அமெரிக்கர்களைப் போல இங்குள்ளவர்களுக்கும் வருகிறதே அல்சைமர் நோய்?

கேள்வி: அமெரிக்கர்களைப் போல இப்போது இங்குள்ளவர்களுக்கும் அதிகமாக வருகிறதே அல்சைமர் எனும் மறதி நோய். நம் முன்னோர்கள் உணவுப் பழக்கத்தை விட்டதால்தானே இந்த நோய் வந்துள்ளது?

பரமன்: ஒரு மருத்துவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்வியை நமக்கு அனுப்பி வைத்துள்ளீர்கள்.

அமெரிக்கர்களுக்கு மட்டுமே வந்த அல்சைமர் நோய் உணவு சீர்கேடால் இந்தியர்களுக்கும் வருகிறது என போகிற போக்கில் ‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல’ வகையில் கிளப்பி விடுகிறவர்கள் உண்டு. இதில் உண்மையில்லை. இதன் அடிப்படை வேறு.

பாரம்பரிய உணவு நல்லது என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. ஆனால், அல்சைமர் அதிகரிப்பு காட்டும் தரவுகள் சொல்லும் உண்மை வேறு.

அல்சைமர் என்பது பொதுவாக முதியவர்களை தாக்கும் நோய், நரம்பு தேய்மானத்தால் வரும் நோய், மூளை செல்களில் அதீதமாகப் படியும் ஒரு வகை புரோட்டீன்களால்  வரும் நோய் என்றெல்லாம் சொல்கிறார்கள் மருத்துவர்கள். அமெரிக்கர்களின் சராசரி ஆயுள்காலம் அதிகம். அதிக முதியவர்கள் அங்கிருந்தனர். அவர்களுக்கு வந்த அல்சைமர் அதிகம் தெரிய வந்தது.

‘முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல!’ என்று எவ்வளவு பீற்றினாலும், இங்கு சராசரி ஆயுட்காலம் அதிகமான வயதைக் கொண்டிருக்கவில்லை முன்பு என்ற உண்மையே உணரவே வேண்டியுள்ளது. உங்கள் வீட்டில், உங்கள் உறவினர்கள் வீட்டில் வாழ்ந்து மறைந்த பத்து முதியவர்களின் வயதைக் கணக்கிட்டுப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

‘அந்தக் காலத்தில் கூழ் குடிச்சாங்க, கலி சாப்பிட்டாங்க, குதிரைவாலி சாப்பிட்டாங்க!’ ‘தமிழன், தமிழன்!’ என்று உணர்ச்சி வசப்பட்டு உண்மையை கவனிக்க மறுப்பவர் நீங்கள் என்றால் இந்த பதிலை தவிர்த்து விட்டு வேறு கேள்விக்கு போகவும். நானும் தமிழன்தான் தமிழ் உணர்வுள்ளவன்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

1950ல் நம்மூரின் சராசரி ஆயுட்காலம் 35.21 வயது. 1060ல் 41.13. 1970ல் சராசரி ஆயுட்காலம் 47.41. 1990ல் ஆயுட்காலம் 57.66. 2000ல் ஆயுட்காலம் 62.68 வயது.  2022ல் ஆயுட்காலம் 70.19 வயது.  இதுதான் அசல் தரவுகள் காட்டும் உண்மை. நீங்களே பல்வேறு இணையதளங்களில் இதை சோதிக்கலாம். நம் முன்னோர்களை  விட நமக்கு சராசரி ஆயுட்காலம் கூடியுள்ளது என்பதை கவனியுங்கள்.

அமெரிக்காவை விட சராசரி ஆயுட்காலம் அதிகம் கொண்ட ஜப்பான் மக்களில் அதிகம் பேர் அல்சைமர் நோயால் தாக்கப்பட்டுள்ளனர் என்பதை கவனிக்கவும்.

ஊட்டச்சத்து குறைபாடு களைதல், நோய் கணிக்கும் உயர் வகை கருவிகள்,நோய் தீர்க்க அதி நுட்பக் கருவிகள், உடற்பயிற்சி, ஊட்டச்சத்துள்ள உணவுகள், உயிர் காக்கும் மருந்துகள் என வளர்ந்து விட்டது உலகம்.  பிரசவத்தில் இறப்பு என்பது குறைந்து இப்போது இல்லவே இல்லை எனும் நிலைக்கு நம் ஊர் உயர்ந்துள்ளதை கண் முன்னேயே பார்க்கிறோம்.

வளர்ச்சிகளும் வாழ்க்கை தரமும் கூடியுள்ள இன்றைய காலகட்டத்தில், இங்கே சராசரி ஆயுள்காலம் கூடி உள்ளது.   ஆயுள்காலம் கூடியுள்ள நிலையில் வயதானவர்கள் அதிகம் இருப்பதனால், முதிய வயதில் வரும் அல்சைமர் எனும் மறதி நோய் இப்போது தெரிகிறது.

இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் மணக்குடி கிராமத்தில் பூங்காவனம் பாட்டிக்கு இது வந்தது. அப்போது இதற்கு ‘அல்சைமர்’ என்று பெயர் என்று எங்கள் யாருக்கும் தெரியாது. இதை வைத்து 5 ஆண்டுகளுக்கு முன்பு ‘பொரி கடலை’ பகுதியில் ஒரு கதையே எழுதியிருந்தேன்.

நோய்கள் பற்றி, அவற்றின் தன்மை பற்றி நிறைய விழிப்புணர்வு வந்து விட்டது, கண்டறியும் அளவிற்கு வளர்ச்சி வந்துவிட்டது என்பது புறந்தள்ள முடியா உண்மை.

அல்சைமர் பற்றி சித்த மருத்துவத்தில் நேரடியாக எதுவும் குறிப்பு இல்லையென்றாலும், நரம்பு தேய்மானத்தைத் தடுக்கும் ‘அஸ்வ கந்தா’ எனப்படும் அமுக்கரா சூரணம், வல்லாரை லேகியம் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்வது அல்சைமர் வராமல் தடுக்கும் என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.

மிதமான உடற்பயிற்சி, போதிய அளவு ஓய்வு, சரியான உணவு, மனப்பயிற்சி எனும் தவம், மூச்சுப்பயிற்சி, மகிழ்ச்சியான மனநிலை இவை நம்மை காக்கும் என்பது என் பரிந்துரை.

இவற்றையெல்லாம் தாண்டி அல்சைமர் அறிகுறிகள் வந்தால் ஒரு நல்ல மருத்துவரை அனுகுவதே சாலச் சிறந்தது.

‘வளர்ச்சி -,பதில்கள்’ பகுதியிலிருந்து.

‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *