ஈரோடை

‘ஓர் ஆடு’ ‘ஒரு புலி’ என்று மட்டுமே பள்ளிக் காலத்திலிருந்து பயன்பாடு கொண்டிருந்தவன், மலேசியாவின் ‘பெந்தாங்’ போனபோதுதான் அங்கிருக்கும் பயன்பாடு கண்டு தலையில் தட்டிக்கொண்டு ‘ஈராயிரம்’ என்று என் சொல் பயன்பாட்டை மாற்றிக் கொண்டேன். அடுத்த ஆண்டு மலர்ச்சி நிகழ்ச்சியின் அனுமதி சீட்டில் ‘ஈராயிரத்து பதினெட்டு’ என்றே அச்சேற்றினோம்.

மலர்ச்சி பயிலரங்கம் ஒன்றிற்காக இன்று ஈரோட்டுக்கு வந்திருக்கிறேன். மறுபடியும் தலையில் தட்டப்படுகிறேன். கொங்கு பகுதியில் பெரும்பள்ள ஓடை, பிச்சைக்காரன் ஓடை என்று இரண்டு ஓடைகள் இருந்த பகுதியை ‘இரு ஓடை – ஈரோடை’ என்று குறிப்பிட்டு அது மருவி ‘ஈரோடு’ என்று ஆகியிருக்கிறதாம். இன்று அறிந்து கொண்டேன்.

தாட்சாயினியின் தந்தை தட்சனை நெற்றிக் கண்ணால் எரித்த பிறகு,
பிரம்மனின் கொய்த மண்டை (கபாலம்) சிவனின் தலையில் ஒட்டிக்கொண்டு பலகாலம் துன்புறுத்த, இவ்வூரில் வந்து குளித்த போது வெடித்து சிதைந்து நீங்கி நலம் தந்ததாம். வெடித்த மண்டை மூன்றாய் சிதறியதில் ‘வெள்ளை மண்டை’ விழுந்த ஓடை ‘வெள்ளொடை’ என்றும், ‘பெரிய மண்டை’ விழுந்த இடம் ‘பேரோடை’ என்றும், ‘சிறிய மண்டை’ விழுந்த இடம் ‘சித்தோடை’ என்றும் பெயர் பெற்றதாக வரலாறு சொல்கிறார்கள். (அவை இப்போது மருவி வெள்ளோடு, பேரோடு, சித்தோடு ஆகிவிட்டன).

சோழர்கள், சேரர்கள், பாண்டியர்கள், ஐதர் அலி, திப்பு சுல்தான், தீரன் சின்ன மலை, கிழக்கிந்திய கம்பெனி, சைவ சமயக் குரவர்கள், பெரியார் என பலரை வரலாற்றில் கொண்டிருக்கும் ஈரோடு மண்ணில் இன்று நானும் சுவாசிக்கிறேன்.

‘பில்டர் காபி’ என்று பலகையில் எழுதியிருக்கிறார்கள் ‘ஃபில்டர் காஃபி’யை. அட்டகாசமாக இருக்கிறது. ஐந்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டும், ஃபில்டர் காஃபியும் என தொடங்குகிறது பலருக்கு இங்கே அதிகாலைப் பொழுது.

  • பரமன் பச்சைமுத்து
    ஈரோடு
    07.08.2022

Erode #MalarchiErode #ParamanTouring #Kongu #Malarchi

Facebook.com/PatamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *