பொன்னியின் செல்வன்: ஆதித்த கரிகாலன் நெற்றியில் நாமம் – வழக்கு

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் வரலாறை மறைக்கிறார்கள் என்று சொல்லி மணிரத்னம், விக்ரம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், சுபாஷ் கரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார் ஒருவர் என்ற தலைப்புச் செய்தியை பார்த்ததும் அதியசமாக இருந்தது.

‘இன்னும் படமே வரலியே! அதுக்குள்ள வரலாற்றை மாற்றினார்கள் என எப்படி சொல்ல முடியும்!?’ என்ற கேள்வியோடு செய்தியை தொடர்ந்து கவனித்தால், சமீபத்தில் வெளியான டீசரில் ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் நாமம் இட்டிருக்கிறாராம், அதைத்தான் எதிர்த்து ‘சோழர்கள் நாமமிட மாட்டார்கள். வரலாற்றை மாற்றுகிறார்கள் இவர்கள்’ என்று வழக்கு தொடுத்திருக்கிறாராம் ஒருவர்.

திரைப்படமே வராத நிலையில், அதில் வரும் காட்சிகள் பற்றி தெரியாத நிலையில், ஒரு துளிக் காட்சியை மட்டும் வைத்து வழக்கு தொடுத்திருப்பது, வெளிச்சம் பெறுவதற்காக மட்டுமே என்ற எண்ணத்தை தருகிறது.

சோழர்கள் சிவனை வணங்கி சைவத்தை போற்றியவர்கள் என்றாலும், போருக்குப் புறப்படும் வேளையில் அரண்மனை பெண்டிரிடம் நெற்றியில்  ‘வெற்றித் திலகம்’ வைத்துக் கொண்டே செல்வர் என்பதை அதே பொன்னியின் செல்வன் புதினத்தில் படித்திருக்கிறோம்.   அருண்மொழி இலங்கைக்கு படையோடு புறப்பட்ட போது குந்தவையோடு திலகமிட வந்த கொடும்பாளூர் இளவரசி வானதி, நாயகனைப் பார்த்து வெட்கமும் பயமும் கலந்த உணர்ச்சியில் நடுங்கி தாம்பாளாத்தை தரையில் போட்டு விட்டாள் என்பதை அதே புதினத்தில் படித்திருக்கிறோமே. போருக்குப் போகிறவர்களுக்கு நெற்றியில் வைப்பது திலகம், நாமம் அல்ல.

ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் நெற்றியில் தீட்டியிருப்பது வெற்றித்திலகம் என்றே தோன்றுகிறது.  நிச்சயமாக வீரபாண்டியன் தலை கொய்யும் போரின் காட்சிகளாக அது இருக்கலாம். அல்லது ‘பன்னிரெண்டாம் பிராயத்தில் போர்க்களத்தில் புகுந்து எதிரிகளை கொன்று வீழ்த்தினான் என் பேரன் ஆதித்த கரிகாலன்’ என்று கொடும்பாளூர் வேளாளர் நினைவு கூறும் காட்சிகளாகவும் அது இருக்கலாம்.

திருமண் இடுவதும் வெற்றித் திலகம் இடுவதும் வேறு வேறு. அதே டீசரில் ஆழ்வார்க்கடியவன் பாத்திரத்தில் ஜெயராம் தோன்றும் காட்சிகளும் உள்ளன, ஜெயராம் நெற்றியில் திருமண் இட்டிருக்கிறார், கவனிக்கலாம்.

தவிர,

பராந்தக சோழனின் தந்தை பெருமாளையும் வழிபட்டதாக சொல்லப்படுகிறதே, அதன் பேரிலேயே தன் பிள்ளைக்கு ‘வீர நாராயணன்’ என்று பெயரிட்டான். வீரநாராயணனின் பெயரில் ராஜாத்திய சோழன் வெட்டிய ஏரியே ‘வீர நாரயணன் ஏரி’ எனப்படும் ‘வீராணம் ஏரி’.

( நிற்க : பராந்தகனின் மகனின் பெயரும் ராஜாத்தியன். அருண்மொழி எனப்பட்ட ராஜராஜனின் பிள்ளையான ராஜேந்திர சோழனின் மகன் பெயரும் ராஜாதித்தியன். இரண்டு பேரும் வேறு வேறு காலகட்டங்களை சேர்த்தவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்)

( நமது கருத்துகள் சொல்வது – இவையெல்லாம் சாத்தியங்கள். நமது கருத்தும் தவறாகப் போகலாம். திரைப்படம் வரட்டும் தெரிந்து விடும் சேதி. )

திரைப்படம் வருவதற்கு முன்பே முழுதும் தெரியாமல் போடப்பட்ட இந்த வழக்கு வெளிச்சம் பெறவே போடப்பட்டிள்ளது. நடக்கட்டும் நாடகம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை விமான நிலையம்,
16.07.2022

#PonniyinSelvan #PonniyinSelvanTeaser #PonniyinSelvanIssue #PonniyinSelvanTeaserIssue #Maniratnam #Vikram #ArRahman #ParamanReview #PonniyinSelvanFilm

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *