‘முழுநாள் பரமனோடு!’ என்ற உற்சாகத்தில் அவர்களும், ‘களப்பிரர்களின் முடிவிலிருந்து அபராஜிதன் வரையில் இல்லையென்றாலும், இது போன்ற வரலாற்றுப் பதிவு இடங்களை எப்படிப் பார்க்க வேண்டுமென்றாவது அனுபவம் மூலமாக கொடுத்து விட வேண்டும்!’ என்ற அடிப்படை எண்ணத்தில் நானும் என மலர்ச்சி வாலண்ட்டியர்கள் நாங்கள் முப்பது பேர் மாமல்லபுரம் இன்பச் சுற்றுலா போனோம்.
இருட்டு விலகாத அதிகாலையில் தொடங்கி இருட்டி இரவானது வரை என முழுநாளும் கொண்டோம் ‘Experience PALLAVAS with PARAMAN PACHAIMUTHU’ அனுபவத்தை.
கடல் மல்லை, பல்லவ கலை, பின்னிருக்கும் சிறு சிறு விவரங்கள், சிற்பங்கள் விவரிக்கும் கதைகள், பாதியில் விடப்பட்ட சூழல், பாலாறு, வேகவதி, காஞ்சி மாநகரம், சாளுக்கியம் என வரலாற்றுக் கடலில் குதித்து நீந்த முயற்சித்தோம். குறைந்த பட்சம் கால ஆற்றில் இறங்கி கால் நனையவாவது நடந்தோம் என்று எண்ணுகிறேன்.
விஷ்ணு கோபனும், சிம்ம விஷ்ணுவும், முதலாம் மகேந்திர வர்மனும், முதலாம் நரசிம்ம வர்மனும், பரஞ்சோதியும், அப்பர் பெருமானும், பல்லவ நாட்டு சிற்பிகளும் எங்களை வாழ்த்துவர்.
ஏன் சாளுக்கிய புலிகேசியும் கூட வாழ்த்துவாரே!
படங்களையும் பதிவையும் பார்த்துவிட்டு ‘கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா, அந்தக் கதை சொல்ல வந்தானே சின்னராஜா!’ என்று சீர்காழியிலிருந்து நண்பர் மணிமாறன் குரல் பதிவில் பாடி வாழ்த்தினார். பல்லவ மண்ணில் இறங்கி நினைவு கூர்ந்ததற்கு பல்லவர்களும் வாழ்த்துவார்கள்தானே!
– பரமன் பச்சைமுத்து
#PallavaDynasty #Mahabalipuram #Mamallapuram #Pallava #MalarchiVolunteers #MalarchiMaanavargal #HistoricTravel #SivakamiyinSabadham
#ParamanLifeCoach #Paraman #ParamanPachaimuthu #LifeCoach
#ParamanCoaching #ParamanTouring