பொன்னியின் செல்வன் : வரலாற்றை மாற்றுகிறார்களா?

மலர்ச்சி வணக்கம் பொன்னுஸ்வாதி!

‘கல்கியின் கதையும் மணிரத்னத்தின் திரைக்கதையும் மக்களுக்கு தவறான வரலாற்றை தந்துவிடுமே!’ என்ற உங்கள் பின்னூட்டம் கண்டேன்.

ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்விலிருந்து சில நிகழ்வுகளை எடுத்துக் கொண்டு அதைச் சுற்றி கற்பனைகள் புனைந்து கதை செய்வது காலகாலமாக வழக்கத்தில் உள்ளது. நம் புராணங்களிலேயே அத்தனை ‘வெர்ஷன்கள்’ இருப்பது அதனால்தான்.

நரசிம்மப் பல்லவரின் கதையை எடுத்துக் கொண்டு அதில் திரைப்பட நாயகத்தன்மைக்கான மசாலாக்களை சேர்த்து புனைந்து கதை, வசனம் கலைஞர் செய்ய, நாயகனாக எம்ஜியார் நடிக்க ‘காஞ்சித் தலைவன்’ என்று வரலாற்றுப் படம் எடுத்தார்கள். அண்ணாவை குறிக்க காஞ்சித் தலைவன் என்று பெயர், சமஸ்கிருதம், பிராகிருதம், தமிழ் ஆகியவற்றில் ஆளுமை பெற்ற நரசிம்ம பல்லவன் தமிழராக காட்டப்பட்டிருப்பார்.

சிவாஜி கணேசனுக்கு வாழ்க்கை தந்த வரலாற்று நாடகம் ‘கம்பளத்தார் கூத்து’, பின்பு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ என்ற வரலாற்றுப் படமாக எடுக்கப்பட்டது. வெள்ளையனை எதிர்த்து வீரபாண்டிய கட்டபொம்மன் பேசும் வசனங்கள் இன்றும் மக்களிடையே நிற்பவை. ‘மாமனா, மச்சானா? மானங்கெட்டவனே!’ என மீம்ஸ் வரை வாழ்கிறது அவ்வசனங்கள். வீரத் தமிழரின் அடையாளமாக இன்று வரை வீரபாண்டிய கட்டபொம்மனை கொண்டாடக் காரணம் அந்த வரலாற்றுப் படம்தான். ஆனால், உண்மையில் கட்டபொம்மன் தமிழன் அல்ல, தெலுங்கு பேசுபவன், கம்பளத்தார் இனத்தை சேர்ந்தவன். இயற்பெயர் ‘கட்ட பொம்மு’.

‘நீர்தான் கட்ட பொம்மனோ?’ ‘நீர்தான் ஜாக்‌ஷன் துரையோ?’ என்ற அந்த புகழ்பெற்ற ஜாக்சன் துரை – கட்டபொம்மன் சந்திப்பு சினிமா காட்சி நிஜத்தில் நடைபெறவே இல்லை! திரைக்காக மாற்றிய கதை அது. ( இதிலிருந்து உருவி எடுத்து கே எஸ் ரவிக்குமார் செய்தது தான் ‘படையப்பா’ திரைப்படத்து ரம்யா கிருஷ்ணன் – ரஜினி் – ஊஞ்சல் சீன்)

சில ஆண்ணுகளுக்கு முன்பு சிரஞ்சீவி நடித்த ‘சைரசிம்மா ரெட்டி’ தெலுங்குப்படத்தில் விஜய்சேதுபதி் வீர பாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் வருகிறார், ஆனால் ஜாக்சன் துரையின் தலை சிரஞ்சீவி கொய்வதாகவே படம் செய்யப்பட்டிருக்கிறது அங்கு. வரலாறு மாற்றப்பட்டது.

சிவாஜி நடித்த ராஜராஜசோழன் வரலாற்றுப் படம்தான். ஆனால் அதில் இருக்கும் பாதிக் காட்சிகள் தஞ்சை பெரிய கோவிலின் நந்தி சிலை வடிப்பது உட்பட, இவர்கள் புனைந்து சேர்த்ததுதான்.

உலகம் கொண்டாடும் ‘வேள்பாரி’யில் சேர, சோழ, பாண்டியர்களை போரில் வென்று பரம்பின் பச்சைமலைக்கு பாரி திரும்புவதாக சு வெங்கடேசன் எழுதி முடித்திருப்பார். ஆனால், பாரி போரில் இறந்து விட பாரியின் மகளிர்களான அங்கவைக்கும் சங்கவைக்கும் புலவர் கபிலர் அலைந்து அலைந்து திருமணம் செய்து வைத்தார் என்கிறது புறநானூறு. சு வெங்கடேசன் வரலாற்றை மாற்றித்தான் உள்ளார். பின்னாளில் வரும் வாசகன் இதையே வரலாறு என்று நம்பலாம். முருகனை கடவுள் இல்லை வெறும் வேளிர் குல தலைவன், வள்ளி குறத்தி இல்லை, கொடிகுலத்து மங்கை என தன் கம்யூனிச நாத்திக கலவையூற்றிதான் (புது வரலாறாக) எழுதியுள்ளார்.

பாலகுமாரனின் ‘உடையார்’ முழுக்க அவர் செய்த புனைவு கட்டுதான்.

நீங்களும் நானும் விரும்பும் ஜெயமோகனின் ‘வெண் முரசு’ நாவல் வரிசை முழுக்க மகாபாரத வரலாற்றை அவர் பார்வையில் வடிக்கும் புனைவுதானே.

இப்படி ஒரு வரலாற்று நிகழ்வை அல்லது வரலாற்றில் உள்ளவரின் வாழ்வின் சில நிகழ்வுகளை வைத்துக் கொண்டு சுற்றி் புனைந்து கட்டுவது காலம்காலமாக நடப்பதே.

இதுதான் வரலாறு என்று சிலர் நம்புவதற்கு நிறைய வாய்ப்பு உண்டு.

காலம் காலமாக நாம் அறிந்த ஏசு பிரானின் ‘லாஸ்ட் சப்பர்’ ஓவியத்தையும், ஊர் மக்களால் கல் எறிந்து அடிக்கப்படும் மரியா மாக்தலின் சம்பவத்தையும் மொத்தமாக மாற்றி ஏசுபிரான் திருமணமானவர் என்று வரலாற்றையே மாற்றி ‘டாவின்சி கோட்’ என்று தந்ததில் எல்லோருமா ஏசு பிரான் திருமணமானவர் என்று நம்பினார்கள்?

இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டியது இரண்டு. 1. கல்கி எழுத்து வரலாறு அல்ல, சாண்டியன் செய்தது போல ஒரு புனைவு. 2. மணிரத்னம் கல்கியின் நாவலை படமாக்குகிறார். நாவலில் இல்லாத சிலதையும் இவர்கள் திரைவடிவத்தில் சேர்ப்பார்கள் என்பது என் எண்ணம். பொன்னியின் செல்வனில் வரலாற்று உண்மைகள் உண்டு. பொன்னியின் செல்வன் முழுக்கவும் உண்மை வரலாறு அல்ல.

நன்றி!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    09.08.2022 .

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *