‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட்விச்!’

wp-1650609481779.jpg

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’

கருநீல இறுக்கமான உடையணிந்து, சாயாலி என பெயர் பொறித்த பட்டையை மார்பில் அணிந்திருந்த,  கண்ணிமையில் சிவப்பு வண்ணம் பூசியிருந்த விமான பணிப்பெண் சற்று அதிகமான சத்தத்திலேயே கூவினாள். 

தூங்கத் தொடங்கிய நான் அதிர்ந்து கலைந்து எழுந்தேன். கவிஞர் வைரமுத்து கழுத்து இறங்க தூங்கிக் கொண்டிருந்தார். அவருக்கு நேராய் பின் இருக்கையில் இருக்கும் இளைஞனைத்தான் வறுத்தாள் அந்த விமான பணிப்பெண்.

முதல் வரிசை பிசினஸ் க்ளாஸ். அதில் வைரமுத்து சார். இரண்டாம் வரிசையின் இடப்புற சன்னலருகில் நான். அதே வரிசையின் வலப்புற சன்னலருகில் அந்த இளைஞன்.

‘எக்ஸ்க்யூஸ் மீ… யூ ஆர் பிகேவிங் ஃபன்னி!’

அவன் அதிர்ந்து நிமிர்ந்தான். எல்லோரது பார்வையும் அவன் மீது.
‘யூ நீட் டு வியர் த மாஸ்க் ப்ராப்பர்லி. வொய் ஆர் யு நாட் புட்டிங் இட் ஆன்?’

எதிர்பார்க்கவில்லை போலும் அவன் இதை. ஏசியிலும் வியர்த்தது அவனுக்கு. ‘ஆங்… ஆங்… ஐ ஆம் நாட் கம்ஃபர்ட்டபிள் வியரிங் இட்’

‘(சினத்தோடு ஆங்கிலத்தில் கத்தினாள் சிவப்பு இமைச் சாயக்காரி) ‘ஹலோ… உங்களுக்கு கம்ஃபர்ட்டபிளா இருக்கா இல்லையான்னு பார்க்கறது இல்ல. மத்தவங்களோட பாதுகாப்பு முக்கியம். யாருக்கும் எந்த இன்ஃபெக்‌ஷனும் ஆகிடக்கூடாது. மாஸ்க் போடனும், இறக்கக் கூடாது, கொஞ்சம் கூட கீழ இறக்கக் கூடாது  மாஸ்க் கம்பள்சரி!’

எல்லோரது பார்வையும் அவன் மீது. தாவாங்கட்டையிலிருந்து ‘படக்’கென்று சுவாசக்கவசத்தை இழுத்து மூக்கின் மீது விட்டு மூடினான் அவன்.    சாயாலி மறுபடியும் பைலட்டுக்கு பின்பக்கம் நின்று இந்தியிலும் ஆங்கிலத்திலும் ‘ரக்‌ஷா ஜாக்கெட்… ரக்‌ஷா ஜாக்கெட்’ என்று ஏதோ சொன்னாள். (தலை கலையாமல் பாதுகாப்பு ஜாக்கெட்டை அணிந்து அவிழ்த்து காட்டினாள்!)

நேற்றைய பயணம், இரவு தூங்க நேரமானது, இன்று அதிகாலை வெகுசீக்கிரம் எழுந்தது என காரணங்கள் அழுத்த நான் விமானம் கிளம்பியெழும் முன்னேயே உறங்கிப் போனேன்.

‘ஸ்ரேயா சரணா உர்சுலா ஆண்ட்ரஸா என்று அடையாளம் காணமுடியவில்லை. இரண்டும் கலந்த கலவையான ஓர் அழகிய இளம்பெண்ணோடு எங்கோ நடக்கிறேன். 

ஸ்ரேயா சரண் நெருங்கி வந்து அழைக்கிறார்.

‘வாஜி வாஜி பாட்டுல ஸ்விம்மிங் பூல்ல பேக் ஸ்ட்ரோக் அடிச்சீங்களே, அப்பதான் தெரிந்தது நீங்க சூப்பர் ஸ்விம்மர்ன்னு. அப்புறம் உங்க ஸ்கூபா டைவிங் பற்றி படிச்சேன்!’ என்பதை எல்லாம் சொல்லவேண்டும் ஸ்ரேயாவிடம் என தயாராகிறேன். அவர் அழைக்கிறார்.

‘மிஸ்டர் பச்சைமுத்து…’

‘பச்சைமுத்து என் அப்பா. நான் பரமன்… பரமன் பச்சைமுத்து!’

‘மிஸ்டர் பச்சைமுத்தூ.. மிஸ்டர் பச்சைமுத்தூ.. ‘

அதிர்ந்து விழிக்கிறேன்.

‘மிஸ்டர் பச்சைமுத்தூ.. மிஸ்டர் பச்சைமுத்தூ.. ‘   விமானப் பணிப் பெண் சாயாலி.

‘அது கனவா!? ஸ்ரேயா இல்லியா, கூப்டது இந்த பஜாரிதானா! ச்சே!’

‘மிஸ்டர் பச்சைமுத்தூ… பன்னீர் டிக்கா சாண்ட்விச் ஹேஸ் பீன் ஆர்டர்டு ஃபார் யு!’

‘என் தூக்கத்தை ஏம்மா கலைச்சே?’

‘மிஸ்டர் பச்சைமுத்தூ… வாட் பேவரேஜ் டூ யு வாண்ட்?’

‘என் தூக்கத்தை ஏம்மா கலைச்சே! யு ஹேவ் எனித்திங் ஹாட்? ட்டீ!’

‘எஸ்… மசாலா டீ!’

‘டீ ஓக்கே! ஐ டோன்ட் வாண்ட் திஸ் பன்னீர் சாண்ட்விச்!’ (எடப்பாடி மாதிரியே, எனக்கும் பன்னீர் வேண்டாம்!)

முகம் வெளிறி,
‘சார்… யு கீப் இட் வித் யு, ஹேவ் இட் லேட்டர்!’ என்று கூறி விட்டு வலப்பக்க இருக்கைகளுக்குப் போய் விட்டாள் (திருப்பி குடுத்தா ஏன் அலறி ஓடறா இவ!)

வைரமுத்து சாரின் பின்சீட்டில் அமர்ந்திருக்கும் மாஸ்க் அணியாததால் பொதுவெளியில் திட்டப்பட்ட அந்த இளைஞனிடம்தான் போகிறாள்.
‘சார்… ஃபார் யு சிக்கன் சாண்ட்விச்’

அந்த இளைஞன் முகக்கவசத்தை இறக்கி தாடைக்குக் கீழே வெளிர்நீல தாடிபோல வைத்து விட்டு அவளிடம் பேசுகிறான். அவளும் குனிந்து அவனிடம் பேசுகிறாள், ‘வாட் பேவரேஜ் யு வாண்ட்!’

அடிப்பாவி… இதே மூடிய விமானத்தில், முப்பது நிமிடங்களுக்கு முன்பு, சுவாசக்கவசத்தை இறக்கி விட்டதற்காக அவனை, ‘ஹலோ… மத்தவங்களோட பாதுகாப்பு முக்கியம். யாருக்கும் எந்த இன்ஃபெக்‌ஷனும் ஆகிடக்கூடாது. மாஸ்க் போடனும், இறக்கக் கூடாது, மாஸ்க் கம்பள்சரி!’ என்று கோபமாக கூவியவள், அவன் சுவாசக்கவசத்தை இறக்கி விட்டு உண்ணவும் பருகவும் உணவு தருகிறாள் இப்போது.

சுவாசக்கவசம் கட்டாயம் என்று அறிவிப்பு செய்யப்படும் நேரத்தில் அது அணியப்படவேண்டும். அவ்வளவுதான். அதன் பிறகு இறக்கினால் பரவாயில்லை! தின்னலாம், குடிக்கலாம்!
யார் உண்மையில் ‘ஃபன்னி?’

முன் சீட்டில் வைரமுத்து சாரை பார்க்கிறேன். வறுகடலையையோ முந்திரியையோ கொறித்துக் கொண்டிருக்கிறார். இவனும் அவ்வளவு பெரிய இரட்டை அளவு சாண்ட்விச்சை ஒரே கடியில் கடிக்க வாயை பெரிதாக திறக்கிறான். சுவாசக்கவசம் இல்லை.

நான் என் தேநீரை எடுத்து ஒரு மிடறு குடிக்கிறேன்.

‘சார்… சிக்கன் சாண்ட்விச் ஃபார் யு!’

பின் பக்கம் ஏதோவொரு இருக்கையில் யாரிடமோ சொல்லிக் கொண்டிருக்கிறாள் சாயாலி.

என் முன்னே அப்படியே இருக்கிறது எனக்கு வேண்டாத, வீணாக்க விரும்பாத பன்னீர் டிக்கா சாண்ட் விச்.

‘யாருக்கு வேண்டும் பன்னீர் டிக்கா சாண்ட் விச்?’

– பரமன் பச்சைமுத்து
இண்டிகோ கோவை விமானத்தில்
22.04.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *