ஓர் ஆடு நான்கு கால்களில் இருக்கும் இயல்பான நிலையிலிருந்து மாறி பின்னங்கால்களை தரையில் ஊன்றி இருத்தி ஒரு குதிரையைப் போல மெலெழும்பி முன்னங்கால்களை காற்றில் நிறுத்தினால்… இரண்டு காரணங்கள். ஒன்று – மகிழ்ச்சியாகவும் அதீத சக்தியோடும் இருக்கிறது. இரண்டு – வேறோர் ஆட்டை சண்டைக்கு அழைக்கிறது.
(புதிர்: படத்தில் இருக்கும் அந்த ஆடுகள் என்ன வகை ஆடுகள் என கண்டுபிடியுங்கள் பார்ப்போம். விடை – கடைசியில்)
மணக்குடி பாப்பாக்குளத்தின் தென் மேற்கு மூலை ஆலமரத்து படித்துறைக்கருகே வேப்பம் மிளாறுகளையும் ஆலங் கொத்துகளையும் ஒடித்துப் போட்டுவிட்டு அருகிலேயே வெய்யிலில் மார்கழி மாதக் குளிரை ஓட்டிக்கொண்டிருந்த பெண்மணியின் அருகில் இந்த நான்கு ஆடுகளையும் தூரத்தில் ஒரு குட்டியையும் பார்த்தேன்.
ஆடுகள் பற்றி தெரிந்தவர்களுக்கே அது குறும்பாடு, வெள்ளாடு, கன்னி ஆடு, காராடு, செம்மறியாடு, பள்ளையாடு என்பதெல்லாம். தெரியாதவர்களுக்கு எல்லாமே ‘ஆடு’, அவ்வளவுதான்!
( ‘அண்ணாமலையை ‘ஆடு’ என்பார்கள்’ ‘அவருக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பாம்!’ என்று எவரும் இங்கு அரசியல் கருத்து போட வேண்டாம்)
நம் ஊரில் பொதுவாக காணப்படும் அட்டைக் கறுப்பு ஆட்டின் இனம் ‘வெள்ளாடு’ என்பது சிலருக்கே தெரிகிறது. வெள்ளையாக இருக்கும் ஆடுகள் வெள்ளாடுகள் என்று எண்ணுகிறவர்களே அதிகம்.
‘இதுங்களுக்கு அந்த தழை புடிக்காது. அது இதை திங்காது. மோந்து மோந்து பாத்துட்டு போயிடும்!’ என்று அவர் சொன்ன பிறகே கவனிக்கிறேன், ஈராடுகள் வேப்பம் மிளாரை கடித்து தின்கின்றன, ஓராடு ஆல இலையை அனுபவித்து தின்னுகிறது. மனிதர்களைப் போலவே ஆடுகளுக்கும் பிடித்த பிடிக்காத உணவுகள் இருக்கின்றனதான் போல.
என்ன ஆடுகள் அவை என்று கண்டுபிடித்தீர்களா?
விடை : மூன்று வெள்ளாடுகள், ஒரு ராமநாதபுரம் வெள்ளை ஆடு.
பொங்கலோ பொங்கல்!
- பரமன் பச்சைமுத்து
மணக்குடி
14.01.2023