‘தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’
என் தந்தை மேடைகளில் அதிகம் பாடிய பாடல் இது. சிவாஜி கணேசனுக்கு ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ மேடை நாடகம் போல, என் தந்தைக்கு ‘காரைக்கால் அம்மையார்’.
1970களின் இறுதியிலேயே ஒரு வில்லுப்பாட்டு இசைக் குழுவைத் தொடங்கி சிறப்பாக இயங்கிக்கொண்டிருந்தார் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான என் தந்தை. கீழமணக்குடி மாதிரி ஒரு படு கிராமத்திலிருந்து பூராயர் அண்ணன், முத்தையன் சித்தப்பா மாதிரி இளம்பையன்களை தேர்ந்தெடுத்து அவர்களை தபலா,
பேங்கோஸ் கற்க வைத்து, கீரப்பாளையம் நல்ல தம்பியை ஆர்மோனியத்திற்கு சேர்த்துக்கொண்டு, மிகச் சுவையாக கதை சொல்லி இசையோடு வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறார். அப்பாவின் குழுவில் முதன்முதலில் மோர்சிங் வாசித்த கிருபாநிதி (புவனகிரி திருநாவுக்கரசு முதலியார் மகன்) இப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் (மிருதங்கம்) பேராசிரியர். புதுச்சேரி வானொலி நிலையத்தின் ஆஸ்தான கதை சொல்லி இசைக் குழு அப்பாவுடையது. புதுவை வானொலி மட்டும் ‘வெள்ளையனே வெளியேறு’ ‘சுதந்திர தாகம்’ ‘போதையில்லா நல்வாழ்க்கை’ என புதியனவற்றை உருவாக்கச் சொல்லி, நிகழ்த்த வைப்பார்கள். தொலைக்காட்சி சிற்றூர்களுக்கு வந்திராத அந்தக்காலங்களில் ‘நேஷனல்’ அல்லது ‘ஃபிலிப்ஸ்’ ரேடியோக்களில் அவரது கதைப்பாட்டு நிகழ்ச்சி ஒலிபரப்புகளை மணக்குடி ஊரே கேட்கும்.
சரி, நான் ஒரு மடையன்! சொல்ல வந்ததை விட்டுவிட்டு வேறு எதையெதையோ சொல்கிறேன். தொடங்கிய சங்கதிக்கு வருகிறேன். ‘வள்ளித் திருமணம்’ ‘பார்வதி திருமணம்’ ‘வாலி வதம்’ ‘மணிவாசகர் வாழ்வும் வாக்கும்’ ‘கம்பன் காதை’ ‘திருமூலர்’ என பல தலைப்புகளில் வில்லுப்பாட்டு நிகழ்த்திய அப்பாவிற்கு ‘காரைக்கால் அம்மையார்’ நிகழ்ச்சியே பெயர் பெற்று தந்தது. சிதம்பரம் – விழுப்புரம் – கடலூர் – வேலூர் – திருவண்ணாமலை – தஞ்சை – நாகை – திண்டிவனம் பகுதிகளின் சிற்றூர்களில் ‘காரைக்கால் அம்மையார்’ கதையே அவர் குரலில் அதிகம் ஒலித்தது.
காரைக்கால் அம்மையார் கதையை விவரிக்கும் போது, காரைக்கால் வீதியில் புனிதவதி வீட்டு வாசலில் சிவனடியார் பாடும் ‘அன்னமிடுவாருண்டோ, அநாதையான இந்த ஏழை அரும்பசிக்கு அன்னமிடுவாருண்டோ!’ என்று அவர் பாடும் பாடல் புகழ்பெற்றது அந்நாட்களில். இன்னொரு பாடல் மிக முக்கியமானது. கதையின் இறுதியில் புனிதவதி பேயுருவம் பெற்று கயிலாயம் நோக்கி தலையால் நடந்து வரும் போது ‘அம்மை’ என்று இறைவன் அழைக்க, ‘உன் ஆடலைப் பார்க்க வேண்டும் இறைவா!’ என்று அவர் கேட்க, ‘தென்னிந்தியாவின் திருவாலங்காட்டுக்கு வா!’ என்று கூறி மறைய, திருவாலங்காடு வந்த காரைக்கால் அம்மையார், சிவனை ஆடச் சொல்லி பதிகம் பாடுகிறார்.
பதிகம் என்றால் பத்து பாடல்கள் என்பர். தமிழில் முதன்முதலில் ( 3 ஆம் நூற்றாண்டு) பதிகம் பாடியது காரைக்கால் அம்மையாரே. அதனாலேயே இதை ‘ஆதிப்பதிகம்’ என்று விளித்திருக்கின்றனர் சான்றோர்கள். காரைக்கால் அம்மையாரின் இந்தப் பதிகங்களை பின்பற்றியே தேவாரம் பாடினர் மூவரும் என்கிறது இவர்கள் சொல்லும் குறிப்பு. அதனாலேயே ‘தமிழிசையின் தாய்’ எனப்படுகிறார் காரைக்கால் அம்மையார்.
காரைக்கால் அம்மையார் சரிதத்தை திரைப்படமாக எடுக்கையில், சிவன் ஆடும் இடத்தின் காட்சியில் பதிகத்தை ஓரமாக வைத்துவிட்டு புதிதாக பாடலொன்றை எழுதி இசையமைத்து சேர்த்தார்கள். கே பி சுந்தராம்பாள் நடித்து வெளியான அந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாய் அந்தப் பாடல் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றது. அந்தப் பாடலைத்தான் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்டுள்ளேன்.
‘ஓடும் கால் ஓடி உள்ளம் உருகி இசை பாடுங்கால் உன்னை பாட வந்தேன் பரம்பொருளே!’ என மெதுவாகத் தொடங்கி, திடீரென உச்சக்குரலில் ‘தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’ என்று கேபிஎஸ் பாடுவார் அந்த பாடலில். (கேபி சுந்தராம்பாளுக்கு சில நிகழ்ச்சிகளில் ஸ்ருதி பெட்டி வாசித்திருக்கிறார் அப்பா)
தனது ‘காரைக்கால் அம்மையார்’ வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில் என் தந்தை இந்த பாடலை அப்படியே எடுத்து பயன்படுத்திக் கொள்வார்.
நான் குறிப்பிட்ட அவரது இரண்டாவது முக்கிய பாடல் இதுதான். ‘தகதக தகதகவென’ உச்சிக்குப் போகும் பாடல், திடீரென மாறி ‘ஆலகாலனே ஆலங்காட்டினில் ஆடிடும் நாயகனே…’ என்பதில் மாறுவதை பிரமாதமாகப் பாடுவார்.
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே
ஆலகாலனே ஆலங்காட்டினில்
ஆடிடும் நாயகனே
நீலகண்டனே வேதநாயகா
நீதியின் காவலனே!
சிறுவயதிலேயே எங்களுக்குள் நுழைந்துவிட்ட பாடல் இது. அதனால்தான் ‘பிதாமகன்’ படத்தில் வரும் ‘தகதக தகவென ஆடவா!’ என்ற இந்த பாடல் துண்டிற்கு சிம்ரன் ஆடிய போது நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன், ‘ஏய் பரமன்! எப்படி தெரியும் இந்த பாட்டு!’ என்று நண்பர் வியந்து கேட்ட போது கூட பதில் சொல்லாது சத்தமாக கூடவே பாடினேன்.
….
நிற்க! எதற்கு இந்தக் கதை?
…..
மணக்குடியிலிருந்து சென்னை வந்திருக்கும் அம்மாவை, ‘காலையில் வெளியே போக வேண்டியிருக்கும், தயாராக இரு!’ என்று சொல்லி அழைத்துக் கொண்டு புறப்பட்டேன்.
‘அம்மா! காரைக்கால் அம்மையார் கதையில…’
‘ம்’
‘தனதத்தனை கல்யாணம் பண்ணிட்டு புனிதவதி வாழ்ந்தது எந்த ஊர்ல?’
‘காரைக்கால்ல!’
‘சிவனடியார் மாம்பழம் சாப்டது எந்த ஊர்ல?’
‘காரைக்கால்ல!’
‘ம்! கடைசியில சிவனும் பார்வதியும் காட்சி கொடுத்து நடனம் ஆடனது எந்த ஊர்ல?’
(அதீத உணர்ச்சியில் உற்சாகம் பீறிட குரல் வருகிறது அம்மாவிடமிருந்து) ‘திருவாலங்காட்டுல!’
‘ஆலங்காடு…திருவாலங்காடு! அங்கதான் போறோம் இப்போ!’
…..
அம்மாவுக்கு நல்ல தருணமாக இது இருக்கட்டும், அம்மாவுடன் எனக்கு நல்ல தருணங்களைத் தரட்டும் இது என்பதற்காகவே இந்த திருவாலங்காடு பயணம். கூடவே இறைவன், பதிகம் பாடப்பெற்ற கோயில் என்பவை கூடுதல் அனுபவங்கள்.
ஆலமரங்கள் நிறைந்த காடாக இருந்த இடமென்பதால் ஆலங்காடு, திருவாலங்காடு என்று ஆனது. இங்கிருக்கும் இறைவனின் பெயர் ‘ஆலங்காட்டு ஈசன்’ எனப் பொருள்படும் ‘வடரண்யேஸ்வரர்’.
காரைக்காலில் தனதத்தன் மகளாக பிறந்து பரமதத்தனை மணந்து, வாழ்வைத் துறந்து பேயுருவம் பெற்று, கயிலாயம் சென்று சிவனிடம் ‘பிறவாத வரம் வேண்டும், உனை மறவாத வரம் வேண்டும்!’ என்று பாடி உருகிய காரைக்கால் அம்மையார், திருவாலங்காட்டில் ஆடும் நடராசர் பாதத்தில் கலந்துவிட்டார் என்கிறது சேக்கீழாரின் பெரிய புராணம்.
சபாநாயகர் எனப்படும் நடராஜர் ஆடும் ஐந்து சபைகளில் ( ‘பொன்’னம்பலம் – சிதம்பரம், ‘வெள்ளி’யம்பலம் – மதுரை, ‘தாமிர’சபை – நெல்லை, ‘சித்திர’சபை – திருக்குற்றாலம்) முதல் சபையான ‘ரத்தின சபை’ இந்த திருவாலங்காடு.
….
யூ-ட்யூபை திறந்து கேபி சுந்தராம்பாளின் ‘ஓடுங்கால் ஓடி உள்ளம் உருகி இசை பாட வந்தேன் பரம்பொருளே….’ ஒலிக்க விடுகிறேன்.
‘தம்பீ! அப்பாவுக்கு ரொம்ப புடிச்ச பாட்டுரா இது!’
‘தகதக தகதகவென ஆடவா
சிவா சக்தி சக்தி சக்தியோடு ஆடவா…’
….
: அம்மா – ஆலய தரிசனம்
– பரமன் பச்சைமுத்து
திருவாலங்காடு
03.03.2023
#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #Thiruvalangadu #KaraikalAmmaiyar #Thevaram #KbSundarambal