யாரிடம் கேட்பேன் இதை?

குளித்து விட்டு, நகங்களை வெட்டலாமென பால்கனியைத் திறந்து கம்பித் தடுப்புக்கு அருகில் நின்று கை விரல் நகங்களை வெட்டத் தொடங்கினேன் இன்று காலை.

எங்கிருந்தோ வந்து அருகிலமர்ந்தது ஒரு காக்கை. தின்னும் பண்டம் எதுவும் வைத்திருக்கிறேன் என்று நினைத்தது போல. ஆனாலும் இவ்வளவு நெருக்கமாக வராதே காக்கை.  உணவே வைத்தாலும் ஓரக் கண்ணால் பார்த்து பார்த்து நகர்ந்து நகர்ந்து எச்சரிக்கையாகத் தானே வரும் அவை. சற்று அருகில் போனால் கூட ‘உன் சோறே வேணாம் போடா!’ என்று பறந்தோடி விடுமே காக்கைகள்! எத்தனை ஊரில் எத்தனையெத்தனை காக்கைகளை கண்டிருக்கிறோம்.

கண் தெரியாத காக்கையோ, காது கேளா காக்கையோ! ஏன் இவ்வளவு அருகில்.  வெட்டும் நகங்கள் பால்கனியிலிருந்து தரையில் விழும்படி பால்கனியின் ஓரத்தில் வடக்கு நோக்கி நிற்கிறேன். என் இடது தோளுக்கு மிக அருகில் அமர்ந்திருக்கிறது காகம்.

நேரடியாக தலையைத் திருப்பி அவைகளைப் பார்த்தால் அவை பதறி பறந்து விடுமென்பது இத்தனை காலங்களில் காகங்களை பார்த்து பார்த்து நான் கொண்ட அனுபவம். உணவை வைத்து விட்டு விலகி நின்று எங்கோ பார்ப்பது போல நின்று, பார்ப்பது தெரியாமல் பார்க்க வேண்டும். அருகிலிருந்தாலும் நேராகத் திரும்பிப் பார்க்காமல் ஆனால் நன்றாக கவனிக்கிறேன் அதை.

முகத்தை இடப்பக்கம் திருப்பினால் என் மூச்சு காக்கையின் உடலில் படலாமெனும் அளவு பக்கம். இவ்வளவு அருகில் ஒரு காக்கையை நான் பார்த்ததேயில்லை. காக்கா கருப்பென்றே வாழ்நாள் முழுக்க கேட்டே இருந்தவனுக்கு இன்று சாம்பல் வண்ணம் என்று தெரிந்தது.   ஒரு திரிசூலத்தைப் போல மூன்று கிளைகளாய் இருந்தன காக்கையின் கால்களின் முன் பக்கம். அதிலும் கருஞ்சாம்பல் வண்ணத்தின் மீது வெளிர்சாம்பல் கோடுகள். காக்கையின் கால்களில் கோடுகள் உண்டென்பதை நினைத்துக் கூட பார்த்ததில்லை.

‘ஒரு வேளை, பசிக்குதோ!’ ‘வெட்டின நகத்தையெல்லாம் திங்க முடியாது.
அப்படியே இரு போய் பிஸ்கெட் எடுத்துட்டு வர்றேன்!’

உள்ளே போய் இரண்டு பிஸ்கெட்களை எடுத்துக் கொண்டு ‘காக்கா அங்க இருக்காது, இந்நேரம் பறந்து போயிருக்கும்!’ என்று நினைத்தபடியே பால்கனிக்கு வருகிறேன். அதே இடத்தில் அமர்ந்திருக்கிறது அது. சத்தம் கூட போடவில்லை.

‘எதுக்கும் பிஸ்கெட்ட வச்சிடுவோம். வேணும்னா எடுத்துக்கட்டும்!’ குனிந்து பால்கனியின் மேற்குப்புற சிமெண்ட் கட்டையில் மிளகாய் செடிக்கு பக்கத்தில் வைத்து விட்டு, மறுபடியும் பழைய இடத்தில் வடக்கு நோக்கி நின்று சுண்டு விரல் நகத்தை வெட்டுகிறேன். ‘க்ர்ர்க்’ ஜப்பானிய தயாரிப்பு நகம் வெட்டி அழகாக அதன் வேலையை செய்கிறது. ‘ஆர் எம் ராஜேந்திரன் சௌகார்பேட் இம்போர்டட் ஐட்டம் கடையில் பரிந்துரைத்த நெயில் கட்டர் இது! இன்னும் உழைக்குது!’

காகம் அதே இடத்தில். இன்னும் அருகில். ஒரு தாவு தாவினால் என் இடது தோளில் ஏறி விடலாம் எனும் நிலையில். ‘கை நீட்டினால் ஏறி உட்கார்ந்து விடுமோ?’

சரி திரும்பிடுவோம்! லேசாகத்தலையைத் திருப்புகிறேன். ‘மணி… என் கண்ணு வேணும்னு கேட்டியா?!’ என்று திரைப்படத்தில் கேட்ட கமல் போல நம்மையே பார்த்துக் கொண்டு நிற்கிறது ( சரி உட்கார்ந்திருக்கிறது! காக்கா எப்படி உட்காரும்?)  ‘ஒனக்கு த்ரீ டைமென்ஷன் வ்யூ உண்டா? டூ டைமென்ஷன் மட்டும்தான்னு படிச்சேன். நான் இப்ப கட்டம் கட்டமா அட்டை மாதிரி தெரிவேனா உனக்கு?’ கேட்கவில்லை. வாய் திறந்தால் ஓடி விடும்.

சில நொடிகள் காக்கையும் நானும். அதன் வலப்புற இறக்கையிலிருந்து ஒரு சிறகு வெளியெ தொங்குகிறது. உதிர்ந்து விடும் போல எந்த நொடியிலும்.

இவ்வளவு அருகில் ஒரு காக்கை, பயமில்லாமல் கரையாமல். குங்ஃபு பாண்டா படத்து பாத்திரம் போல அமர்ந்திருக்கிறது மிக அருகில்.

ஒரு பரவசம் உள்ளே. இது வரை கண்டிராத ஓர் அனுபவம். இந்த நிலை இப்படியே தொடரட்டுமே! இது பறந்து போய் விடக் கூடாது, நீட்டிப்போம். மறுபடியும் வடக்கு நோக்கி முகத்தை திருப்பி வெட்னப்பட்ட நகங்களை வரிவரியாய் இருக்கும் பகுதியால் தேய்த்து சீராக்குகிறேன். அதே இடத்தில் காக்கை.

‘என்ன வேணும் உனக்கு? நீ யாரு?’

‘க்ரக்ரக்ரகரக’ நகத்து நுனியை தேய்க்கிறேன்.

பத்து விரலும் முடிந்தது. ஒரு மடையனைப் போல நிலை மறந்து அதை செய்கிறேன். நகவெட்டியின் உள்ளே இருக்கும் நகத்துகள்களை வெளியேற்ற,நக வெட்டியை தலைகீழாய் வைத்து ‘தட்தட்தட்தட்’டென்று  இரும்பு கம்பியில் தட்டுகிறேன். அந்த சத்தத்தில் சுயம் பெற்று அதே கம்பியிலமர்ந்திருந்த காக்கை காலை அழுத்தி எம்பி இறக்கை விரித்து பறந்து போனது.

‘சரி நாம உள்ள போவோம் அப்புறமா பிஸ்கெட்ட எடுத்துக்கட்டும் அது!’

நாரத்தம் மரத்தின் கிளையில் அது இப்போது.

எதனால் இவ்வளவு அருகில் வந்தது அந்தக் காக்கை? ஏதும் சொல்ல வந்ததோ? அல்லது அது சொல்லி விட்டதோ, எனக்குத்தான் புரியவில்லையோ! யாரிடம் கேட்பேன் நான்?

– பரமன் பச்சைமுத்து
26.07.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *