காவல்துறை நண்பன்

‘காவல்துறை உங்கள் நண்பன்’ என்பார்கள், காவல்துறையில் நண்பர்களும் உண்டு என் நண்பர்களில் சிலர் காவல்துறையிலும் உண்டு.

திரைப்படங்களில் மிகையாக காட்டப்படுவது போல உண்மை உலகில் காவலர்கள் எப்போதும் இல்லை என்பது நமக்கே தெரியும். ‘ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்ரா… பாக்கறியா… பாக்கறியா?’ என்று கத்துகிற காவலர் நிசத்தில் இருக்க மாட்டார்தான்.
‘மூன்று முகம் – அலெக்ஸ்பாண்டியன்’ ‘விக்ரமார்குடு – விக்ரம் ராத்தோட்’ (தமிழில் ‘சிறுத்தை – ரத்னவேல் பாண்டியன்’), ‘சாமி – ஆறிச்சாமி’, ‘சிங்கம் – துரை சிங்கம்’, அந்நாளைய விஜய்காந்த் படங்கள், சிவாஜியின் ‘தங்கப் பதக்கம்’ கதாநாயக வார்ப்புகள் எந்த காவல்நிலையத்திலும் இருக்க மாட்டார்கள். ஆனால், ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் நாயகன் பாத்திரத்தைப் போல, தனக்குப் பிடித்தது பிடிக்காதது என்பதைத் தாண்டி உயரதிகாரிகளின் கட்டளைக்காக களத்தில் இறங்கி அடிபட்டு ரத்தம் சிந்தும் காவலர்களை அடிக்கடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். உலகமே அஞ்சி ஒடுங்கிய முதல் அலை பொதுமுடக்கத்தின் போது, கொரோனா தீ நுண்மி தொற்றும் என்று தெரிந்தும், மக்களின் உயிர்காக்க வேண்டும் என்று தங்களைத் தந்து கொரோனா வார்டுக்குள் போன மருத்துவர்களைப் போலவே, வெடிக்கும் வன்முறைப் போராட்டங்களில் வெறும் லத்தியை எடுத்துக் கொண்டு இறங்கும் காவலர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம் பல ஆண்டுகளாக.

போராட்டங்களின் போதும், வெடிக்கும் வன்முறைகளின் போதும் முதலில் அடிபட்டு பாதிக்கப்படுவது காவலர்கள்தான் பல இடங்களில். எந்த மாநிலத்திலும் எந்த நாட்டிலும் அரசை நோக்கி கிளர்ச்சியும் போராட்டமும் செய்யும் தொண்டர்களை சட்டத்திற்கு உட்பட்டு கட்டுப்படுத்த வரும் காவலர்கள் எதிரிகளாக பார்க்கப்படுகின்றனர் பல நேரங்களில் பலரால். ஆள் மாற்றி தவறுதலாக ஒரு காவலரை எரித்துக் கொன்று விட்ட சம்பவமும் உண்டு, அந்த நிகழ்வை வைத்து ‘சேதுபதி’ என்ற பெயரில் விஜய் சேதுபதி நடிப்பில் திரைப்படமும் எடுக்கப்பட்டதுண்டு. தவறுதலாக எரிக்கப்பட்ட அந்த காவலரின் குடும்பம் என்னானதோ!

பணியில் விடுப்பே கிடையாது (தற்போதுதான் சுழற்சி முறையில் விடுப்பு என்பது வந்திருக்கிறது!), எந்நேரமும் செல்லிடப்பேசி அணைக்கப்படாமல் தயாராக இருக்க வேண்டும், என்ன ஆனாலும் மேலதிகாரிகள் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டும், குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளின் போதும் பணி வந்தால் பறக்க வேண்டும், எந்நேரமும் குற்றவாளிகளை எதிர்கொள்ள வேண்டும் என சவால்கள் கொண்டது காவலர்கள் வாழ்க்கை.

‘எப்பா போதும்ப்பா! குடும்பத்துல ஒரு போலீஸு போதும்ப்பா! பிள்ளைங்களாவது நிம்மதியான வாழ்க்கை வாழட்டும்!’ என்று ‘தெறி’ படத்து நாயகியின் தந்தை சொல்வது போல, காவலர்களின் குடும்பத்தில் சிலர் சொல்வதை என் காதுகளாலேயே கேட்டிருக்கிறேன்.

‘ஆயுதப்படை காவலர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்தார்!’ என்று அவ்வப்போது வரும் செய்திகள் காட்டுகின்றன காவலர்கள் கொண்டிருக்கும் மன அழுத்தங்களை.

‘அம்பானி வீட்டருகே நின்ற காரில் வெடிகுண்டு, தொடர்பு ஒரு காவலர்’ ‘லஞ்சம் வாங்கிய காவலரை கையும் களவுமாக பிடித்தனர்’ போல செய்திகள் எப்போதும் உண்டுதான். அங்கொன்றும் இங்கொன்றுமாய் கட்சி விசுவாச காவலர்கள் இருக்கலாம், ஆட்சி மாறும் போது உயர்ச்சி தாழ்ச்சி கொள்ளலாம். ஆனால், சரியான நேர்மையான அதிகாரிகள் ஆயிரக்கணக்கணக்கில் உண்டு காவல்துறையில். சென்னைப் பெருநகர் மொத்தத்தையும் மூன்றாம் கண் எனும் சிசிடிவிகளால் நிறைத்து, குற்றங்கள் மொத்தமாய்க் குறைய காரணமான செயல்களை நிறைவேற்றிய காவல்துறை ஆணையரைப் போல, பல நாட்களாய் அலைய விட்ட பதுங்கியே இருந்த குற்றவாளியை நேற்று அந்தமானில் போய் பிடித்து வந்த காவல்துறை அதிகாரிகளைப் போல எதிர்காலத்தை எளிதாக்கும் அதிகாரிகள் ஆயிரக் கணக்கணக்கில் உண்டு. அவர்களால்தான் நிம்மதியாய் வாழ்கிறது உலகத்து மக்களினம். அத்தகைய காவல்துறை அதிகாரிகளுக்கு… மலர்ச்சி வணக்கம்!

சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் (ஏடிஜிபி) அவர்களோடு அளவளாவும் வாய்ப்பை வாழ்க்கை தந்தது இன்று எனக்கு.

மரியாதை நிமித்தமான சில விசாரிப்புகளுக்குப் பிறகு, ஏடிஜிபியிடம் நான் கேட்ட கேள்வி இது.

‘முப்பது நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக, இருபத்தி நான்கு மணி நேரமும்… திருட்டு, மோசடி, ஏமாற்று, குற்றவாளி, சம்பவம் என்றே பார்த்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது சார்?’

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    06.04.2022

police

policeofficer

policechallenge

Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *