வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு…

wp-16545851418324918622564134180898.jpg

வகுப்பென்பது வெறும் வகுப்பல்ல எனக்கு. மாணவர்களும் ஆசிரியனும் சேர்ந்து ஒருமித்து ஒருமுகப்பட்டு தங்களை தரும் தருணங்கள் அவை. ‘எந்திரன்’ படத்தில் சிட்டி ரோபோ செய்யும் ‘ஸிக்பி ப்ரோட்டோகால்’லையெல்லாம் கடந்தவொரு கடத்தும் பரிமாற்றம் அது. தேடல் உள்ள உள்ளத்திற்குள் மேலும் தூண்டல் உருவாக்கி தீண்டல் இல்லாமல் உள்ளே ஊற்றப்படும் ஒட்பம் அது. அதுவும் தன் மடியில் வந்தமரும் பிள்ளைகளுக்கு உள்ளம் தாண்டி நாடி, நரம்பு, ரத்தம், தசை, டிஎன்ஏ என உயிர் வரை உள்ளே செலுத்தி ஊட்டி விடும் தாய் மலர்ச்சி.

வகுப்பென்பது ஒரு வேள்வி, மலர்ச்சி ஆசிரியனும் மலர்ச்சி மாணவர்களும் சேர்ந்து ஒருமித்து தங்களையே தந்து நிகழ்வில் உறைந்து கரைந்து கிடக்கும் வேள்வி.

எந்த சொல், எந்த சொற்றொடர், எந்த அசைவு, எந்த உடல் மொழி, எவருக்கானது, எது எவரைத் துளைத்து உட்செல்லும், எது எவருக்குள் விதைக்கப்படும் என்பது எவருக்கும் தெரியாது. ஆனால், மலர்ச்சி வகுப்பில் ஏதோவொன்று உள்ளே விதையாய் விழும், பின்பு அது வளர்ந்து எழும் என்பது மட்டும் எல்லா மலர்ச்சி மாணவர்களுக்கும் தெரியும். விழுந்தது உடனடி மாற்றமும் தரலாம், வேர் விட்டு மெதுவாய் வளர்ந்து தருவாகவும் உயரலாம்.

ஒவ்வொரு மலர்ச்சி வகுப்புமே ஒவ்வொரு வகையில் தனித்தன்மை வாய்ந்ததுதான். மலர்ச்சியின் அமர்வுகள், கூடங்கள் எல்லாமே சிறப்பானவைதான் என்றாலும்,
மலர்ச்சிக்குள் அடைகாக்கப்பட்டு வைத்து வளர்க்கப்பட்டு வெளியில் விடப்பட்ட மலரவர்கள் திரும்ப தேடிக் கூடும் ‘வளர்ச்சிப் பாதை’ கூடுதல் சிறப்பானது. ‘தேடல் கொண்டு வரும் போது, வேண்டி வருவதை எப்போதும் தந்து விடும் வளர்ச்சிப் பாதை!’ என்று வழக்கமாக திண்ணமாக மலரவர்கள் சொல்வதை எப்போதும் நிறைவேற்றிவிடும் வளர்ச்சிப் பாதை, இறைவனின் அருள் கொண்டு.

தொடர்ந்து வளர்ச்சிப் பாதைகளுக்கு வரும் மலரவன் சொடை போவதேயில்லை, அவன் / அவள் சோபிப்பதும் ஒளிர்வதும் வளர்வதும் நிச்சயம். வாழ்வில், வாழும் விதத்தில், செயல்பாடுகளில், கூட்டத்தில் அவர்கள் தனியாகத் தெரிவார்கள். மிளிர்வார்கள்.

சிலருக்கு வளர்ச்சிப் பாதை ஒரு செறிந்த ஊட்டச்சத்து, சிலருக்கு அது உயிர் மூச்சு, சிலருக்கு உயிர் சக்தி ஊற்றுமிடம். அவரவர் தேடலுக்கு, அவரவர் நிலைகளுக்கு ஏற்ப அள்ளித் தரும் வளர்ச்சிப் பாதை. அதனால்தான் ஒன்றரை மணி நேர வளர்ச்சிப் பாதைக்காகவும் அதைத் தொடர்ந்து கிடைக்கும் ஆழ் தவநிலை கிடத்தலுக்காகவும், பொள்ளாச்சியிலிருந்தும், மயிலாடுதுறையிலிருந்தும், நாகர்கோவிலிலிருந்தும், தர்மபுரியிலிருந்தும், புதுச்சேரி, அரக்கோணம், காஞ்சியிலிருந்தும் பல மணி நேரங்கள் பயணித்து வருகிறார்கள் மலர்ச்சி மாணவர்கள் பலர்.

ஆசிரியனும் மாணவர்களும் கொண்ட மலர்ச்சி குடும்பத்தில் வளர்ச்சிப் பாதை என்பது ‘மிராக்கிள்’, மாயங்கள் செய்யும் கூடம்.

நேற்று புதுச்சேரியில் லீ ராயல் பார்க்கில் நடந்த வளர்ச்சிப் பாதை எப்போதும் போல வாரித் தந்தது வளர்ச்சியையும், ஆழ் அனுபவங்களையும். ‘இதே மலர்ச்சி மகா முத்ரா, வீட்ல தெனம் பண்றோம்! ஆனா, ஆசிரியர் கூட பண்ணும் போது வேறயா வேற லெவல்ல இருக்குதே பரமன்?’ என்றார் புதுச்சேரி மலரவள் ஒருவர். என்ன பதில் சொல்வது, எதைச் சொன்னாலும் அதை விளக்கி விட முடியுமா, என்ன?

‘நேற்று நிகழ்ந்த வளர்ச்சிப்பாதை இன்னும் ஓடுகிறது மண்டைக்குள்!’ என்று அழைத்துச் சொன்னார் புதுச்சேரி மாணவர் ஒருவர். அதற்குத்தானே வளர்ச்சிப் பாதை! உள்ளே ஓடும் அது இன்னும் ஆழமாக இறங்கும், பின்பு அது வழி நடத்தும்.

இறைவனுக்கு நன்றி! இறைவனின் பெருங்கருணைக்கு நன்றி!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    07.06.2022

Facebook.com/ParamanPage

Malarchi #MalarchiPuducherry #ValarchipPaathai #StayWithPositive #MalarchiFollowup #Growth #Recharge #Success #Blossoming #ParamanSession #ParamanPachaimuthu #MalarchiSession

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *