காக்கைகளுக்கும் சுயமரியாதை உண்டு போல

காலை பால்கனி கதவை திறந்து செடிகளை கவனித்துவிட்டு, இரண்டு பிஸ்கட்களை துண்டாக்கி விளிம்பு சிமெண்ட் கட்டையில் வைத்து விட்டு உட்கார்ந்து செய்தித்தாள்களை வாசிப்பது என்ற என் வழக்கத்தில் பிஸ்கட் துண்டுகள் வைப்பதை மறந்து விட்டேன் இன்று.

கைக்கெட்டும் தூரத்து எலுமிச்சை மரத்தில் வந்தமர்ந்த காக்கை, பிஸ்கெட் இல்லாத சிமெண்ட் கட்டையைப் பார்த்து விட்டு ‘கா…’ என்றது.

பறந்து வந்து பால்கனி கம்பியின் மீது  வந்து அமர்ந்த்து அது. ‘க்ராராக்ர்!’

‘பேப்பர படிச்சிட்டு அப்புறம் எழுந்து போய் பிஸ்கட் எடுத்துட்டு வரலாம்!’

‘அக்னி பாத்’ ‘அண்ணா திமுக பொதுக் குழு’ ‘மேகதாது அணைக்கு மறுப்பு தந்தது மத்திய அமைச்சகம்’ ‘முதலமைச்சர் உடல் நலக்குறைவால் ஓய்வு’ ‘திரௌபதி முர்மு சிவன் கோவில் வளாகத்தை கூட்டி சுத்தம் செய்தார்’ செய்திகளில் மூழ்குகிறேன்.

உடலை அசைத்து அசைத்து நடந்து நகர்ந்து இன்னும் நெருங்கி வருகிறது அது.

‘க்கர்ர்ர்!’ ( ‘இவ்ளோ நேரம் ஆச்சு, பிஸ்கட் வைக்கல!’)

‘கா…’   ( ‘நான் தெனம் வர்றேன்னு தெரியுமுல்ல? வைக்கலைன்னா என்னா அர்த்தம்?’)

‘கர்ர்ர்’  (‘நான் போயிடுவேன் அப்புறம்! எனக்கு மரியாதை இல்லை இங்க!’)

எழுந்து உள்ளே போய் பிஸ்கெட் இரண்டு கொண்டு வந்து பார்க்கிறேன்.  காகம் போய் விட்டது. வைத்த பிஸ்கட் துண்டுகள் அப்படியே கிடக்கின்றன இன்னும்.
திரும்பி வரவேயில்லை.

காக்கைகளுக்கும் எதிர்பார்ப்பு, சுய மரியாதை எல்லாம் உண்டு போல.

‘மதியார் பால்கனி வாசல் மிதியாதே’ என்று அவைகளில் ஒரு காக்கை பாடினியார் முதுமொழி ஒன்றை கரைந்திருப்பாரோ!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *