மாறிவிட்டது மயிலாடுதுறை. ஆனால்…

மயூர நாதர் கோவில், மகாதானத் தெரு, மணிக் கூண்டு, இக்கரையிலிருந்து அக்கரைக்கு நீந்திப் போய் தொட்டு விட்டு திரும்பவும் இக்கரைக்கே ஒரே மூச்சில் வந்துவிடலாம் என்னுமளவிற்கான 100 அடி சாலையை விட சிறிய காவிரி ஆறு, ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் 400 நாட்கள் ஓடிய அந்த திரையரங்கம், வாழ்வில் முதன் முதலில் ‘ஸ்டோன்வாஷ் பேண்ட்’ வாங்கப் போன அந்த ராஜ் காம்ப்ளக்ஸ், ஏவிசி திருமண மண்டபம், ஆகச் சிறந்த காஃபி கிடைக்கும் காளியாகுடி ஓட்டல், ரஜினி ஹேர் கட்டிங் ‘ப்ரவீன் ஹேர்ஸ்டைல்ஸ்’, ரஜினி – கமல் அரங்கு நிரைந்த புதிய திரைப்படங்கள், அவரவருக்கு புரிந்த படி ஒரு கதையை கற்பனை பண்ணிக் கொள்ள வைத்த ஜாக்கி சான் படங்கள், வாடகை சைக்கிள் பயணங்கள், ஏவிசி ஊத்தாப்பம் கடப்பா சாம்பார்….

முப்பதாண்டுகளுக்கு முந்தைய நினைவுகள் அடுத்தடுத்து வந்து தோரணமாய் தொங்கி ஆடின நெற்றிப் பொட்டில், மயிலாடுதுறையில் நேற்று நள்ளிரவு இறங்கியதிலிருந்தே. கொஞ்சமே தூக்கம் நிறைய பழைய நினைவுகள் என்ற நிலையிலேயே போயிருந்தேன் மகாதானத் தெரு அபிராமி மகாலுக்கு.

கல்லூரி வகுப்புத் தோழி ஜெகதீஸ்வரியின் மகன் சந்தோஷுக்கு திருமணம்.

(இவ்வளவு பனியையும் குளிரையும் இந்த நாட்களில் மயிலாடுதுறையில் எதிர்பார்க்கவில்லை நான்)

‘காலைல 05.30க்கே வாட்ஸ்ஆப்ல வணக்கம் மாயவரம் பாத்தேன். அதான் கூப்டேன்!’ குளிக்கப் போனவனை மறித்து அதிகாலையிலேயே செல்லிடப் பேசியில் பிடித்த நப்பின்னை, ‘பரமன்! எங்க இருக்கீங்க? நான் கல்யாண மண்டப வாசல்ல நிக்கறேன்!’ என்று ஹோட்டல் மணிவிழாவிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும் போதே அழைத்த சபா நாயகம் என வகுப்புத்தோழர்களின் அழைப்பு ‘சரி! நம்மாளுங்க இருக்காங்க!’ என்ற உணர்வை தர திருமணத்திற்கு போனோம்.

பார்த்தவுடன் மணமேடையிலிருந்து இறங்கி ஓடி வந்து வரவேற்ற நப்பின்னை, பின்னே தாமரை வண்ணப் புடவையணிந்து பெண்மணியை காட்டி ‘யாருண்ணு தெரியுதா?’ என்று கேள்வியை வைக்க.

‘யாரு? தெரியலியே!’ என்கிறான் சபா. நான் முயற்சி செய்தேன்.

‘மஞ்சுளா?’

‘கரெக்ட்!’

முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாய் சந்தித்த போதும் கண்டுபிடிக்க முடிகிறது. இத்தனையாண்டுகளில் வாழ்க்கையும் ஆண்டுகளும் சேர்ந்து நம் முகத்தில் மேடுகளையும் பள்ளங்களையும் கோடுகளையும் கதுப்புகளையும் இட்டிருந்தாலும், கூர்ந்து பார்த்தால் கண்டறியலாம் என்பதான கிட்டத்தட்ட அதே முகத்தைத் தானே கொண்டிருக்கிறோம்!

திருப்பூர் பகுதியிலிருந்து ‘கணம் கோர்ட்டார் அவர்களே!’ வசுமதி, பெரும்பாலும் தம்பதி சகிதமாகவே வரும் ‘நல்லிணை’ சீர்காழி ‘ஆஃபீசர்’ மணிமாறன், சத்யபாமா யுனிவர்சிட்டி ஐடி அட்மின் ‘நெட்டை’ ்அருண், ஏர்ஃபோர்ஸிலிருந்து மாறி யூனிஸிஸ்ஸின் உயரதிகாரி ஆனபின்னும் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீஸர் போலவே தோற்றமளிக்கும் பாலமுருகன், வந்ததும் தெரியாது போவதும் தெரியாது என்றளவில் அமைதியான ராஜ்குமார், ‘ஐயய்யோ! இந்தப் பொண்ணு கட்டிப் பிடிச்சி முத்தம் கொடுத்துடுமோ ஒருவேளை!’ என்று ஒரு நிமிடம் நமக்கு பதற்றம் வருமளவிற்கு பார்த்தவுடன் ஓடி வந்து வாஞ்சையால் வெளியை நிரம்பும் ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ கேரளாவின் பெரும் டீச்சர் சேச்சி அமுதா என வகுப்புத் தோழர்களால் நிறைந்தது எங்களது கணங்கள்.

பட்டு சட்டை,பட்டு வேட்டி, பட்டுப் புடவை, மாலையும் கழுத்துமாக ஜோடியாக என நின்று, ‘யாரு உண்மையில் பொண்ணு மாப்பள?’ என்று சிந்திக்க வைத்தனர் ஜகதீஸ்வரியும் அவர் கணவர் செழியனும்.  ஜெகதீஸ்வரி அழகு!

ஒரே மாலையை உறவுக்காரர்கள் ஒவ்வொருவராக மாற்றி மாற்றி் மணப்பெண்ணுக்குப் போட்டு வாழ்த்தும் சைவப் பிள்ளை மரபின் முறைகள், பிற எல்லாத் திருமணங்களிலும் இடம்பெறும் பெற்றோர் பாதபூசை முறைமை என திருமண சடங்குகளை நிகழ்த்தினர். பொன் சங்கிலி, அதனுடனே இன்னொரு மஞ்சள் கயிறு என இரண்டு தாலிகளை மணமகள் கழுத்தில் போட்டான் மணமகன் சந்தோஷ்.  முதல் முடிச்சு மட்டுமே மணமகன், மற்ற இரண்டும் பின்னே நிற்கும் முக்கிய உறவின் முறை பெண்கள் என சில மரபினர் செய்யும் திருமணங்கள் போலல்லாமல் மூன்று முடிச்சையும் சந்தோஷே போட்டான் என்பதை தூர அமர்ந்திருந்தாலும் தொழில்நுட்ப உதவியால் பெருந்திரையில் பார்க்க முடிந்தது.

மொத்தமாய் மேலேறி மணமக்களைப் பார்த்து வாழ்த்தி மகிழ்ந்து நிறைந்து (கொஞ்சம் இறைந்து!!!) இறங்கினோம்.  ( வேலைப்பலுவாலும் பெரும் பொறுப்புகளாலும் பெங்களூருவிலிருந்து வரமுடியா ‘டெல்’ முரளிநாராயணனின் கிஃப்ட்டை மணமக்கள் கையில் சேர்த்துவிட்டேன்!)

வந்தவர்களை கவனித்து தாம்பூலப் பையை தருவதை நப்பின்னையும் மஞ்சுளாவும், எங்கு வேலை இருந்தாலும் உட்காரமல் ஓடிப் போய் செய்ய அமுதாவும் என எடுத்து செய்தார்கள்.

ஒரு வேளைக்கான உணவுக்கு என்று போன இடத்தில் கவனமாயில்லையென்றால் ஒரு நாளைக்கான உணவு தந்துவிடுவார்கள் போல. பரிமாறிக் கொண்டேயிருந்தார்கள் இருட்டுக்கடை அல்வா சுவையை ஒத்த அல்வா, இடியாப்பம் பால், பொங்கல், வடை, வெங்காய ரவா தோசை, கடப்பா, பூரி, கிழங்கு, இட்லி, சட்னி, சாம்பார் என. திருமணத்தில் ஆனியன் ரவா தோசை நான் உண்டதில்லை இதுவரை! நன்று. இடியாப்பத்தின் பால் பயங்கர தித்திப்பு, மில்க் மெய்ட் போல.

(பாலமுருகன், வசுமதி, மணிமாறன், ராஜ்குமார் ஆகியோர் தம்பதியராய் வந்தனர் என்பதை சொல்ல மறந்து விட்டேன்!)

வயிறு நிறைய உண்ட பின்னும் வெளியே காஃபிக்காக நின்றோம். காஃபி என்பது பெரும்பாலான நேரங்களில் தொண்டைக்காக அல்ல, மனிதர்களோடு கொள்ளும் தருணங்களுக்காக.  பாலமுருகன், அருண், சபா, மணிமாறன், நான் என அடுத்த ரவுண்ட் தருணங்களுக்காக காஃபிக்கு நகர்ந்தோம்.  மென் சிரிப்புகள், வெடிச் சிரிப்புகள், விசாரிப்புகள், பகிர்வுகள் என நிறைந்தது எங்கள் காஃபி கணங்கள்.

அடுத்த சில நிமிடங்களில் புறப்பட்டுவிட்டோம், அவரவருக்கு அடுத்தடுத்த வேளைகள்.

நேற்று நள்ளிரவில் தெரிந்தது போலல்லாமல் இன்று காலை வெளிச்சத்தில் பளீரென்று தெரிகிறது மயிலாடுதுறை.  மகாதானத்தெரு, கச்சேரி ரோடு, படித்துறை, கடைகள்… முழுதும் மாறிவிட்டது மயிலாடுதுறை. இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது என் மயிலாடுதுறை நினைவுகள்!

– பரமன் பச்சைமுத்து
மயிலாடுதுறை
09.02.2023

#ParamanTouring #ParamanMayiladuthurai #Avccp #Mayiladuthurai #Paraman #Paraman Pachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *