பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏவிசிசி கல்லூரி நண்பன்

‘பொன்னியின் செல்வன்’ புதினத்தைப் படித்து விட்டு கிறுக்குப் பிடித்து அலைந்த காலமது. அதில் வரும் பாத்திரங்கள் வாழ்ந்த, நிகழ்வுகள் நடந்த இடங்களுக்குப் போய் வருவோம் என முகுந்தன், ராமு பெருமாளோடு 2004ல் என் அப்போதைய மாருதி 800ல் கோடியக்கரை சென்று குழகர் கோவிலையும் அதையொட்டிய காட்டையும் பார்த்து வந்தியத்தேவனையும் பூங்குழலியையும் நினைவு கூர்ந்து களித்து விட்டு திரும்புகையில் மயிலாடுதுறையில் சந்தித்தது வகுப்புத் தோழன் ரிச்சர்டு சாம்சன் நெவிலை. அதன் பிறகு நேற்று மாலை கோவையில் சந்திக்க முடிந்தது.

( ‘ஏவிசிசி – சவேரா மீட்’டிலேயே நடந்திருக்க வேண்டிய சந்திப்பு இது. எதனாலோ தள்ளிப் போனது)

மலர்ச்சி நிகழ்ச்சிக்காக கோவைக்கு போயிருந்த என்னை நான் தங்கியிருந்த இடத்திற்கே வந்து பார்த்து நெகிழ வைத்தான் ரிச்சர்டு. கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறான். உருவ மாற்றம் பெரிதாய் இல்லை.

ஏவிசிசிக்குப் பிறகு என்ன ஆயிற்று வாழ்வில் என்று இருவரும் அவரவர் கதையை சுருக்கமாக பகிர்ந்து கொண்டோம். திருமணம் நடைபெற ஏன் கால தாமதமானது என்று ரிச்சர்டு சொல்லிக்கொண்டிருக்கும் போது, ‘குபுக்’கென்று கண்ணீர் முட்டியது எனக்கு.

மயிலாடுதுறை, கம்போடியா சுற்றல்களுக்குப் பிறகு கோவையில் வாழ்ந்து வருகிறான் ரிச்சர்டு. மனைவி பிள்ளைகளோடு இருக்கிறான் என்பது பெருமகிழ்ச்சி.

பன்னாடுகளில் சேவையை தரும் இந்திய மென்பொருள் நிறுவனமொன்றில் தொழில்நுட்ப சேவைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறான் ரிச்சர்டு.

எங்களைத் தாண்டி பேச நேரமில்லை. (பாலாஜி சீனிவாசன் உடல்நிலை – மருத்துவமனை சென்று பார்த்தது சில வாக்கியங்களில் வந்து போனது)

பேச ஒன்றுமேயில்லாதது போல் ஒரு தருணத்தில் பேச்சற்று நின்ற போது, ‘எத்தனை வருஷத்துக்கப்புறம் பாக்கறோம்!’ என்று ஒரே நேரத்தில் இருவரும் சொன்னது அதிசயம்.

‘இதைப் படித்துப் பார். உனக்குக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது!’ என்று எனக்காக பைபிளை (வேதம்) தந்து தன் அன்பை வெளிப்படுத்தினான் ரிச்சர்டு. கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை இம்மாத ‘வளர்ச்சி’ இதழைத் தவிர.

எனது அடுத்த சுற்று சந்திப்புக்கு மலர்ச்சி மாணவர்கள் வந்து விட்டதால், ரிச்சர்டு சந்திப்பு அரை மணி நேர அளவளாகவே முடிந்து விட்டது.

வெளியே வந்து ரிச்சர்டு வந்த புல்லட்டை பார்த்து அதிலமர்ந்து ஒரு படமெடுத்துக் கொண்டு வழியனுப்பி வைத்தேன். (அவன் அந்த வண்டியில வர்றதை பார்த்தா, அண்ணாத்த படத்துல வர்ற மாதிரியே இருக்கு. அதுவும் அதே மாதிரி ஹெல்மெட்!)

அடுத்தடுத்தடுத்து சந்திப்புகள் என தொடர்ந்து இயங்கினாலும், இரவு உறங்கச் சென்ற போது ரிச்சர்டை சந்தித்த போது உரையாடிய தருணங்களே மனதில் நிறைய ஓடின.

ஒவ்வொரு மனிதனையும் எங்கெங்கெல்லாம் கூட்டிப் போய் விடுகிறது வாழ்க்கை!

(கோவை நிகழ்ச்சி முடித்து சென்னை விமானமேற காத்திருக்கிறேன்!)

  • பரமன் பச்சைமுத்து
    கோவை விமான நிலையம்
    17.07.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *