ஆர் எம் ராஜேந்திரன் மணிவிழா

பூசம் நட்சத்திரம் கார்த்திகை மாதம் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுபகிருது ஆண்டு பிறந்தார் இராம. இராஜேந்திரன். 

எதற்கு இது என்பதை சொல்லும் முன் ஒரு சங்கதியைப் பார்த்துவிட வேண்டியிருக்கிறது.

அறுபது நாழிகைகள் கொண்டது ஒரு நாள்,  அறுபது ஆண்டுகள் கொண்டது ஒரு சுழற்சி என்பது இங்கு காலகாலமாக நம் நாட்காட்டிகளும் பஞ்சாங்கங்களும் கொள்ளும் கணக்கீடு. சூரியனை ஒரு முறை சுற்றுவதற்கு முப்பது ஆண்டுகளை எடுத்துக்கொள்கிற சனிக் கோளும், பன்னிரெண்டு ஆண்டுகளை எடுத்துக்கொள்கிற வியாழன் கோளும், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிப்பிட்ட ஒரே நிலைக்கு வருவதை அடிப்படையாகக் கொள்கின்றனவாம் இவை.

(தமிழர்கள் 18 மாத நாட்காட்டி, 12 மாத நாட்காட்டி என இரண்டைப் பின்பற்றினார்கள் முன்பு என்று சொல்வோரும் உண்டு. நமக்கு அவ்வளவு விவரங்கள் தெரியவில்லை)

ஒரு மனிதன் பிறக்கும் போது இருக்கின்ற நாள், நட்சத்திரம், மாதம், ஆண்டு, கோள்களின் நிலை என அனைத்தும் மறுபடியும் அதே அமைப்பில் அறுபது ஆண்டுகள் கழித்து வருகின்றன என்கிறது இந்தக் கணக்கீடு.

அதே மாதம், அதே தேதி, அதே நட்சத்திரம், அதே ஆண்டின் பெயர் என பிறக்கும் போது கொண்டிருந்த அனைத்தையும் அறுபது ஆண்டுகள் கழித்து வரும் பிறந்த நாளில் கொண்டிருப்பதால், அது புதிய பிறப்பாகவும் புதிய வாழ்வு நிலையாகவும் பார்க்கப்படுகிறது. பிள்ளைகளாலும் குடும்பத்தினராலும் மணிவிழாவாக கொண்டாடப்படுகிறது.

இன்று செட்டிநாட்டு ஆத்தங்குடியில் கடலாய் பரந்து விரிந்த பெரிய வீட்டில் ஆர்எம் ராஜேந்திரன் என்றழைக்கப்படும் இராம. இராஜேந்திரன் – வள்ளியம்மை ஆச்சி தம்பதியருக்கு ‘சஷ்டியப்த பூர்த்தி’ எனும்  மணிவிழா எடுத்து கொண்டாடினர் அவரது வழித்தோன்றல்களும் குடும்பத்தினரும்.  

சிறந்த ஏற்பாடுகள்,சிறந்த உணவு, சிறந்த விருந்தோம்பல், சிறப்பாக நிகழ்த்துதல் என சிறப்பாக நடந்த விழாவில் திளைத்து கொண்டாடி வணங்கி பிரார்த்தித்து மகிழ்ந்தோம்.

முதல் பத்தியில் குறிப்பிட்டதற்கு வருவோம்.

இன்று சுபகிருது ஆண்டு,  கார்த்திகை 25 ஆம் தேதி, பூசம் நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமை  ‘அறுபதாம் கல்யாணம்’ என்னும் மணிவிழா கொண்டாடும் மலரவர் இராம. இராஜேந்திரன் அறுபதாண்டுகளுக்கு முன்பு இதே சுபகிருது, கார்த்திகை 25, ஞாயிற்றுக் கிழமை, பூசம் நட்சத்திரத்தில் பிறந்திருப்பார்!

– பரமன் பச்சைமுத்து
ஆத்தங்குடி,
12.12.2022

#ParamanTouring #Paraman #ParamanPachaimuthu #RmRajendranSashtiabthapurthi #RmRajendran60thBirthday #Athangudi #Chettinad

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *