என்னவெல்லாஞ் செய்யும் இத் திருப்பாவை வரிகள்…

🌸

இன்று புரட்டாசி சனி – சைவ நெறியில் பழகிய எங்கள் வீட்டில் பெருமாளுக்குத் தளிகை. மகள்களும் ஊரிலிருந்து வந்துள்ளதால் இந்த சனி அன்று என்று முடிவு.

நெற்றியில் நீறு சைவ பதிகங்களே சொல்லி பழகிய நமக்கு பெருமாளை போற்றிடத் தெரியவில்லை. ‘ஆதி மூலமே!’ என்றழைத்தற்கே வந்தவனாச்சே என்று கட்டு கட்டினாலும், ‘அரங்கா… பார்த்தசாரதி… பெருமாளே!’ தாண்டி சொல்லத் தெரிவதில்லை நமக்கு என்பதே உண்மை.

இவ்வாண்டு திருப்பாவையை துணை கொண்டேன். ஒரு பாசுரம் சாத்தி ஒரு மலர் சாத்துவது என்பதென் முடிவு.

எல்லோர் கையிலும் மலர்கள், பெருங்குரலெடுத்து ஒவ்வொரு பாசுரமாக போகத் தொடங்கினேன்.

‘மாயனை வடமதுரை மைந்தனை! தூய பெருநீர் யமுனை துறைவனை, ஆயர் குலத்தில் தோன்றும் அணிவிளக்கை…’

அருகில் நிற்கும் அத்தை நெகிழ்கிறார். அடுத்து நிற்கும் மனைவி பிரியா கண்மூடி கரைகிறாள்.

திருப்பாவை கரைக்கிறது.

‘அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி! சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி! பொன்றகச் சகடம் உதைத்தாய்!’

‘கூடாரை வெல்லுஞ் சீர்க் கோவிந்தா! உன்தனை பாடிப் பறைகொண்டு யாம் பெறும் சம்மாணம்…’

உருக்கியது. வேறு நிலை அனுபவம். அன்னம் படைத்து போற்றி வணங்கி பூசனைகள் முடித்து இலை விரித்து உண்பதற்கு உட்கார்ந்த பின்னும் அனுபவம் கசிகிறது. நெகிழல் நிற்கவில்லை.

போற்றலும் புகழலும் பூசனையும் பக்தியும் பாசுரமுமென எதுவுமறியா என்னைப் போலெளியவனுக்கே இவ்வளவு உருக்கம் தருமென்றால், என்னவெல்லாம் செய்யும் இத் திருப்பாவை வரிகள்!

சாமானியனையும் சாமியிடம் நகர்த்திவிடும் இவ்வரிகளைத் தந்த ஆண்டாள் திருவடி சரணம்! இத்தனையாண்டுகள் ஆன பின்னும் அன்றெழுதிய திருப்பாவையை இன்று வரை காத்து இணையம் வரை கொண்டு வந்து சேர்த்த அத்தனை பேருக்கும் மலர்ச்சி வணக்கம்.

‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலானி தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற
நெடுமாலே!’

  • பரமன் பச்சைமுத்து
    புரட்டாசி – சனி
    சென்னை
    01.10.2022

எதுவும் தெரியா நம்மைப்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *