‘கொடிது கொடிது வறுமை கொடிது. அதனினும் கொடிது இளமையில் வறுமை!’ என்று எழுதிய ஒளவை, இன்றிருந்தால், ‘கொடிது கொடிது புற்று கொடிது, அதனினும் கொடிது குழந்தைகளுக்கு புற்று!’ என்று எழிதியிருப்பார். என்ன எது என்று தங்களைப் பற்றியே தனக்கு வந்துள்ள நோய் பற்றியோ விவரம் அறிய முடியா குழந்தைகளுக்கு புற்று வந்துள்ளதை காண்பது கொடுமை.
பெங்களூருவிலிருந்து, பண்ருட்டியிலிருந்து, குறிஞ்சிப்பாடியிலிருந்து, தருமபுரியிலிருந்து, திருப்பூரிலிருந்து, ஈரோட்டிலிருந்து என எல்லாப் பக்கங்களிலிருந்தும் புற்று நோயால் பாதிக்கப் பட்ட குழந்தைகள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு வருகிறார்கள் சிகிச்சை வேண்டி. ஜிப்மரில் உயர் தர சிகிச்சை, சிறந்த மருத்துவர்கள், தரமான மருந்துகள் எல்லாம் உண்டுதான். ஆனால், புற்றுக்கான சிகிச்சை என்பது ஒரே நாளில் முடிந்துவிடாதே. பெட் ஸ்கேனிஞ், கதிரியக்க சிகிச்சை, அறுவை சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய தொடர் பராமரிப்பு சிகிச்சைகள் என தொடர்ந்து சில பல மாதங்களுக்கு எடுக்க வேண்டிவரும். புறநோயாளிகளாக வந்து ஒவ்வொரு நாளும் சிகிச்சை எடுக்க வேண்டி வரும். திருப்பூருக்கும், பெங்களூருக்கும் போய் போய் வர முடியாது. தொடர்ந்து சிகிச்சை எடுத்தால் மட்டுமே பலனை பெறமுடியும். உயிர் காக்க முடியும். வெளியூரிலிருந்து வந்து வந்து போக முடியாது என்பதாலேயே மருத்துவத்தை தொடர முடியாமல் பலியான பிள்ளைகளும் பெரியவர்களும் உண்டு.
இப்படி வெளியூரிலிருந்து ஜிப்மருக்கு வந்து மருத்துவம் பெறுவோர் எங்கு தங்குவது? தொடர்ந்து மாதக்கணக்கில் தங்கி மருத்துவம் பார்க்க அவர்களுக்கு பொருளாதார சக்தி இருக்காதே! இவர்களுக்காக உதவுவதற்கு ஒரு அமைப்பை நிர்வகித்து வருகிறார் ஓர் இளைஞர்.
ஜிப்மரில் புற்றுநோய் சிகிச்சைக்காக வெளியூரிலிருந்து வரும் குழந்தைகளுக்காகவே ஓர் அகம். குழந்தைக்கு உதவ பெற்றோரில் ஒருவர் தங்கிக்கொள்ளலாம். காலை உணவு தரப்பட்டு, வண்டியில் அவர்களை ஜிப்மருக்கு கூட்டிச்சென்று விட்டு, சிகிச்சை முடிந்ததும் மறுபடியும் கூட்டிவந்து மதிய உணவு கொடுத்து, இரவு உணவும் கொடுக்கப்படுகிறது. இவை அனைத்தும் இலவசம்! ஒரு மாதமோ, இரு மாதமோ, சிகிச்சை முடியும் வரை அவர்கள் தங்கலாம். ‘ஜால்’ (JAL – Joy And Light) என்ற பெயர் கொண்ட இந்த அகத்தை நிர்வகித்துக் கொண்டிருக்கிறார் சதீஷ் என்ற மதிக்கத்தக்க இளைஞர்.
இந்த அகத்தில் தங்கியிருந்து புற்று நோய் சிகிச்சை மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு உதவ ‘பிஎன்ஐ கோரல் – புதுச்சேரி’ முடிவெடுத்ததும், நமது ‘மலர்ச்சி ஃபவுண்டேஷன்’ கை கோர்த்துக்கொண்டது. ‘உறுதியோடு உயர்வோம்!’ என்ற மலர்ச்சி உரை கொண்ட நிகழ்ச்சியை நடத்தி அதன் மூலம் வரும் நிதியை அந்த அமைப்புக்கு தருவது என்ற முடிவில் உளப்பூர்வமாக இறங்கினோம்.
‘பரமன் பச்சைமுத்து – மலர்ச்சி, வி கே டி பாலன், மதுரா ட்ராவல்ஸ் – உறுதியோடு உயர்வோம்!’ என்று அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி, 05.03.2023 ஞாயிறு மாலை ஜிப்மர் வளாகத்தின் அப்துல் கலாம் அரங்கில் சிறப்பாக நிகழ்ந்தேறியது. மலர்ச்சி உரை அனுபவத்தில் திளைத்து கரைந்த மக்களின் அனுபவப் பகிர்வுகள் நெகிழ்ச்சியையும் நிறைவையும் தந்தன.
டிக்கெட் வாங்கி வந்திருந்தவர்களால் வந்த நிதி புற்று நோய் பாதிக்கப் பட்ட பிள்ளைகளின் பராமரிப்புக்கு தரப்படுகிறது. ‘உறுதியோடு உயர்வோம்’ மலர்ச்சி உரையால் வந்திருந்தவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது. ம..கி..ழ்..ச்..சி!
கருவாக்கி உருவாக்கி எனையாண்டு காத்தருளும் இறைவா நன்றி!
நெகிழ்வுடன்,
பரமன் பச்சைமுத்து
மலர்ச்சி ஃபவுண்டேஷன்
07.03.2023
#MalarchiFoundation #BniCoral #CancerFundForChildren #CancerChildren #CancerCure #Paraman #ParamanPachaimuthu #ParamanLifeCoach #LifeCoach #UrudhiyoduUyarvom #Puducherry #ParamannTouring #ParamanPuducherry #Jal #JoyAndLight