‘மன்மதலீலை’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

பெண்கள், பெண்கள் என எதிர்பாலினத்தின் மீது ஆசை கொண்டு திரியும் அதே நேரம் வாழ்வில் கனவுகளோடு வளரும் ஒரு பருவ வயது இளைஞனின் வாழ்வில் பத்தாண்டுகளில் நிகழும் சம்பவங்களை மையமாக வைத்து பின்னப்பட்ட களத்தை எடுத்துக் கொண்டு முதல் பாதியில் ‘அடல்ட்ஸ் ஒன்லி’யை தடவி, இரண்டாம் பாதியில் த்ரில்லர் மிளகாய் பொடி தூவி வெங்கட் பிரபு சமைத்திருக்கும் ‘க்விக்கி’யே ‘மன்மதலீலை’

‘ஏ’ படம் ‘மன்மத லீலை’ என்று பெயர் வைத்து, எல்லோருக்குமானதல்ல, குடும்ப கூட்டம் நிச்சயம் வராது, குறிப்பிட்ட வட்டத்திற்கான படம் என்றெல்லாம் முடிவு செய்தே படத்தை தந்திருக்கிறார் இயக்குநர்.

படத்தை பற்றி கலவையான விமர்சனங்கள் வரவே செய்யும்.
முதல் பாதி மிக மிக மெதுவாகவே போவது, இரண்டாம் பாதியின் விறுவிறுப்புகளுக்காக விரும்பியே பின்னப்பட்டது போல.

பருவ வயது பையனாக, கெஞ்சுபவனாக, தொழில் முனைவோனாக, பிரச்சினைகளின் போது மிஞ்சுபவனாக என அசோக் செல்வன் படம் முழுக்க இயக்குநரின் நடிகராக மிளிர்கிறார், குறிப்பாய் தான் மாட்டியதாக உணரும் இடங்களில். மொத்த படத்திலும் நிறைந்து நிற்கிறார்.

விரசங்கள் அதிகமில்லை என்றாலும் இது வயது வந்தோருக்கான திரில்லர் படம். ஓடிடிக்கு வரும் வரையில் காத்திருந்தாலும் தப்பில்லை.

‘புகைப்பிடித்தல், மது அருந்துதல் உடல் நலத்திற்குக் கேடு’ என்ற எச்சரிக்கை வாசகம் கீழே இடது புறம் கிட்டத்தட்ட படம் முழுக்க வந்து கொண்டேயிருக்கும் அளவிற்கு படம் நெடுக புகைப்பதோ குடிப்பதோ இருந்து கொண்டேயிருக்கிறது.

வித்தியாச பரிசோதனைகள் செய்து கொண்டே இருக்கும் வெங்கட்பிரபு தந்திருக்கும் ‘க்குவிக்கி’ இது. அவரது ரசிகர்கள் விரும்புவார்கள்.

‘மன்மதலீலை’ – பார்க்க வில்லையென்றாலும் தவறில்லை. குடும்பத்தோடு குழந்தைகளோடு பார்க்கும் படமல்ல.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *