டைலர் கட அல்லது தீபாவளி…

இரவும் பகலுமென எல்லா நேரமும் இயங்கும் ‘டைலர் கடை’.  ஆயத்த ஆடைகளை வாங்கி அணிவதென்பது அவ்வளவு பழக்கத்திலில்லா அந்நாட்களில் துணியெடுத்து தையல் கடைக்கே வந்தனர் மக்கள். கந்தசாமி டைலர்
மொத்த மணக்குடிக்கும் மட்டுமல்ல பக்கத்து ஊர்களான குறியாமங்கலம், ஆயிபுரம் என சுற்றுப் பகுதிகளின் எல்லா வீடுகளுக்கும் எல்லோருக்குமான ஒரே தையல்காரர்.

கந்தசாமி டைலர் என்பது அவர் பெயரென்றாலும், ‘டைலர்’ என்பதே அவருக்கான பெயர். ரங்கநாத ஐயர் வீட்டு சிமெண்ட் சுவரும் கூரையும் கொண்ட மாட்டுத்தொழுவத்தின் முன்பகுதியில் சுவரெழுப்பி ஏற்படுத்தப்பட்ட சிறிய இடத்தில் இயங்கியது அவரது டைலர் கடை. டைலர் கடை என்பது மக்களுக்கு வழக்கில் ‘டைலர் கட’ ஆனது.

தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பு தொடங்கும் டைலர் கட திருவிழா தீபாவளியன்று மதியம் வரையிலும் நிகழும். சிதம்பரம் கஸ்தூரிபாயிலோ புவனகிரி கோவிந்தராஜூலு செட்டியார் கடையிலோ துணியெடுத்துக் கொண்டு வந்து டைலர் கடயில் தருவார்கள்.  டைலர் அளவெடுத்து ஒரு நோட்டுப்புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டு, நீல நிற க்ரையான் போல ஏதோவொன்றினால் துணியில் குறியீடு போல ஏதோ எழுதி வைப்பார்.  எப்போது தைத்துக் குடுப்பார் என்று எவருக்கும் தெரியாது. தீபாவளிக்கு முன்பு தந்துவிடுவார்தான். தூங்கி எழுந்ததிலிருந்து ‘புதுச் சட்டை புதுச் சட்டை!’ என துடிக்கும், இரவில் தூங்கும் போதும் ‘புதுச்சட்டை புதுச்சட்டை’ என கனவில் பிதற்றும் சிறுவர்களுக்கு இது புரியாதே.

‘டைலர்… என் புது சட்டைய எப்ப தச்சி தருவீங்க?!’ என்ற கேள்வியும், அதைக் கேட்க முடியாமல் தடுக்கும் வெட்கமும் கொண்டு ஏக்கமாக டைலர் கடயை வந்து வந்து பார்ப்பர். விழிகளால் விழுங்கிக் கொண்டு ஏதும் கேட்காமலேயே போய்விடுவர். ‘என் சட்டையை மட்டும் குடுக்க மாட்றாரு!’ என்பது கோலி விளையாடும் போது சிறுவர்களின் பொதுமொழியாக இருக்கும்.

மணக்குடியில் பெரும்பாலான வீடுகளில் மர உரலோ கல் உரலோ இருக்கும். ‘குந்தாணி’ என விளிக்கப்படும் மர உரலை தயார் செய்வார்கள் அம்மாவும் பாட்டியும், பத்து நாளைக்கு முன்பாகவே.  ஆளுயர உலக்கையின் உலோக பூண் சரிபார்ப்பார்கள். தலைக்குளத்தார் வந்து செப்பனிட்டு தயார் செய்வார்.

புவனகிரி கடைத்தெருவில் திடீரென்று வெடி கடைகள் (பட்டாசு கடைகள்) முளைக்கும். ‘ஜெயா காபி’ தீபாவளி நெருங்கையில் வெடி கடையாக மாறும். ‘லால் அண்ட் கோ’ பொது வணிகம் – மின் வணிகம் வெடிகடையாக உருமாறி நிற்கும். பள்ளிக்குப் போகும் போதும் வரும்போதும் வெடிகடை வழியாகவே போவோம்.

‘ஏய்… அது 100 சரம்டா. கொளுத்தி பத்த வச்சா… பட படன்னு 100 வெடிக்கும்!’

‘இது என்ன பெருசு? டிடிகே கடையில 1000 சரம் வச்சாங்க. சாயந்திரம் வச்சாங்க. அடுத்த நாளு வரைக்கும் பட் பட் பட்டுன்னு வெடிச்சிட்டே இருந்தது!’

‘அப்படியா!’

‘முட்லூருலேருந்து எங்கப்பா நாட்டு வெடி காக்கி வெடி வாங்கிட்டு வந்துட்டாரு!’

‘ஏய்… எங்கப்பா சீனி வெடி, லட்சுமி வெடியோட அனுகுண்டு வாங்கிட்டு வரேன்னு சொல்லிருக்காரு!’

‘ஆர் எக்ஸ் 100 பாய் இருக்கார்ல அவரு டபுள் ஷாட் ராக்கெட் வெடிப்பாரு. கீழ வெடிச்சிட்டு மேலயும்  போய் வெடிக்கும், தெரிஞ்சிக்கோ!’

பத்து நாட்களும் கனவிலும் நினைவிலும் வெடிகளே வந்து போகும். ஒரு வழியாய் வெடிகள் வாங்கி வருவார் அப்பா. முறத்தில் வெடிகளை நிரப்பி கூரையின் மேல் வைத்து காய வைப்பார் அம்மா, நமுத்துப் போய்விடக் கூடாதென்பதற்காக.  தவமாய் தவமிருந்து வெடிகளைப் பெற்ற போது, பெரும் வேதனை வரும் ஐப்பசியின் அடைமழை என்ற பெயரில்.  பள்ளியில் கணக்கு வாத்தியார் பீரியடில் சரியாக முறத்தில் வைத்து காய வைத்த வெடி நினைவுக்கு வரும், வெளியே மழை ‘சோ’வென வெளுத்து வாங்கும். சிறுவர்கள் சிலருக்கு அழுகையே வரும். பள்ளியின் கடைசி பெல் அடித்ததும் செருப்பைக் கழற்றிக் கையிலெடுத்துக் கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க வீட்டுக்கு ஓடிவந்து, ‘அம்மா…. வெடி எங்க?’ என்று பதறினால், அடுக்களைக்கு அருகில் திடீர் அடுப்பு ஒன்றை வைத்து எண்ணெய்ச்சட்டி ‘சல் சலசல’ வென சத்தமிட அதனருகில் அமர்ந்து கொண்டிருக்கும் அம்மா சிரிப்பார்.

ஈர் இரும்புக் குவளைகள் கொண்ட அச்சை  கொதிக்கும் எண்ணை கொண்ட வாணலியில் அழித்திப் பிழிந்து வெள்ளை வண்ணத்தில் கம்பியாக மாவை மாற்றி வரைந்து சுடச்சுட முறுக்கு சுடுவார். எண்ணெய்யிலிருந்து எடுத்து வடிய வைத்த முறுக்குகளை எவர்சில்வர் வாளியில் அடுக்குவார் பாட்டி. வெடிகளை மறந்து முறுக்கைக் கண்டு பாய்ந்து, ‘ஏய்… சுடும்டா பாத்து!’ என்று அவர்கள் சொல்வதை காதில் வாங்காமல் பிட்டு வாயில் இட்டு சூட்டில், ‘ஃஊஊஊஊ!’ என்று நாக்கு தள்ளுவோம்.

‘காலையில இந்த பச்சரியை இடிச்சி அதிரசம் பண்ணிடலாம்!’ என்று குந்தாணியை தயார் செய்வார் பாட்டி.

‘வங்கக்கடலில் உருவாகியுள்ள தாழ்வழுத்த மண்டலம் ராயலசீமா நோக்கி கரையேறும். அடுத்த இருபத்திநான்கு மணி நேரத்திற்கு கன மழை இருக்கலாம்!’ என வானிலை அறிக்கை சொல்லும் ரேடியோ.

தீபாவளிக்கு முந்தைய இரவிற்கு மட்டும் இருபது மணி நேரம் என்பது போல நீண்ட இரவாகத் தெரியும்.

இரவெல்லாம் மழைச் சத்தமும் ‘மழைவேண்டி கத்துகிறது!’ என்று சொல்லப்படும் தவளைகளின் சத்தமும் இரவை பயங்கரமாக மாற்ற, எங்கோ எவரோ ‘டமால்’ ‘டுமீல்’ என்று வெடி வெடிக்க, விழி மூடியும் உறக்கம் வராமல் ‘நாளைக்குத் தீவாளி! புது சட்டை! அம்மா சட்டையையெல்லாம் எடுத்து காலர்ல மஞ்சள் சந்தனம் தடவி வச்சிட்டாங்க! உஹ்ஹாஹாஹா!’ மனம் பாயும்.  எப்போது தூங்கினோம் என தெரியாது.

டைலர் கட, வெடி, முறுக்கு, பொடலங்காய் உருண்டை (பொறி விளங்காய் உருண்டை), புது உடை என ஒரு மாத கால ஆயத்தம் தீபாவளி உணர்வுகளில் முக்கி ஊற வைத்து எடுத்து தீபாவளியன்று திகட்டத் திகட்ட அனுபவிக்க வைக்கும்.  தீபாவளி என்பது ஒரு நாள் அனுபவமல்ல, ஒரு மாத தயாராகும் அனுபவம்.

….

இதோ, காலை வரை அலுவலில் கரைந்து, மதியம் புறப்பட்டு சென்னையிலிருந்து மகள்களோடும் மனைவியோடும் மணக்குடிக்கு வருகிறேன்.

டைலரிடம் உதவியாளராக இருந்து கற்றுக் கொண்ட கருணாகரன் மாமா கரூர் பக்கம் எங்கேயோ ஏற்றுமதி நிறுவனத்தில் தையல் குழுவின் மேனேஜராக இருக்கிறார். பின்னாளில் உதவியாளராக சேர்ந்த முத்து, புவனகிரியில் தையலகம் நடத்துகிறார்.  கந்தசாமி டைலர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். அவர் கடை இருந்த இடம் வெறிச்சோடி இருக்கிறது. சிறுவர்கள் இல்லை.

‘இந்த நேரத்தில் மட்டும்தான் வெடி வெடிக்க வேண்டும். இல்லையென்றால் அவ்வளவுதான்!’ என்று நிபந்தனை உத்தரவு இருக்கிறது. 

வெடி சத்தங்கள் இல்லை.

அதே மணக்குடி. அதே மழை. அதே நான். நாளை தீபாவளி. தீபாவளி இப்போதெல்லாம் ஒரு நாள் அனுபவம்.

தீபாவளி வாழ்த்துகள்!

– பரமன் பச்சைமுத்து
மணக்குடி
22.10.2022

Facebook.com/ParamanPachaimuthu

#Manakkudi #Paraman #ParamanPachaimuthu #WriterParaman #ParamanDeepavali #ParamanTouring #Deepavali #ManakkudiTailor #Chidambaram #Bhuvanagiri

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *