‘பரமன், உங்க அப்பா பேர்ல இருக்கற அறக்கட்டளையிலேருந்து மாதாமாதம் அன்னதானம் பண்றே. அத எதுக்கு ஃபோட்டோ எடுத்து போடறே?’

‘பாரு பரமன், செய்யற உதவி வெளிய தெரியாம பண்ணனும். இல்லன்னா புண்ணியம் கெடையாது’

ஒவ்வொரு மாதமும் பலரும் எனக்கு சொல்பவை இவை. எந்த பதிலும் சொல்வதில்லை நான்.

27.04.2022

சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள், கர்நாடக பெங்களூருவின் மாகடி ரோடு, தபிழகத்தின் திருப்பூர், கல்பாக்கம், விருத்தாசலம், நாகை என நாட்டின் பல இடங்களிலிருந்த  வந்திருக்கும் குழந்தைகள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தாயோடோ அக்காவோடோ வந்துள்ள பிள்ளைகள்.

அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை, அதன் பின்னே தொடர் கதிரிய சிகிச்சை, தொடர்ந்து உட்கொள்ள வேண்டிய அதிவிலை மாத்திரைகள், மருந்துகள் என இவ்வளவையும் செய்து உயிரைக் காக்க பணமும் சக்தியும் இன்றி புதுவை ஜிப்மருக்கு வந்தவர்கள் இவர்கள்.  (இதற்காகவே ஜிப்மரை எழுந்து நின்று வணங்க வேண்டும். நாட்டின் அதிநவீன உயர் சிகிச்சை,உயர் நவீன கருவிகள், சிறந்த மருத்துவர்கள், கட்டணம் ஏதும் இல்லை!)

ஜிப்மரில் மருத்துவமும் மருந்தும் கட்டணமின்றி இலவசமாக கிடைக்கும். ஆனால் வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் இவர்கள் எங்கே தங்குவது, உணவிற்கு வழி?

இப்படி வெளியூரிலிருந்து வந்து புற்றுநோய் சிகிச்சை பெறும் பிள்ளைகளுக்காகவே, இலவசமாக தங்கி உணவுண்டு போக ஒரு மையத்தை நடத்துகிறார்கள் சில நல்ல மனிதர்கள், ‘ஜாய் அண்ட் லைட் ஷைன் சில்ட்ரன் கேர்’ என்ற பெயரில்.

‘பரமன், இன்னிக்கு என்னோட பிறந்த நாள். நீங்க உங்கப்பா பேர்ல பண்றீங்களே, அது மாதிரி எனக்கு உணவு கொடுக்கனும்ன்னு ஆசையா இருக்கு. நீ்ங்க வர்றீங்களா ப்ளீஸ்?  மலர்ச்சியாலதான் இவ்ளோ மாறிருக்கு என் லைஃப், இதையும் உங்க கையாள குடுப்பீங்களா? ப்ளீஸ்?’ என்று என் விடுதியின் அறைக்கதவை அதிகாலையில் தட்டினார் மலர்ச்சி மாணவி கஜலட்சுமி.

செய்வோம்தானே! 

இதையும் படமெடுத்து பகிரவே செய்வேன். புண்ணியம் பாவம் எல்லாம் ஒரு புறமிருக்கட்டும். இந்த செயல்கள் இன்னும் சிலரை ஊக்கப்படுத்தி, இல்லாதவர்களுக்கு உணவு அளிக்க எழ வைத்ததென்றால், அதன் வழியே சில வயிறுகள் நிறைந்ததென்றால்… என் நோக்கம் நிறைவேறியது.

வாழ்க! வளர்க!

பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி
27.04.2022

 
#Jipmer
#JalChildrenCare
#MalarchiPuducherry
#ParamanTouring
#Gajalakshmi
#CancerTreatment

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *