வரிசையாய் அரசமரம் – NH 79

தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்44ல் பயணித்துக் கொண்டிருக்கையில் திடீரென்று ஓரிடத்தில் தொடங்கி சில கிலோ மீட்டர்களுக்கு வரிசையாக ஒரே வகை மரங்கள் இருந்தால், ‘அட..!’ என்று ஒரு வியப்பு வரும்தானே!

எந்த இடம் இது? சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதில் ஆத்தூருக்கு இறங்குவதற்கு முன்பு.

‘வருசலா கண்ணுக்கு எட்டன தூரம் வரைக்கும் அரசமரங்க, ஒரே மாதிரி! வண்டிய நிறுத்துங்க!’ என்று நான் வண்டியை நிறுத்தி இறங்கியே விட்டேன். நின்ற இடத்திலிருந்து முன் பக்கம் பார்க்கிறேன் வரிசையாய் அரச மரங்கள். பின் பக்கம் பார்க்கிறேன் வரிசையாய் அரசமரங்கள். தானாக முளைத்தவையில்லை இவை என்பது புரிகிறது.

இரவிலும் பகலிலும் என இருபத்திநான்கு மணி நேரமும் ஆக்சிஜன் தரும் மரங்களில் அரசமரமும் ஒன்று. இந்திய நாட்டின் உயர் விருதான ‘பாரத ரத்னா’ விருது இந்த மரத்தின் இலையிலேயே வடிவமைக்கப் பட்டிருக்கும். நாம் ‘அரசு’ என்கிறோம், வடக்கே ‘போதி’ என்கிறார்கள், அறிவியல் அடித்து ‘சேக்ரெட் ஃபிக்’ என்று அத்தியின் வகையில் வைத்துவிட்டது. இரண்டு வளர்ந்த அரச மரங்கள் ஒரு குடும்பத்தின் நான்கு பேர் சுவாசிக்குமளவிற்கு ஆக்சிஜன் தந்துவிடுமாம்.

‘யாருய்யா வச்சது இதுங்கள?’ ஒரே வயதுடைய ஒரே சீராக வளர்ந்த மரங்கள், ஒவ்வொரு பத்தடிக்கும் ஒரு மரமென கணக்கிட்டு நட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு பத்தடியிலும் மரம் இருக்கிறது, ஒன்றும் பட்டுப் போகவில்லை. அப்படியென்றால், வெறுமனே நட்டதோடில்லாமல் தொடர்ந்து பராமரித்து வளர்த்திருக்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அரச மரங்கள் வரிசையில். ‘என்னை தொடு வா! வா!’ என்று காற்றில் இலை அசைத்து அழைக்கிறது மரங்கள்.

‘இப்படி யாரு வச்சா இந்த மரங்கள?!’ பின்னிருக்காங்களே!’

பின்பக்கம் முதல் மரத்திற்கும் இரண்டாம் மரத்திற்கும் இடையில் ஒரு பெயர்ப்பலகை தெரிகிறது. ஒரு வேளை அதில் எழுதியிருக்குமோ! ‘ஐயோ! நம்மாளுங்க அதில சினிமா போஸ்டர், வீட்டு மனை போஸ்டர், கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாம இருக்கனுமே! போய் பாப்போம்!’

நெருங்க நெருங்க பெயர்ப்பலகை தெரிகிறது. ‘ஆகா! ஆத்தூர் ட்ரீ ஃபவுண்டேஷன்’ ‘ஆத்தூர் பசுமை மைய அறக்கட்டளை’!

இவர்கள் வாழ்வாங்கு வாழட்டும். இவர்கள் வழியே மரங்கள் பெருகட்டும், பல்லுயிர் தழைக்கட்டும்! வாழ்க!

‘ஆத்தூர் ட்ரீ ஃபவுண்டேஷன்’ அமைப்பின் பெயர் தாங்கி நின்ற அந்த பெயர்ப்பலகைக்கு ஒரு ‘சல்யூட்’ செய்து விட்டு தூரத்தில் நிற்கும் என் வண்டியை நோக்கி நடக்கிறேன்.

  • பரமன் பச்சைமுத்து
    ஆத்தூர்,
    17.08.2022

AtturTreeFoundation #Attur #NH44 #ParamanTouring #PeepalsTree #GrowTrees #GreenPlanet #Environment

MalarchiSalem

Attur Tree Club ATTUR ஆத்தூர் (தம்மம்பட்டி,கெங்கவல்லி,வீரகனூர்,பெத்தநாயக்கன்பாளையம்) Attur News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *