துபாய் – டெய்ல் பீஸ்: (நிறைவுப் பகுதி)
வாகனங்கள் நிறைந்த துபாயின் சாலையோரங்கள், சங்கர் படத்தின் பாடல் காட்சிகளில் வருவது போல வண்ண வண்ண மலர்களும் மலர்க் கொத்துகளும் நிறைந்து மிக அழகாக காணப்படும். உற்றுக் கவனித்தால், ‘வேரில்லாமல் எப்படி இவை!’ என்று அதிர்வீர்கள். வேறொரு இடத்தில் தோட்டத்தில் பூச்செடிகளை வளர்த்து, மலர்க்கொத்துகளை மட்டும் வெட்டிக் கொண்டு வந்து இரவோடு இரவாக நட்டுவைத்து விட்டுப் போகிறார்கள் (சென்னை வி ஆர் மால் வாசலில் தினமும் புத்தம் புது அல்லி மலர்கள் மிதப்பதை போல).
இதன் பின்னிருப்பது, ‘எங்கள் துபாயில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஒவ்வொன்றும் நல்லுணர்வை தர வேண்டும்!’ என்ற மெனக்கெடல்.
துபாயில் நிறைய பூனைகள் உள்ளன. ஆனால் ஒரு நாயைக்கூட காணமுடியவில்லை (தெரு நாய்). பாலைப் பிரதேசத்தில் நாய் இருக்காதா, என்ன? (தெரிந்தவர்கள் சொல்லவும்). நரிகள் நிறைய இருக்கின்றனவாம்.
பாலையிலும் பாலையையொட்டிய பகுதிகளிலும் வாழும் ஒரு வகை புறாக்கள் துபாயின் தெருவோரங்களில் அநாயாசமாக அலைகின்றன. ‘கள்ளிப் புறா’ எனப்படும் இந்த ‘டெசர்ட் பிஜன்’ வித்தியாசமான வண்ணத்தில் மிக அழகாக உள்ளது.
பேரீச்சை மரங்களை சாலையோரங் களில் பார்க்க முடிகிறது. அரசு பேரீச்சை மரங்களை நட்டு பராமரிக்கிறது. வளத்தின் சின்னமாகப் பார்க்கப்படும் பேரீச்சை மரத்தை வாங்கி தங்களது வீட்டின் முகப்பில் நட்டு வளர்ப்பவர்களும் உண்டு.
விமானம் விட்டிறங்கி துபாயில் நுழையும் போதே, ‘கந்தூரி’ உடையணிந்த இமிக்ரேஷன் அதிகாரியே உங்களுக்கு ஒரு இலவச சிம் கார்டு தந்து விடுகிறார். உடனே ஆக்டிவேட் பண்ணிக் கொள்ளலாம். துபாய்க்கான உங்கள் தற்காலிக நம்பராக அது பயன்படுகிறது. மறுபடியும் துபாயிலிருந்து புறப்பட்டு வெளியேற இமிக்ரேஷன் துறையில் பாஸ்போர்ட்டை ஸ்கேன் செய்யும் போது, சிம் கார்டு தானாக செயலிழந்து விடுகிறது.
அராபியர்கள் வாழும் மாளிகைகளின் மீது அராபிய கொடி பட்டொளி வீசிப் பறந்தால், அந்த வீட்டில் பருவமடைந்த அராபியப் பெண் திருமணத்திற்குத் தயாராக இருக்கிறாள் என்று பொருளாம். மணல் குன்றுகள் நிறைந்த பாலை நிலத்தில் ஒட்டகங்களில் பயணித்த காலத்திய இந்த பாரம்பரியத்தை இன்னும் ‘பிஎம்டபிள்யூ’ ‘ஆவ்டி’ ‘போர்ஷ்’ ‘ஃபெர்ராரி’ காலத்திலும் தொடர்கிறார்கள் அராபியர்கள்.
நம்மூரில், மாம்பலத்திலும் நங்கநல்லூரிலும் இருக்கும் பூர்வீக இடத்தை விற்றுவிட்டு, இன்னும் பெரிதாக இடம் வாங்கி கூடுவாஞ்சேரிக்கும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கும் குடிபெயர்வதைப் போல, துபாயிலிருந்து உம் அல் குவைக்குனுக்கும் அஜ்மானுக்கும் தொழிற்சாலைகளையும் குடியிருப்புகளையும் மாற்றுகின்றனர் பலர். நேரடியாக பெருஞ்செலவு கட்டுப்படியாகிறது, ஊதியச் செலவும் குறைவு என்பதால்.
வளம் நிறைந்த யுஏஇயின் சாலைகளில் உலகின் அதிநவீன ஜெர்மானிய வாகனங்கள் ஓடுகின்றனதான் என்றாலும், நாம் அதிகம் கண்டவை பார்டா, எக்ஸ்ப்ளோரர் என ஜப்பானிய டொயோட்டாவின் கார்களையே.
வெள்ளிக்கிழமை விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை வேலை என்றிருந்த அராபிய வழக்கத்தை மாற்றி உலகத்தோடு ஒத்து போக சனி, ஞாயிறு விடுமுறைக்கு வந்து விட்டது துபாய். ஷார்ஷாவில் வெள்ளி, சனி, ஞாயிறு விடுமுறை.
சில கடைகளில் இந்திய ரூபாயை ஏற்கிறார்கள். எல்லா இடங்களிலும் நமது இந்திய வங்கிகளின் இண்டர்நேஷனல் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டுகள் ஏற்கப்படுகின்றன. இரண்டு மூன்று நாள் பயணம் செய்பவர்கள் அதிகம் எதுவும் வாங்கப் போவதில்லை என்ற நிலையில் கரன்சி மாற்ற வேண்டியதில்லை.
– பரமன் பச்சைமுத்து
சென்னை
22.02.2023
#ParamanTouring #ParamanAtDubai #ParamanDubai #Dubai #UAE #Paraman #ParamanPachaimuthu #ParamanLifeCoach #Sharjah #Ajman #UmAlQuwain