தந்திருக்கிறார்கள்.

பின்னணி இசை ஏனோ பாகுபலியையும், ‘லயன் கிங்’கையும் நினைவு படுத்திக்கொண்டே இருக்கிறது படம் நெடுக. அப்படித்தான் வேண்டுமென விரும்பியே வைத்தார்களோ என்னவோ!

சொந்தக் குரலில் அவர்களால் முடிந்த தமிழில் பேசுகிறார்கள் நாயகர்கள் இருவரும், பிரிட்டிஷ் அதிகாரிகள் ஆங்கிலத்திலேயே பேசுகிறார்கள் எல்லா இடங்களிலும் மொழியாக்கம் இல்லை என்பது ‘சி சென்டர்’ரில் பிரச்சினையாகலாம், இரண்டாம் பாதி படத்தை இன்னும் நெருக்கி எடுத்திருக்கலாம் போன்ற சில இருந்தாலும், மற்ற சங்கதிகளால் படம் வலுவாக நிற்கிறது.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ரணம் ரத்தம் ரௌத்திரம்’ – காட்சிப்படுத்தலில் பிரமாண்டம். பாருங்கள்.

– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

#RRRMovie
#RRRMOVIEREVIEW
#RRRreview
#RRRfilm
#Rajamouli
#ParamanFilmReview
#RamCharan
#JrNTR
#shreyasaran
#aliyabhatt
#Rrr

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *