நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா?

இதைப் பறித்து வாணலியில் இட்டு புரட்டி மாலைச் சிற்றுண்டியாக உண்ட பாட்டிகள் சிலரை மணக்குடியில் பார்த்திருக்கிறேன் அந்தக் காலங்களில்.

சிறுவயதில் பள்ளி இடைவேளைகளில் முத்து, முரளி, சரவணன், நட்ராஜோடு பள்ளிக்குப் பின்புறம் கிளைகளில் பூத்திருக்கும் இவற்றை பறித்து வாயிலிட்டு மென்று துவர்ப்பும் புளிப்பும் சேர்ந்த அலாதி கலவையை சுவைத்து மகிழ்ந்திருக்கிறேன்.

உயர் நிலைப் பள்ளி நாட்களில் புவனகிரியிலிருந்து மணக்குடிக்குப் பயணிக்கையில் ராஜவேலு சித்தப்பாவும், சரவணனும் இதைக் கண்டால் நின்று விடுவார்கள். பறித்து தின்று விட்டுதான் பயணம் தொடரும். அர்ஜுனன் ஒரு கொள்ளைக்காரன் போல மேலே ஏறி சட்டைப் பையில் நிரப்பி பிதுங்குமளவிற்கு பறித்துக்கொண்டுதான் இறங்குவான்.

இன்று, திண்டிவனம் சாலையில் தொழுப்பேடு முன்பு தொடர் சாலைப்பயணத்தினூடே இடைவெளி எடுக்க நிறுத்திய போது, பூத்திருக்கும் இவற்றைக் கவனித்தேன்.  சிறுவயது நினைவுகள் மனதிலும் அன்று உண்ட சுவை நாக்கிலும் பட்டாம்பூச்ணிகளாக பறக்க, தாவி கொய்து விட்டேன்.

‘குத்தாலிங்கம் இதை சாப்பிட்டுருக்கீங்களா? இல்லையா? இதெல்லாம் எப்படி மிஸ் பண்ணீங்க! இந்தாங்க சாப்புட்டு பாருங்க!’

நீங்கள் இதை சாப்பிட்டிருக்கிறீர்களா? இது என்ன பூ என்று தெரிகிறதா?

– பரமன் பச்சைமுத்து
தொழுப்பேடு
07.09.2022

#ParamanTouring #Tamarind #TamarindFlower #TravelExperience #Paraman

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *