
கேள்வி: எனக்குத் தெரிந்தே பதினைந்து ஆண்டுகளாக ‘பொன்னியின் செல்வன்’ பற்றி மேடைகளில், எழுத்துகளில் சொல்லி வருபவர், பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே ‘பொன்னியின் செல்வன் டூர்’ போனவர் நீங்கள். ராஜராஜனின் கதையை ‘வளர்ச்சி’யில் சித்திரக் கதையாகவும் வெளியிட்டீர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு.
உங்கள் உந்துதலால் பொன்னியின் செல்வன் நூலை படித்த பலரில் நானும் ஒருத்தி.
பொன்னியின் செல்வன் உண்மைக் கதையா?
பரமன்: தமிழகத்தை ஆண்ட பிற்கால சோழர்கள் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து முதன் முதலில் ஆங்கிலத்தில் நூல் வெளியிட்டார் நீலகண்ட சாஸ்திரி என்பவர். அதையொட்டி அதன் சுவடில் பயணித்து அதை தமிழில் கொண்டுவந்தவர்கள் சதாசிவ பண்டாரத்தாரும் வை. ராஜமாணிக்கனாரும் என்பது இங்கு நிலவும் கருத்து.
(நீலகண்ட சாஸ்திரியின் ஆய்வு நூலை, இரண்டு பாகங்களாக ‘சோழர்கள்’ என்ற பெயரில் தமிழில் கொண்டு வந்து விட்டார்கள் தற்போது)
இவற்றை தனது ஆதாரங்களாக கொண்டதாக கல்கியே குறிப்பிடுகிறார்.
வரலாற்று தரவுகளை வைத்துக் கொண்டு, அதையொட்டி தனது புனைவை நெய்து கலந்து கட்டி கண்டுபிடிக்க முடியா வண்ணம் தந்த கல்கியை பாராட்டியே ஆக வேண்டும் இங்கு.
சுந்தர சோழர், நந்தினி, சம்புவரையர், ஆதித்த கரிகாலன், மழபாடியார், பழுவேட்டரையர், காலாந்தகர், கந்தமாறன், வந்தியத்தேவன், ஆழ்வார்க்கடியான் என எல்லாரையுமே சில நேரங்களில் சஞ்சலம் கொண்டவர்கள் சில செயல்கள் செய்தவர்கள் ஆனால் எல்லோருமே நல்லவர்கள் என்பது போல வடித்திருப்பார் கல்கி. இது புனைவு செய்த எழுத்தாளரின் மனப்பாங்கின் வெளிப்பாடு.
சுந்தர சோழர்கள் ஆண்ட காலத்தில் சம்புவரையர்கள் இல்லை, அதன் பின்னரே வந்தனர் அவர்கள், சம்புவரையர்கள் திருவண்ணாமலையை தங்கள் இடமாகக் கொண்டவர்கள் என்கிறது வரலாறு. ஆனால், சுந்தர சோழர்கள் காலத்திலேயே சம்புவரையர்கள் இருந்ததாக, அவர்கள் வீரநாராயணன் ஏரிக்கருகில் கடம்பூரில் வசித்ததாக புனைவு செய்திருப்பார் பொன்னியின் செல்வனில் கல்கி. சதியாலோசனை, தேவராளன் குரவைக்கூத்து, பட்டத்து இளவரசர் கொலை என நிகழ்வுகளையும் அங்கே நடந்ததாக எழுதியிருப்பார்.
பழுவேட்டரையர் பாத்திரம் பொன்னியின் செல்வனில் மிக மிக முக்கியமான பாத்திரம். (இதிலிருந்துதான் ‘பாகுபலி – கட்டப்பா’வை உருவகம் செய்தார்கள் என்பது என் கருத்து) பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர் என அண்ணன் தம்பிகளாக இரண்டு பழுவேட்டையரைகளை வடித்தும், பழுவூர் மன்னர்கள் இவர்கள் என்றும், சுந்தர சோழருக்கு மிக நெருங்கிப் பணி புரிந்தார்கள் எனவும் எழுதியிருப்பார் கல்கி.
சுந்தர சோழர் ஆண்ட பதினேழு ஆண்டுகளும் பழுவூரின் மன்னராக இருந்தவர் மறவன்கண்டன். அவரே உத்தம சோழன் காலத்திலும் ஆண்டார். அவருக்குத் தம்பிகளே இல்லை என்கிறது வரலாறு.
அருண்மொழி, குந்தவை, ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், சுந்தர சோழன், செம்பியன் மாதேவி, ரவிதாசன், தேவராளன், வீரபாண்டியன் என வரலாற்றில் இருந்த வாழ்ந்த உண்மைப் பாத்திரங்களோடு பூங்குழலி, ஆழ்வார்க்கடியவன், நந்தினி, காலாந்தக கண்டன், பினாகபாணி, குடந்தை சோதிடர், கருத்திருமன் என கற்பனைப் பாத்திரங்களைக் கலந்து கட்டி புனைவு செய்யப் பட்ட சிறந்த புனைவு ‘பொன்னியின் செல்வன்’.
எனவே, ‘பொன்னியின் செல்வன்’ நாவலில் உண்மை வரலாறும் உண்டு, கற்பனை கலப்பும் உண்டு.
(‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ், ஆகஸ்ட் 2022 இதழிலிருந்து )
– பரமன் பச்சைமுத்து
#PonniyinSelvan #Ps1 #Kalki #ManiRatnam #ArunMozhiVarman #RajarajaChozhan #Vanthiyathevan #PazhuvurNandhini #Pazhavettaraiyar #Sambuvarayar #SundaraChozhar #Veerapandiyan #Kundhavai # #ParamanOnPonniyinSelvan #Ps2 #