‘பொன்னியின் செல்வன் – பாகம் 1’ – திரை விமர்சனம.்: பரமன் பச்சைமுத்து:

எழுபதாண்டுகளுக்கு முன்பு கல்கி எழுதி வாசகர்களின் பெரும் வரவேற்பை பெற்ற ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய கதையை நாற்பதாண்டுகளாக முயற்சித்து கடைசியில் திரைக்கதை செய்து இயக்கி முடித்திருக்கிறார் மணிரத்னம்.

‘ப்யூட்டி அண்ட் த பீஸ்ட்’ ‘ஸ்பைடர் மேன்’ ‘அலாவுதீன்’ போல நாவல்களை அப்படியே திரை மொழிக்கு மாற்றும் முயற்சி போல கல்கியின் மூல கதையையும் வசனங்களையும் தொன்னூறு சதவீதம் அப்படியே திரைக்கு கடத்தியிருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராயை, த்ரிஷாவை, அலை கடலை, பொன்னி நதியை, இலங்கை காடுகளை அரண்மனையை என மணிரத்னத்தின் கண்களாக மாறி அட்டகாச அழகாக காட்டுகிறார் ரவிவர்மன்.  தேவராளன் ஆட்டம், பொன்னி நதி, சோழா சோழா என திரையில் விரியும் பாடல்களிலும் பாடல்கள் தாண்டி படம் நெடுகிலும் பின்னணியிலும் கலக்குகிறார் ஏ ஆர் ரஹ்மான்.

ஆதித்த கரிகாலனாக விக்ரம் மிரட்டுகிறார்.  வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், நந்தினியாக ஜஸ்வர்யா ராயும், ஆழ்வார்க்கடியவனாக ஜெயராமும் பொருந்துகிறார்கள். 

படம் தொடங்கும் கொஞ்ச நேரத்தில் நம்மை சோழ நாட்டுக் காலத்திற்கு கொண்டு செல்கிறார்கள்.  கல்கியின் மூலக்கதையில் வரும் ‘குதிரை சம்பாதித்து வருகிறேன்’ ‘காத தூரம்’ ‘துவந்த யுத்தம்’ ‘தூமகேது’ ‘விண்ணகரம்’ போன்ற வார்த்தைப் பயன்பாடுகளை முற்றிலும் தவிர்த்து கூடுமானவரை கல்கி எழுதிய அதே சுவையில் ஆனால் எல்லோர்க்கும் புரியும் எளிய மொழியில் என மாற்றியிருக்கிறார்கள்.

கல்கியின் பொன்னியின் செல்வனை படித்தவர்களுக்கு சில பிரச்சினைகள், படிக்காமல் நேரடியாக படம் பார்ப்பவர்களுக்கு சில பிரச்சினைகள் என இரண்டு பக்கமும் சில எழுகின்றன படம் பார்க்கையில்.

புனைவை படிக்காதவர்களுக்கு –
பாத்திரங்களைப் பற்றி கொஞ்சம் விளக்கியிருந்தால் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்திருக்கும்.  ‘காற்று அசைய வில்லை!’ என்று அருண்மொழிவர்மன் பூங்குழலியிடம் சொல்லும் காட்சியும் அடுத்து நடப்பதும் கதையை படித்தவர்களுக்குத் தெரியும், படிக்காதவர்களுக்கு புயல் வரப்போகிறது என்பது புரியாமல் போகலாம். ‘பழுவேட்டரையர் நிதியமைச்சர்தானே! அப்புறம் ஏன் அரசன்னு சொல்றாங்க? அரசர் சுந்தர சோழர்தானே?’ என கேள்வியோடே போகிறான் படம் பார்த்து வெளியில் வரும் கதைபடித்திராத ரசிகன்.

கல்கியை படித்தவர்களுக்கு – கதாபாத்திரங்களைப் பற்றிய அவர்கள் ஏற்கனவே கொண்டிருக்கும் வடிவத்தை ஈடு செய்ய வேண்டிய சவால் இயக்குநருக்கு. சில பாத்திரங்களில் அதை செய்திருக்கிறார்கள். பலதில் திணறல்தான். பொன்னியின் செல்வரின் அறிமுகக் காட்சி மிக அருமையாக இருக்கும் புதினத்தில், படத்தில் சட்டென்று சாதாரணமாக நிகழ்கிறது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாமல். வந்தியத் தேவனும் குந்தவையும் சந்திக்கும் ‘குடந்தை சோதிடர்’வீடு, அரிசிலாற்றங்கரை ‘முதலை – ஈட்டி எறிதல்’ போன்றவை நீளம் கருதி படத்தில் இல்லை.

இது வரை எந்த சோழரும் கொண்டிராத சிவப்பழகையும் வசீகரத்தையும் கொண்டிருந்தார் என்பதற்காகவே இரண்டாம் பராந்தக சோழனை ‘சுந்தர சோழன்’ என்றழைத்தார்கள் என்பது கல்கி சொல்லும் புனைவு. அந்த சுந்தர சோழ வடிவத்திற்கு பிரகாஷ் ராஜ்ஜை பொருத்திப் பார்க்க முடியவில்லை.

கல்கி எழுதாத சிலவற்றை படத்திற்காக சேர்த்திருக்கிறார்கள். பழுவேட்டரையர்களும் சிற்றரசர்களும் செய்யும் ரகசிய கூட்டத்திற்குள் திடுமென நுழைந்து இளவரசர்கள் திருமணம் பற்றி குந்தவை பேசுவது சிறப்பான கல்கியில் இல்லாத சேர்ப்பு.  நடக்கவே முடியாமல் கால்கள் செயலிழந்து படுக்கையிலேயே இருக்கும் சுந்தர சோழரை நடப்பவராக காட்டியிருக்கிறார்கள்.

மிக பிரமாண்டமாக சிறப்பான திரையாக்கம் செய்திருக்கிறார்கள்.

பூங்குழலியை அழைத்துக் கொண்டு யானையின் மேலேறி் யானையின் காதில் அருண்மொழிவர்மன் ஏதோ பேச, அது ஓடத்தொடங்கிற ரசிகனை இழுக்க வேண்டிய கல்கி எழுதிய அந்த காட்சி எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் சாதாரணமாக கடந்து போவதெல்லாம் பெரிய இழப்பு.  ரசிகனை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் அல்லது அவனை இழுக்கும் வகையில் காட்சிகள் இல்லை என்பது உண்மை.  அதனால்தான் அருண்மொழி அறிமுகம் ஆகும் வரை ஆதித்த கரிகாலன் ரசிகர்களின் மனதில் இருப்பார், அருண்மொழி வந்ததும் அருண்மொழிதான் இருப்பார் என்று கல்கியில் இருந்தது  திரையில் மாறி அருண்மொழி வந்த பிறகும் ஆதித்த கரிகாலனே ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி நிற்கும் படி ஆகிறது.

வி-டாக்கிஸ் வெர்டிக்ட்: ‘பொன்னியின் செல்வன்’ – நல்ல முயற்சி, நல்ல திரையாக்கம். எதிர்பார்ப்புகள் இல்லாமல் சென்று நிச்சயம் பாருங்கள்

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#PonniyinSelvan #PonniyinSelvanPart1 #PonniyinSelvanReview #ParamanReview #Ps1 #PsReview #Maniratnam #ARRahman #Trisha #AishwaryaRaiBachchan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *