

‘டீ ஒரு ரூவா, பெட்ரோல் ரெண்டு ரூவா, ஆனா தண்ணி ரெண்டரை ரூவாயா!!’ துபாயில் இறங்கியதும் இப்படி அதிர்வீர்களென்றால், துபாய் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளவே வேண்டும்!
…..
ஏழு நாடுகள், ஏழுக்கும் ஏழு மன்னர்கள், ஏழு ஆட்சிகள். ஆனால் ஏழு நாடுகளுக்குள்ளும் ‘ஒரே ரத்தம்’ சொந்தம். எழுநாட்டுக் குடிகளுக்கு தங்கு தடையில்லை.
அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான், ரஸ் அல் கைமா, ஃபியுஜைரா, உம் அல் குவைன் என ஏழு மன்னர்களைக் கொண்ட ஏழு நாடுகளும் (அமீரகங்கள்) இணைந்து ‘ஐக்கிய அரபு நாடுகள்’ ‘ஐக்கிய அரபு அமீரகங்கள்’ ஆகட்டும் என்று செய்த முதல் முடிவே ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மைகள்!’ என்பதை கோடிட்டுக் காட்டும் ஆகச் சிறந்த முடிவாம்.
ஆறு இல்லை, ஏரி இல்லை, குளம் இல்லை, ஒரு கால்வாய் கூட இல்லை. மணல், மணல், எங்கும் மணல் நிறைந்த, மணல் புயல் அடிக்கும் பாலை நிலம்! ‘பெட்ரா’ ‘ஆயில்’ எனப்படும் ‘பாறை எண்ணெய்’ கிடைத்ததில் ஒட்டு மொத்தமும் மாறியது. கடல் நீரை குடிநீராக்கும் வழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பாலை நிலத்தில் வளர்ச்சிகள் வந்தன. வசதிகள் வந்தன.
வெறும் எண்ணெய் வளத்தை மட்டும் வைத்துக்கொண்டு நாளைய நாட்களை ஓட்ட முடியாது, மாற்று வழிகள் செய்யவேண்டுமென்று முப்பதாண்டுகளுக்கு முன் சிந்தித்த அந்த ஷேக்கின் தொலைநோக்குப் பார்வைக்கும் தலைமைப்பண்பிற்கும் ‘சலாம்!’ சொல்லியே ஆக வேண்டும்.
வானை முட்டி கிழித்து நிற்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடம், 2070ல் உலகம் எப்படியிருக்கும் என்று அனுபவமே தரும் ‘ஃப்யூச்சர் மியூசியம்’, ஓட்டுனரேயில்லாமல் தானாக ஓடும் மெட்ரோ ரயில், 200 கிலோமீட்டரை சில மணித்துளிகளில் கடக்கலாம் எனும்படியான ஆகச்சிறந்த உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து வசதிகள், சிறந்த குடிநீர், உலகின் முக்கிய வர்த்தக மையம் என்று நிற்கும் துபாய் ஒவ்வொரு நாளும் வளர்கிறது.
ஒன்றுக்கும் உதவாத ஒன்றுமேயில்லாத அனல் தகிக்கும் வெறும் பாலைவனமாக இருந்த ஒரு பெரும் பகுதி, மெட்ரோ, சிறந்த குடியிருப்புகள், சிறப்பான சாலைகள், பெரும் வணிக சந்தைகள், அடுத்தடுத்தடுத்து நிறைய பள்ளிக்கூடங்கள் நிறைந்த நவீன நகரமாக மாறி ‘அல் கொஸைஸ்’ என்று நிற்கிறது என்றால் எவரும் நம்பமாட்டார்கள். இருபதாண்டில் பாலை நிலம் சோலை நிலமாக நிற்கிறதென்றால் நம்புவது கடினமே.
இருபதாண்டுகளுக்கு முன்பு துபாயை பார்த்தவர்கள் சொல்லும் போது, நாம் நம்பியே ஆக வேண்டியிருக்கிறது. துபாயை இரண்டாகப் பிரிக்கும் ஆறு, உண்மையான ஆறு அல்ல, இவர்கள் வெட்டி உருவாக்கிய ‘பேக் வாட்டர்ஸ்’ ஆறு (சிங்கப்பூரின் ‘சிங்கப்பூர் ரிவர்’ போலவே) என்றாலும் நம்பியே ஆக வேண்டியுள்ளது. ‘கப்பலில் வந்திறங்கும் மாலுமிகள் பாலை நிலத்தில் டெண்ட் அடுத்து தங்கிய இடம் ‘டேரா’ துபாய், ஆற்றுக்கு இந்தப் பக்கம் (இங்கிருந்துதான் ‘டேரா போடுவது’ என்பது வந்திருக்கிறது போல). ஆற்றுக்கு இந்தப்பக்கம் மக்கள் குடியிருக்கும் ‘பர் துபாய்’…’ என்று துபாய் வாசிகள் சொல்வதை கேட்கும் போது ஒவ்வொரு நாளும் வளர்கிறது துபாய் என்று புரிகிறது.
ஐரோப்பிய முறைமையைப் போலவே, ‘இடது பக்கம் ஓட்டுநர்’ முறையைக் கொண்டிருக்கிறது யுஏஇ. வலது பக்கத்தில் போக்குவரத்து, எதிர்ப்பக்கம் வரும் வாகனங்கள் இடது புறத்தில், வலது பக்கத்தில் பயணிகள் இறங்கி ஏறுவர் என்று அப்படியே அமெரிக்க ஐரோப்பிய வழிமுறையில் இயக்கம்.
சிந்து பாத்தின் அனுபவங்கள், ‘அராபிய இரவுகள்’ என நாம் படித்தறிந்து கேட்டறிந்து ‘பாலை வனம் கொடுமையானது, பாலை வனத்தைக் கடந்து பயணிப்பது மிகக் கடினம்!’ என்று கொண்ட உருவகங்கள் உடைந்து மணல் மணலாக உதிர்ந்து விடுகின்றன யுஏஇயில்.
துபாயிலிருந்து ஷார்ஷாவையொட்டி பாலை வனத்தின் வழியே டொயோட்டா காரில் அஜ்மானைக் கடந்து சில மணி நேரங்கள் பயணித்து உம் அல் குவைனுக்குப் போகும் அனுபவம் வாய்த்தது எனக்கு. ஆகச் சிறந்த உலகத்தரம் வாய்ந்த நெடுஞ்சாலையில் மிக அதிவேகத்தில் பயணித்தபோது, இடது வலதில் கவனித்தால் மட்டுமே, ‘டெசர்ட் சஃபாரி’ வண்டிகளை கவனித்தால் மட்டுமே, தூரத்து ‘டெண்ட்’களை கவனித்தால் மட்டுமே அது பயங்கர பாலைவனம் என்பது புரியும். யுஏஇயின் முக்கிய எஃப்ம் ஆன ரேடியோ கில்லியில் பேட்டி கொடுப்பதற்காக அவர்களது உம் அல் குவைன் வளாகத்துக்கு பயணித்த போது, பாலைவனத்தை ஊடறுத்துப் பயணிக்கிறோம் என்பது புரிந்த போது வியந்து போனேன். அந்தக் கொடும் பாலை நிலத்தில் இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கு ஒவ்வொரு நாளாக சாலை வேய்ந்து கொண்டே போன அந்த தொழிலாளிகள், தகிக்கும் வெப்பத்தில் எப்படி பணியாற்றியிருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்த்து அதிர்ந்து போனேன்.
‘தோலைச் சுடும், ரத்தத்தை சுண்டச் செய்யும் கோடையின் ஐம்பது டிகிரி வெய்யிலில் கிட்டத்தட்ட உயிரை விட்டு உழைக்கிறார்கள் தொழிலாளிகள்!’ போன்ற பல குறைகள் உண்டு துபாயில் என்றாலும் பலரின் உழைப்பில் ஒவ்வொரு நாளும் வளர்கின்றன துபாயும் ஏனைய ஆறு ஐக்கிய அரபு நாடுகளும். அதனால்தான் ‘2026ல் பறக்கும் டாக்சி செயல்பாட்டுக்கு வந்துவிடும் துபாயில்!’ என்று சொல்ல முடிகிறது மன்னரால்.
- பரமன் பச்சைமுத்து
துபாய், விமான நிலையம்
19.02.2023