‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த…’

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு…’

சில வரிகளைப் படிக்கும் போதே அவை, அது தொடர்பாக நாம் பதிந்து வைத்திருக்கும் சிலரை அல்லது சிலதை உள்ளத்தின் அடியாழத்திலிருந்து மேலெழுப்பிக் கொண்டு வந்து விட்டு விடுகின்றன.  அப்படியொன்றானது மேலுள்ள வரிகள்.

நியாயமாக இவ்வரிகளைப் பார்க்கையில் தலைக்குள் சிவன் வரவேண்டும் அல்லது இந்தத் திருவாசக வரிகளை இயற்றிய மணிவாசகர் வரவேண்டும். நான் கவனச்சிதறல் கொண்ட கோணங்கி. இன்று மயிலை கோவிலின் சுவரில் இவ்வரிகளைப் பார்க்கையில் எனக்கு தருமபுரம் சுவாமிநாதனும் என் தந்தையும் வந்து போனார்கள் மண்டைக்குள்.

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு…’

நேஷனல் டேப் ரெக்கார்டரில் டிடிகே 90 கேசட்டில் பெங்களூர் ரமணியம்மாள், வாரியார், புலவர் கீரன் ஆகியோரோடு என் தந்தை அதிகம் ஒலிக்கவிட்டது தருமபுரம் சுவாமிநாதனைத்தான்.

‘பிடித்த பத்து…. திருச்சிற்றம்பலம்…’ என சொல்லிவிட்டு ‘உம்பர்கட்கரசே…. ஒழிவற நிறைந்த….’ என்று கணீர்க்குரலில் அவர் தொடங்கையில் உடல் சிலிர்க்கும் அவ்வயதில். தெருவில், பாப்பாக்குளத்து கரையில் எந்த விளையாட்டில் இருந்தாலும் எது செய்தாலும் நிறுத்தி நின்று வீடு நோக்கி கவனம் குவியும். தொலைக்காட்சிப் பெட்டி நுழையா அக்கால மணக்குடியில் எங்கள் வீட்டு டேர் ரெக்கார்டர்தான் உரத்து ஒலிக்கும். அதுதான் என் பெரும்பொழுதுகளை அவ்வயதுகளில் எடுத்துக் கொண்டதும் கூட.

‘உம்பர்கட்கு…. அரசே…. ஒழிவற… நிறைந்த… ஆ…. ஆ….ஆ….’ என்று பிரித்து மேய்வார். அடுத்து ஒரே மூச்சில் ‘உம்பர்கட் கரசே ஒழிவற நிறைந்த யோகமே ஊற்றையேன் தனக்கு…’ என்று அடித்துப் பாய்வார்.

திருச்சாழலையும், திருப்பள்ளியெழுச்சியையும், சிவபுராணத்தையும் இன்று நான் சிலாகித்து நிற்பதற்குக் காரணம் இருவர். கிட்டிப் புல், கோலி குண்டு, டயர் வண்டி என்று ஓடிக்கொண்டிருந்தவனை இழுத்து (தடுத்தாட்கொளல்!!?) ‘இதைப் படி இது நல்லது!’ என்று அவற்றை என் கையில் தந்த என் தந்தை ஒருவர், அவர் ஒலிக்க விட்ட கேசட்டுகளில் பெருங்குரலெடுத்து பாடி அவற்றை எளிதாக என்னுள் இறக்கி வைத்த தரும்புரம் சுவாமிநாதன் இரண்டாமவர்.

‘பூசுவதும் வெண்ணீரு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடி..’ அடேயப்பா! பாடும் விதத்தால் பதிகங்களை செய்யுளை அவற்றின் வார்த்தைகளை எப்படிப் பிரித்துப் படிக்க வேண்டுமென பாடல் வழியே போதித்தார் தருமபுரம் சுவாமிநாதன் அவ்வயதில் எனக்கு.

ஏழாம் வகுப்பின் தமிழாசிரியர் ஜெயராமன் ஐயா போதித்த ‘மோந்தால் குழையுமனிச்சம்பூ’ செய்யுளை அவ்வயதிலேயே ‘மோந்தால் குழையும் அனிச்சம்பூ’ என எழுதிப் படிக்கக் காரணம் தருமபுரம் சுவாமிநாதனே.

‘போன்றியென் வாழ்முதலாகிய பொருளே… புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி…!’ அடேயெப்பா, என்ன வரிகள் இவை. திருப்பள்ளியெழுச்சிக்கு ஈடு எதுவுமில்லை என்பது என் தனி அபிப்பிராயம். ஆங்கிலேய ஜியு போப் கூட இதில்தான் கரைந்திருப்பாரோ என்னவோ. 

என் தந்தையுடன் இன்னும் நெருக்கமாக ஆவதற்கு, அவர் எப்போதும் படிக்கும் ஆராயும் திருவாசகத்தை படிப்போம், அவரிடம் அது குறித்து உரையாட முடியும், அவரை இன்னும் நம்மை நோக்கி ஈர்க்க முடியுமென அவ்வயதில் முடிவெடுத்து அந்தப் பதிகங்களை படித்து மனனம் செய்தேன் என்றாலும் ‘திருப்பள்ளியெழுச்சி’யை முதலில் எனக்கு அறிமுகப்படுத்தியது டேப்ரெக்கார்டரிலிருந்து இறங்கிய தருமபுரம் சுவாமிநாதனின் குரல்தான்.

மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் படித்த போது மயிலாடுதுறையிலிருந்து தருமபுரத்தைக் கடந்துதான் பயணிக்கவேண்டும். ‘தருமபுரம் ஆதீனம்’ என்ற அந்த வளைவை பார்த்துக் கொண்டே பயணித்திருக்கிறேன். உள்ளே சென்று அவரை பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை ஃபங்க் தலையும் பேகி பேண்ட்டும் கோவாடிஸ் செருப்பும் கொண்ட அவ்வயதில். ஆனால், தரும்புரம் சுவாமிநாதனின் குரல்மட்டும் ஒலித்துக் கொண்டேயிருக்கும் என் தலைக்குள்ளே. 

என் வகுப்புகளில் சிலதிலும் தரும்புரம் சுவாமிநாதனின் ‘வேலுண்டு வினையில்லை…’ பாடலை ஒலிக்க விடுவதுண்டு எப்போதாவது.

குன்றக்குடி அடிகளாரோடு அவரது ஆதீனத்தில் கொண்ட சந்திப்பின் தருணங்களில், பல்வேறு இடங்களில் பதிகங்களை இசைக்கும் ஓதுவார்களை காண நேரிடுகையில் தருமபுரம் சுவாமிநாதன் தோன்றி மறைவார் தலைக்குள்ளே, ஒரு முறை கூட நேரில் பார்த்தில்லை அவரை என்ற போதும்.

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு வம்பெனப் பழுத்து….’

‘சீர் உடைக் கழலே…’ ‘செல்வமே… சிவபெருமானே!’ எனும் போது குரல் உயர்ந்து ஆனால் கனிந்து நிற்கும். அடுத்து, ‘எம்பொருட்டு உனை சிக்பெனப் பிடித்தேன்!’ எனும் போதுசிக்கெனப் பிடித்தேவிடுவார். அடுத்த வரியான ‘எங்கெழுந்தருளுவது இனியே!’வை விட்டுவிடுவேன் வேண்டாமென. ‘சிக்கெனப் பிடித்தேன்’ போதும் என்று நிற்பேன்.

தரும்புரம் சுவாதிநாதனின் குரல் வழியே பாடல்கள் கேட்டது ஓர் அனுபவம். அப்படியொரு சூழலை வீட்டில் உருவாக்கிய என் தந்தைக்கு என்றும் கடமைப்பட்டவன் நான்.

இன்று இந்த வரிகளைப் பார்க்கையில் என் தந்தையும், தருமபுரம் சுவாமிநாதனும் வந்து போகிறார்கள் என்னுள்ளே.  உடலை விட்டுவிட்டு உயிராக சிவபுரத்திற்குப் போன அவரது குரல் என் மண்டைக்குள் ஒலிக்கிறது இன்னும்….

‘உம்பர்கட்கரசே ஒழிவற நிறைந்த
யோகமே ஊற்றையேன் தனக்கு…’

– பரமன் பச்சைமுத்து
மயிலாப்பூர்
19.09.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *