எப்போதும் மார்பில் தொங்கும்படி லிங்கம் கட்டிக் கொண்டு தினமும் அதற்கு பூசனைகள் வழிபாடு செய்பவர் என் அம்மா.
‘அம்மா, சுந்தரமூர்த்தி நாயன்மார் சங்கிலி நாச்சியாரைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு சிவன் முன் சத்தியம் பண்ணது எந்த மரத்தடியில?’
‘மகிழம்… மகிழம் மரத்தடியில!’
‘அங்கதான் போறோம் இப்போ! திருவொற்றியூர் போறோம்!’
….
வள்ளலார், ராமலிங்கமாக தன் அண்ணன் வீட்டில் ஏழுகிணறு பகுதியில் வசித்த காலங்களில், உருவ வழிபாட்டை கடக்காத அந்நாட்களில் இந்தக் கோவிலுக்கு தொடர்ந்து வந்திருக்கிறார்.
….
திருவாரூரில் பரவையாரை திருமணம் செய்து கொண்டிருந்த சுந்தரர், திருவொற்றியூருக்கு வந்த போது அங்கு கன்னிமாடம் அமைத்து சிவனுக்கு தொண்டு செய்து கொண்டிருந்த சங்கிலியாரைப் பார்த்து காதல் கொண்டாராம்.
‘நீ ஏற்கனவே ஒரு கல்யாணம் பண்ணவன். இப்ப என்னைக் கட்டிட்டு வுட்டுட்டுப் போயிட்டீன்னா, நான் என்னா பண்ணுவேன்! என்னைப் பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணு!’
கோவிலுக்குப் பின்புறமிருந்த மகிழ மரத்தடிக்கு சங்கிலியாரை கூட்டிப் போனாராம் சுந்தரரை. மரத்தின் பின்னே சிவன் மறைந்திருந்தாராம்.
‘உன்னைப் பிரிய மாட்டேன்! சத்தியம்!’
மகிழ மரத்தடியில் மனங்கொண்டு மணம் கொண்டார்கள் என்கிறது சேக்கீழார் சொல்லும் பன்னிரண்டாம் திருமுறை.
(ஊர் ஊராய் சென்று இறைவனை கண்டு தேவாரம் பாடுவதற்காக சில மாதங்கள் கழித்து புறப்பட்டதும், சத்தியத்தை மீறி ஊர் எல்லையைக் கடந்ததும் சுந்தரருக்கு கண் பார்வை போனதும் தனிக்கதை அல்லது இவற்றின் தொடர்ச்சி)
‘இதோ, இந்த மகிழமரம் இருக்கே! இந்த இடத்துலதான் அந்த மகிழ மரம் இருந்துருக்கனும். இதன் அடியில் எங்கோதான் அந்த சம்பவங்கள் நடந்ததா கதைகள் சொல்லுது. இந்த இடம்தாம்மா!’
அம்மாவைக் கொண்டு நிறுத்தியாயிற்று மகிழ மரத்தடியில். இருவருக்கும் சில நிமிடங்கள் பேச ஒன்றும் இல்லை. பேச்சு வரவில்லை!
(சொல்ல மறந்துட்டேன், ‘ஹேப்பீ உமன்ஸ் டே!’ )
: ‘அம்மா – ஆலய தரிசனம் – 2’
– பரமன் பச்சைமுத்து
திருவொற்றியூர்
08.03.2023
#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #Thiruvotriyur #Vallalar #Thevaram #Sundarar #SangiliNachiyar