
கணவனை புலியடித்துக் கொன்று விட, காடும் காட்டு வாழ்க்கையும் கசந்து போன காட்டுநாயக்கன் பழங்குடி இன பெல்லி, அதே முதுமலை புலிகள் காப்பக மலை காப்புக்காட்டுப் பகுதியில் இருக்கும் பொம்மனோடு இணையத் தொடங்குகையில் அவர்களது வாழ்வுக்குள், மின்சார வேலியில் அடிபட்டு பெற்றோர்கள் இறந்து போய், என்ன ஏது என்று புரியாத சோகத்திலிருக்கும் சிறு ரகு வருகிறான். காட்டை வெறுக்கும் பெல்லி, மிரட்சியும் பயமும் கொண்ட சிறு ரகு, காட்டை நேசிக்கும் பொம்மன் என மூவரும் இணைய, ஒரு குடும்பம் உருவாகிறது. அன்பை ஊற்றி ஊற்றி வளர்க்கப் பட்ட ரகு பெரியவனாக ஆகும் போது, அம்மு என்ற அநாதை சிறு குட்டி வந்து சேர, குடும்பம் பெரிதாகிறது.
காட்டுநாயக்கன் பழங்குடி இன குல தெய்வக் கல்லுக்கு மாலைகள் இட்டு வணங்கி ரகு, அம்மு முன்னிலையில் பெல்லியை திருமணம் செய்து கொள்கிறார் பொம்மன். தென்னிந்தியாவின் முதல் தம்பதி இவர்கள் என்று வரலாற்றில் இவர்களை பதிகிறது கானுயிர் துறை. அப்படி என்ன சாதித்துவிட்டார்கள், இதில் பேச என்ன பெரிதாக இருக்கிறது என்று உங்களுக்கு கேள்விகள் வருகிறதா? அவர்களால் வளர்க்கப்பட்டு அவர்களோடு குடும்பமாக வாழும் ரகுவும் அம்முவும் மனிதர்கள் இல்லை, அவை யானைகள்! இதை மிக சிறப்பாக காட்டும் ஆவணப்படம் – ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’

காட்டை, கானுயிர்களை, பழங்குடி இன மனிதர்கள் இருவரை, அவர்கள் வாழ்வில் வரும் இரண்டு கைவிடப்பட்ட யானைக் குட்டிகளின் வாழ்க்கையை என காட்டுக்கே நம்மைக் கூட்டிச்சென்று காட்டுகிறது படம்.
இந்த யானைக்குட்டிகளின் வாழ்க்கைப் பதிவின் இடையே காட்டப்படும் சிங்கவால் குரங்கு, குருவிகள், சாதாரணமாக போகும் சிறுத்தை, காட்டின் பகுதிகள் என படம் முழுக்க போனஸ் காட்சிகள். ‘ஒரு பறவை இப்படி பறக்கறதை, ஒரு குரங்கு இப்படி செய்யறதை இப்படி பதிவு பண்ணனும்னா, எவ்வளோ நேரம் காத்திருந்து இதை செஞ்சிருப்பாங்க? எவ்வளவு உழைப்பு கொட்டப்பட்டிருக்கும்?’ என்ற கேள்விகள் தானாகவே வருகின்றன.
பழங்குடி மலை வாழ் மக்களையும் அவர்களது இயற்கையோடு இசைந்த வாழ்வையும் பார்க்கையில் ஆசையும் பொறாமையும் வருகிறது.

சமீபத்தில் நான் பார்த்த நல்ல ஆவணப்படம் – ‘எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’. வெறும் நாற்பத்தியைந்து நிமிடப் படம், காட்டை, கானுயிரை குழுந்தைகளும் பெரியவர்களும் புரிந்து கொள்ள உதவும். நெட்ஃப்ளிக்ஸில் கிடைக்கிறது.
– பரமன் பச்சைமுத்து
10.03.2023
#ElephantWhisperers #NetflixDocumentary #Documentary #ForestLife #Nature #MuthumalaiTigerReserve #KattunayakanTribes #Paraman #ParamanPachaimuthu #ParamanReview