குஞ்சய்யர்

அதற்கு முன்னால் அது மணக்குடியில் நடந்திருக்கிறதாவென தெரியவில்லை. 

குஞ்சய்யரும் பலராம ஐயரும்தான் ‘ஏ சிவா! வாடா!’ என்று என்னை அதற்கு அழைத்துவிட்டு முன்னே நடந்து போனார்கள்.

அந்தி சாய்ந்ததும் வீடு திரும்புவார்கள், பெண் குழந்தைகள் அலங்கரித்துக் கொள்வார்கள், மணக்க மணக்க சமையல் செய்வார்கள், விளக்கு வைத்ததும் உண்பார்கள், ஊரே சீக்கிரம் உறங்கி விடும் என்பது என் மணக்குடி சிறுவயது நினைவுகளில் தளும்பி நிற்கும் பதிவு.

சிறுவர்களானதால் சீக்கிரமே உறங்க வைக்கப்பட்டதாலோ, விளக்கு வைத்த பிறகு அதிகம் வெளியில் போவதில்லை என்பதாலோ அப்படியொரு நிகழ்வை என் சிறுவயதில் நான் கண்டதுமில்லை அறிந்ததுமில்லை.

கல்லூரி செமஸ்டர் விடுமுறைக்கோ எதற்கோ மணக்குடிக்கு வந்திருந்த போதுதான் என் வீட்டை கடந்து தெருவில் நடந்து சிவன் கோவிலுக்குப் போன குஞ்சய்யரும் பலராமய்யரும், மஞ்சள் குண்டு பல்பு விளக்கொளியில் வீட்டின் உள்ளே நின்று கொண்டிருந்த என்னை நோக்கிக் குரலெழுப்பி விட்டுப் போயினர்.

குரல் கேட்டு வெளியே வருவதற்குள் முருங்கைக்கீரையம்மாள் வீட்டைக்கடந்து கோவிலுக்கருகில் சென்று விட்டனர்.  சிவன் கோவில் வாசலில் நிறைய ஆட்கள் நிற்பதும் பேசுவதும் தெரிகிறது கேட்கிறது.  ஆவல் அதிகரிக்க ஓட்டமும் நடையுமாய் போய் நின்றேன்.

திகைத்து பிரமித்து நின்றுவிட்டேன். கண்ணில் ஏதோ குறைபாடா… பார்வை கோளாறா?  கண்களை நிமிட்டிப் பார்த்தாலும் மூடித் திறந்தாலும் அதே காட்சி.   மணக்குடி சிவன் கோவிலின் கறுப்பு சிவலிங்கம் பளீரென வெள்ளையாக. முழு சிவலிங்கமும் வெள்ளை வெளேரென.  விளக்கொளியில் நன்றாகத் தெரிகிறது வெள்ளையாக. ‘என்னாச்சு! சிவலிங்கத்துக்கு?! என்னவோ நடந்துருக்கு! அதான் இவங்க நம்மள கூப்டிருக்காங்க!’

அப்பா ஊரிலில்லை. இருந்திருந்தால் தெரிந்திருக்கும். புவனகிரிக்கோ சிதம்பரத்திற்கோ போயிருக்கிறார்.

‘டேய் பசங்களா, போய் பாத்திரம் கொண்டாங்கடா!’  டீக்கடை மருதையன் சிறுவர்களைப் பார்த்து சொல்லிக் கொண்டிருந்தார்.

பழனிவேல் உடையாரை, சண்முகம் சித்தப்பாவை, கார்வாரி படையாச்சியைக் கடந்து பூராயர் அண்ணன் அருகில் போய் நிற்கிறேன். நெருங்க நெருங்க… சிவலிங்கத்தின் மீது ஏதோ பூசப்பட்டுள்ளது படிந்துள்ளது என்று புரிந்தது.

கற்பூரம் ஏற்றப்பட்டு தீபம் காட்டப்படுகிறது.

‘ஓம் சிவாய நமஹ
ஓம் சம்பவே நமஹ
ஓம் பிநாகினே நமஹ
ஓம் சசிசேகராய நமஹ
ஓம் வாமதேவாய நமஹ
ஓம் சங்கராய நமஹ
ஓம் சூலபாணயே நமஹ…’  என்பது போல எதையோ பெருங்குரலெடுத்து சொல்லிக் கொண்டே மணியடித்து தீபங்காட்டினார் உள்ளே ஐயர்.

( மந்திரம்ல்லாம் கரெக்ட்டான்னு தெரியலே. நமக்கு மந்திரங்கள் தெரியாது! இவை சிவன் கோவிலில் தீபம் காட்டப்படும் போது எப்போதும் சொல்லப்படுபவை, காதில் கேட்டவை )

‘சிவா… எப்ப வந்தே? காலேஜ் லீவா? ஐப்பசி பௌர்ணமியில்ல, அதான் சிவனுக்கு அன்ன அபிஷேகம் பண்றோம்!’ என்றார் பலராமய்யர். என் வகுப்புத் தோழன் நட்ராஜின் அப்பா.

‘ஓ… அன்ன அபிஷேகமா? அது சோறா லிங்கத்து மேல!’

‘கும்பிடுங்கோ… கும்பிடுங்கோ!’

‘சிவனே! சிவனே!’

‘இந்த வருஷம் இந்த ஊர்ல நல்லா வெளையனும், நல்லா செழிப்பா இருக்கனும், உணவு கிணைக்கணும்! சுவாமி!’

‘ஏய்… எல்லாருக்கும் உண்டு. வரிசையில வாங்க!’ குஞ்சய்யர் பிள்ளைகளை அழைத்தார்.

படைத்த சோறு சிவலிங்கத்திடமிருந்து எடுத்து எல்லோருக்கும் கொடுக்கப்பட்டது. சிறுவர்கள் பாத்திரங்களில் சோற்றை நிறைத்துக் கொண்டு போனார்கள்.

‘இந்த சிவா!’

கை நிறைய சோறு தரப்பட்டது. தின்று கொண்டே வீட்டிற்கு வந்தேன். 

‘அன்னாபிஷேகம்! இதற்கு முன்பு பார்த்தும் இல்லை, கேள்விப்பட்டதும் இல்லை!சிவலிங்கம் முழுதும் வெள்ளையாய், சமைத்த சோறு கொட்டப்பட்டு! சுடச்சுட கொட்டியிருப்பார்களோ! எத்தனை படி அரிசி போட்டுருப்பாங்க. எவ்வளவு பெரிய பாத்திரத்தில வடிச்சிருப்பாங்க! நாளை காலை அம்மாவிடம் கேட்க வேண்டும்.’  உறங்கப் போய்விட்டேன். தூரத்தில் டிவிஎஸ் சாம்ப் வண்டி சத்தம். அப்பா வருகிறார். குஞ்சய்யர் குரல் கேட்டுக்கொண்டயிருந்தது.

‘இன்று ஐப்பசி பௌர்ணமி – தஞ்சை பெருவுடையார் கோவிலில் அன்ன அபிஷேகம்’ என்று பாலிமர் செய்திகளில் காட்டினார்கள். எனக்கு மணக்குடி சிவன் கோவில்,  சோறு கொட்டப்பட்டு வெள்ளையாய் சிவலிங்கம் நினைவில் வந்தன. கூடவே குஞ்சய்யரும். குஞ்சய்யர் இறந்து பல ஆண்டுகள் ஆகின்றன.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
ஐப்பசி – முழு நிலவு நாள்
07.11.2022

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *