தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை

wp-1653388447065.jpg

ஆர்பி சௌத்ரி வீட்டுக்கு எதிர் வீட்டில் தி.நகரின் சவுத் வெஸ்ட் போக் ரோட்டில் நாங்கள் பேச்சுலர்களாகத் தங்கி வேலை பார்த்துக் கொண்டிருந்தோம். மைக்ரோசாஃப்ட் பெரிதாக வளராத அந்த நேரத்தில்  ஹார்டுவேர் சர்வீஸ் அண்ட் நாவல் நெட்வொர்க்கிங் என்று சில்வர் வண்ண டிவிஎஸ் சாம்ப்பில் திரிந்து கொண்டிருந்த நான் (பெட்ரோல் லிட்டர் 18.50/- என்பது நினைவு), ஆர்பி சௌத்ரியின் சிறு மகன் ‘அமர்’ எப்போதாவது கிரிக்கெட் விளையாட விரும்பிய போது, அவனுக்கு நோகாமல் பந்து வீசி விளையாடவிட்டு மகிழ்விப்பேன். அதனாலும் கூட அவனது தாயாருக்கு என்னை கூடுதலாகப் பிடித்திருக்கலாம்.  மணக்குடி, சிதம்பரம், மயிலாடுதுறை என்று ஊறியிருந்த எனக்கு, ‘மெட்ராஸ்’ கூச்சத்தையும் திகைப்பையும் தந்து கொண்டிருந்த பொழுதுகள் அவை என்பதாலோ என்னவோ, தினமும் பார்த்தாலும் பேசியதே இல்லை அவரிடம். எதிர்வீடு என்பதைத் தாண்டி ‘இளம் பிள்ளைகள் ஏதோ வேலை செய்கிறார்கள்!’ என்று ஒரு பரிவு கொண்டிருந்திருப்பாரோ என்னவோ. 

திடீரென்று ஒரு நாள் எங்களது கேட்டை தட்டினார்கள்.  வெளியில் வந்தேன். ‘இது சாரோட அடுத்த பட கேசட், கேசட் ரிலீஸ் இன்னும் ஆகலை, உனக்கு குடுக்கனும்னு நெனைச்சேன்!’ என்று கொடுத்து விட்டு திரும்பப் போய்விட்டார்கள். என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘நன்றிங்க!’ என்று சொன்னது இன்னும் நினைவில் நிற்கிறது.

உள்ளே ஓடி வந்து, டேப்ரெக்கார்டில் அலறிக்கொண்டிருந்த ‘வீரா’, ‘திருடா திருடா’ படங்களின் பாடல் கேசட்டை உருவி வெளியில் எடுத்துவிட்டு, அவர் தந்த கேசட்டை பிரித்து டேப் ப்ளேயரின் உள்ளே தள்ளி ஒலிக்க விட்டேன்.

‘சச்சன்சன் சச்சன்சன் சஜஜேன்…
சச்சன்சன் சச்சன்சன் சஜஜேன்…’

ஒலித்தது, வித்தியாசமாக முதல் பாடல். 

‘ஐ! வித்தியாசமா இருக்கே!’ என்று முணகிய போது தொடர்ந்த பாடலில் பெண் குரல் ஒலித்தது

‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை!
தங்கத்தை காதலிக்கும் பெண்களா இல்லை?’

அந்தக் குரலும், அந்த இசையும், சரணத்திற்கும் பல்லவிக்கும் நடுவில் வரும் இசையும், இரண்டு சரணங்களுக்கிடையே வரும் இசையும் என எனக்கு ‘குபீர்’ அனுபவங்கள் தந்தது அந்தப் பாடல். ‘ரோமியோ ஆட்டம் போட்டால்’ ‘மெல்லிசையே…’ ‘முத்து முத்து மழை’ ‘மோனாலிசா’ என மற்ற பாடல்களைக் கேட்டாலும், ‘தண்ணீரைக் காதலிக்கும்…’ திரும்ப திரும்ப கேட்கும் பாடலானது.

அந்தப் பாடகியின் குரலும், பாடலின் இசையும், நடுவில் வரும் இசைத்துண்டுகளும் எப்போதும் மண்டைக்குள் ஓடுமளவிற்கு பிடித்துப் போயின அவ்வயதில்.  என்னைப் போலவே கலாநிதி மாறனுக்கும் பிடித்திருக்கும் போல,  இந்தப் பாடலின் இடையில் ‘டட்டட்டாட டட்டட்டாட’ என்று வரும் துண்டை வெட்டி சன் செய்திகளில் வரும் ‘வானிலை’ பகுதிக்கு பயன்படுத்தினார்கள் அப்போது.
(ரபி பெர்னாடு அப்போது சன் டிவியில் இருந்தார், வெளியில் வந்து ‘நிலா டிவி’ தொடங்க வில்லை. ஜெயா டிவி இல்லை, அதற்கு முந்தைய டிவியான ஜெஜெ டிவி இருந்தது)

‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை! சொய்ன்..சொய்ன்…’  பாடல், இசை பற்றிய ரசனைகள் இன்று மாறிப் போன பின்னும், இப்போது கேட்டாலும் இனிக்கிறது இந்தப் பாடல்.

நேற்று காலைச் செய்தித்தாளை பார்த்ததிலிருந்து அந்த ‘ஆர்பி சௌத்ரி – ஆண்ட்டி’, சிறுவன் ‘அமர்’, அவர் தந்த கேசட், இந்த ‘தண்ணீரைக் காதலிக்கும் மீன்களா இல்லை’ பாடல் எல்லாம் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன என் திரையில்.

இருபத்தியாறு ஆண்டுகள் ஓடிவிட்டன. திருமணமாகி, குழந்தைகள் பெற்று, பல ஊர் சுற்றி, சென்னைக்கே வந்து விட்டேன். இப்போது அந்த ஆண்ட்டி எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. அமர் இப்போது வளர்ந்து விட்டான். விஜய்யின் ‘நண்பன்’ படத்தில் அவனைப் பார்த்தேன், நடிப்பைக் கண்டு ரசித்து மகிழ்ந்தேன். தமிழ் திரைப்பட உலகில் அவனுக்கு ‘ஜீவா’ என்று பெயர்.

அந்தப் பாடலைப் பாடியிருந்த சங்கீதா சஜித் நேற்று முன்தினம் இயற்கை எய்தினார்!

போய் வாருங்கள் சங்கீதா சஜித், ‘தண்ணீரைக் காதலிக்கும்’ பாடலில் உங்கள் குரலும், என்னுள் அது தந்த அனுபவமும்… இன்னும் உயிர்ப்புடன்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
24.05.2022

#SangeethaSajith
#ARRahman
#MrRomeo
#Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *