முதலை இருக்கு, பாத்து…

‘முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து பரமன்! எறங்க வேண்டாம்!’ என்று எச்சரித்தார் உள்ளூர்வாசியும் கிராமநிர்வாக அலுவலருமான அன்பு நண்பர்.

…..

சோழதேசத்தின் தானாதிகாரி பெரிய பழுவேட்டரையர் பழுவூரிலிருந்து படகில் பயணிக்கும் போது கரைபுரண்ட வெள்ளத்தின் நீர்ச்சுழலில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டார் என்று கல்கி தனது ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் குறிப்பிட்ட பேராறு இதுதான்.

வந்தியத்தேவன் மீது கோபமும் சந்தேகமும் கொண்டிருந்த பழுவேட்டைரையருக்கு தெளிவு ஏற்பட்டதும் பாண்டிய ஆபத்துதவிகள் பற்றிய சங்கதிகள் தெரிய வருவதும் இவ்வாற்றின் கரையில் உள்ள பாழடைந்த கோவிலில்தான்.

திருச்சியின் திருவரங்கத்தீவின் முக்கொம்பில் காவிரியிலிருந்து கிளையாய் உருவாகி திருச்சி – அரியலூர் – கடலூர் (சிதம்பரம்) – மயிலாடுதுறை – தஞ்சை மாவட்டங்களிடையே பாய்ந்து வளப்படுத்தி பரங்கிப்பேட்டை அருகே வங்காளவிரிகுடாவில் கலக்கிறது இவ்வாறு.

தாய் ஆறான காவிரியை விட மகள் ஆறான இந்த கிளை ஆறு பரந்து விரிந்து பெரிதாக இருப்பது புதிதாய் பார்ப்பவருக்கு வியப்பை தரவே செய்யும். காவிரியின் மொத்த வெள்ளப்பெருக்கையும் வாங்கிக் கொள்ளும் இடம் என்பதால் ‘கொள்ளிடம்’ என்று பெயர் என்கிறார்கள். பெயரை எப்போதும் வீணாக்கும் பிரித்தானிய பயல்களின் காலத்தில் அது ‘கோளோரூன்’ எனப்பட்டது. இன்னும் சில அரசுப் பதிவுகளில் இப்படித்தான் இருக்கிறதாம். (பெயரை மீட்டெடுங்கப்பா!)

மயிலாடுதுறையில் கல்லூரியில் படித்த காலத்தில் பேருந்தில் பயணிக்கையில் கரைபுரண்டு உருண்டு திரண்டு செம்மண் நிறத்தில் ஓடும் கொள்ளிடத்தை பார்ப்பதே ஓரனுபவமாய் இருந்தது. கரிகாற்சோழனை பற்றி கற்பனை செய்ததும் அனுபவம்தான்.

ஆடிப் பெருக்கன்று திருமண மாலைகளை நதிகளில் விட்டு வணங்குவது சோழ தேசத்து வழக்கம். என் அக்காவின் திருமண மாலையை மாமாவோடு வந்து கொள்ளிடத்தில்தான் விட்டோம். அக்கரையிலிருந்த கொள்ளிடம் ஊரில் இறங்கி பாலம் முழுக்க நடந்து இக்கரையிலிருந்த வல்லம்படுகைக்கு வந்து கொள்ளிடம் நதியில் இறங்கி மாலையை விட்டோம். என் திருமண மாலைகளையும் ஓர் ஆடிப்பெருக்கன்று அதே கொள்ளிடத்தில்தான் அதே வல்லம்படுகையில் இறங்கி நீரில் விட்டோம்.

ஒவ்வொரு தீபாவளியின் போதும் ராஜவேலு சித்தப்பாவோடு வாழை இலை, தார் வாங்க கொள்ளிடம் வந்ததும், ஒரு தீபாவளி சமயத்தில் ஆறு மாடுகள் கொள்ளிடத்தில் அடித்துச் சென்றதும் நினைவில் வந்தது. ( ‘பெரிய பழுவேட்டரையர் மட்டும் எப்படி சுழலில் சிக்கி உருட்டி அடித்துச் செல்லப்பட்டு கரை ஒதுங்கி உயிர் தப்பினார்?’ என்று கல்கியைதான் கேட்க வேண்டும். மணிரத்னம் அடுத்த பாகத்தில் எப்படி காட்டுவார் இதை! பார்ப்போம்!)

சிதம்பரத்தில் இரு நாள் வகுப்பு என்ற வந்த எனக்கு, நேற்றிரவே
கொள்ளிடத்தில் போய் கால் நனைக்க வேண்டுமென்று எண்ணமெழ, காலையில் புறப்பட்டுவிட்டேன்.

‘மணி, கொள்ளிடத்தில இருக்கேன். இங்க எங்கியாவது நீ இருந்தன்னா, காஃபி வித் மணிமாறன்! இல்லன்னா, தனியா குடிச்சிட்டு கொள்ளிடத்துல போய் எறங்கப் போறேன்!’

‘பரமன்… பாத்து முதலை இருக்கு, முந்தா நாள் குளிச்சிட்டு இருந்த பசங்களை இழுத்துட்டு போயிருச்சு. பாத்து! எறங்க வேண்டாம்!’

நல்ல நண்பன். சரியான அதிகாரி. சிறப்பாக எச்சரித்து கவனப்படுத்திவிட்டான்.

இறங்காமல் எப்படிக் கால் நனைப்பது. கால் நனையாமல் நதியை உணர்வதெப்படி!? இறங்கிவிட்டோம்!

கொள்ளும் இடமே, கொள்ளிடமே! கர்நாடகாவிலிருந்து வங்காளவிரிகுடா வரை… எத்தனையெத்தனையாண்டுகளாய் ஓடுகிறாய்! எத்தனை அரசுகளை, எத்தனை மன்னர்களை, மனிதர்களை கண்டு கடந்து இன்னும் ஓடுகிறாய்!

வாழ்க!

  • பரமன் பச்சைமுத்து
    கொள்ளிடம்
    30.11.2022

ParamanTouring #MalarchiBatch64 #Chidambaram #ParamanAtKollidam #Kollidam #Coleroon #kollidamriver #Carvery #Chozha #PonniyinSelvan #Pazhvettaraiyar #Paraman #ParamanPachaimuthu #ParamanAtChidambaram

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *