போற்றி என் வாழ்முதலாகிய பொருளே…

wp-16787896261027067601127805240161.jpg

கொற்கை பாண்டியர்கள் எல்லாம் முடிந்து காலம் உருண்டு மதுரை பாண்டியர்கள் செழித்திருந்த 9 ஆம் நூற்றாண்டு. பாண்டிய நாட்டை சிறப்புறச் செய்யவும் பாதுகாப்பு கருதியும் ஒரு முக்கிய முடிவு எடுத்து அமைச்சரை அழைத்தார்.
….

(கொஞ்சம் இருங்க. 9 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் வரகுண பாண்டியன் காலத்திலேருந்து அப்படியே பிரிட்டிஷ் இந்தியா காலத்துக்கு போய், ஒண்ண சொல்ல வேண்டியிருக்கு)

தேம்ஸ் நதிக் கரையில் வயது முதிர்ந்த அறிஞர்களான இரு பிரித்தானியர்கள் உளமாற உரையாடிக்கொண்டு  காலாற நடக்கிறார்கள். ஒருவர் வரலாற்றில் இடம் பெற்றவர், மற்றவர் அவரது பேராசிரியர்.

‘நான் ஒண்ணு படிச்சேன் சமீபத்துல அந்த மண்ணுல. அடேயப்பா! ஊணை உருக்குது, உதிரத்தை உருக்குது!’

‘அதை எனக்குத் தா. நான் படிக்கறேன். நான் உன் ப்ரொஃபஸர். மறந்துடாதே, உடனே எனக்குக் கொண்டு வந்து குடு’

‘அதை படிக்கனும்ணா அது புரியனும்ணா உங்களுக்கு தமிழ் தெரிஞ்சிருக்கனும்!’

….

(மறுபடியும் 9 ஆம் நூற்றாண்டுக்கே போவோம். வாங்களேன். காஃபி, டீ வேணும்னா குடிச்சிட்டு வந்துருங்க. இது ரெண்டுமே 9 ஆம் நூற்றாண்டுல பாண்டிய நாட்டுல இல்ல. கஞ்சி, பால், துவையல், தேறல் (மது) ஊண் கறி, மரக் கறிதான்)

இரண்டாம் வரகுண பாண்டியன் காலம் என வரையறுக்கப்படும் 9 ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட அரிமர்த்த பாண்டியன் தன் அமைச்சரை அழைத்தான்.

‘பாண்டிய நாட்டை சிறப்புற செய்யவும், குடிமக்களை காக்கவும் படைபலத்தை பெருக்க வேண்டும். சோழநாட்டின் கிழக்குக் கடற்கரையில் மிலேச்சர்கள் குதிரைகளை கலங்களில் கொண்டு வந்து விற்கிறார்களாம். போய் நல்ல குதிரைகளை பாண்டிய நாட்டுக்கு வாங்கி வாருங்கள். வேண்டிய அளவு பொன்னும் மணியும் தரப்படும் உங்களுக்கு.’

மன்னனின் உத்தரவை ஏற்ற அந்த பாண்டிய அமைச்சர் சோழநாட்டின்  கோடியில் கிழக்கே கடலும் கடற்கரையில் அடர்காடும் கொண்ட பகுதியான கோடிக்கரையை நோக்கிப் பல்லக்கில் பயணிக்கிறார் ( ஆமாம்! வந்தியத்தேவன், பூங்குழலி, படகோட்டி முருகையன், ராக்கம்மா, கரையர், பிச்சி மந்தாகினி, குழகர்கோவில் என ‘பொன்னியின் செல்வன்’ புதினத்து பாத்திரங்கள் அலைந்த அதே இடம்தான்) ( படகோட்டி முருகையன் பாத்திரத்தையும், சிறையில் இருக்கும் பைத்தியக்காரன் கருத்திருமன் பாத்திரத்தையும் இணைத்து ஒரே பாத்திரமாக்கி விட்டார் படத்தில் மணிரத்னம்!)

மதுரையிலிருந்து சோழமண்டலக் கடற்கரையை நோக்கிப் பயணித்த அமைச்சர் புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்ததும் ஈர்க்கப்படுகிறார், இறங்குகிறார். குருந்த மரங்கள் அடர்ந்த காட்டின் உள்ளே இறைவன் தடுத்தாட்கொள்ள, உள்ளே மலர்ச்சி வருகிறது. அன்று இறங்கியவர்தான் பிறகு அமைச்சராக பல்லக்கில் ஏறவே முடியவில்லை.

( குதிரை வாங்க அரசன் கொடுத்த செல்வத்தையெல்லாம் கோவிலுக்கே செலவழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது, இறைவன் நரிகளை பரிகளாக மாற்றி அனுப்பி வைத்தது என்பதெல்லாம் தனிக் கதை. நாம் இங்கே தொடப் போவதில்லை)

இறங்கி குருந்த காட்டுக்குள் சென்ற அமைச்சருக்கு ‘மலர்ச்சி’ நிகழ்ந்தது உள்ளே, அந்த மண்ணில். உள்ளே மாற்றம் வந்தால் எல்லாமே மாறிவிடுமே! அமைச்சர் அடியார் ஆனார். அந்த ஊருக்கு அந்த இடத்திற்கு வரும் முன், வந்த பின் என அவரது வாழ்க்கை இரண்டாகப் பகுப்பட்டு எழுதப்பட்டுவிட்டது.

அந்த ஊருக்கு வந்த போது அவர் பாண்டிய அமைச்சர் வாதவூரர்.  அந்த மண்ணில் அவருக்கு ‘மலர்ச்சி’ நிகழ்ந்ததற்குப் பிறகு அவர் ‘மாணிக்கவாசகர்’.  வாதவூரர் மாணிக்கவாசகராக மாற்றம் பெற்றார்.   அந்த ஊர்….!!

அந்த ஊர் திருப்பெருந்துறை!

( இப்போ 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 2023க்கு வாங்க!)

‘பரமன்! நடுவுல தேம்ஸ் நதிக்கரையில ரெண்டு பிரிட்டிஷ் ஆளுங்க பேசிட்டு போனாங்களே, ஏதோ ஒண்ணப் பத்தி? எதையோ படிச்சா ஊண் உருகுதுன்னு! அதை வுட்டுட்டியே தம்பி!’ என்கிறீர்களா?

பாருங்களேன், எவ்ளோ மறதி எனக்கு!. வர்றேன்!)

….

தேம்ஸ் நதிக்கரையில் நடந்து உரையாடிய இருவரில் ஒருவர் ஜி யு போப், மற்றவர் அவரை விட வயது முதிர்ந்த அவரது பேராசிரியர்.

‘திருவாசகம்ன்னு ஒண்ணு படிச்சேன். ஊணை உருக்கிட்டது அது. அடேயப்பா! அத படிக்கனும்ணா அது புரியனும்ணா அதுக்கு தமிழ் தெரியனும்!’

‘நீ மொழிபெயர்த்து கொடு. நான் படிச்சு அனுபவிக்கறேன். உலகத்துக்கு அது கெடைக்கட்டும்!’

அதன் பிறகு ஜி யு போப் திருவாசகத்தை மொழிபெயர்த்தது வரலாறு.   ஊணை உருக்கும் அந்த திருவாசகத்தை இயற்றியது இந்த திருப்பெருந்துறையில் மலர்ச்சி பெற்ற மாணிக்கவாசகர்.

…..

(இப்போ, 2023க்கு வர்றீங்களா ப்ளீஸ்?)

14.03.2023

காரைக்காலம்மையாருக்கு மாற்றம் நடந்த தொண்டை நாட்டின் திருவாலங்காடு, சுந்தருக்கு முக்கிய நிகழ்வு நடந்த பல்லவ நாட்டு திருவொற்றியூர் முடித்துவிட்டு என் அம்மாவை மாணிக்கவாசகருக்கு நிகழ்வு நடந்த பாண்டிய நாட்டு திருப்பெருந்துறைக்கு கூட்டி வந்திருக்கிறேன்.

மார்கழி மாதத்தில் பலரும் திருப்பாவையையும் திருவெம்பாவையையும் கொண்டாட, நான் திருவெம்பாவை முடிந்து அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சிக்காக காத்திருப்பேன்.  எனக்கு மட்டுமல்ல, இளையராஜா போல பலருக்கும் பிடித்தது அது. என் தந்தை என்னை வலுக்கட்டாயமாக படிக்க வைத்தது திருச்சாழல், அவர் அடிக்கடி படிப்பதைப் பார்த்து ஈர்ப்பில் நாமாக படித்தது திருப்பள்ளியெழுச்சி.  என்ன வார்த்தைகள், என்ன வரிகள், என்னே கட்டமைப்பு!

‘போற்றி என் வாழ்முதலாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற்கிணை துணை மலரடி!’

ஐந்தாவது ஆறாவது வரிகள் ‘சேற்றிதழ் கமலங்கள் தண் வயல் சூழ்      
திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!’

மணிவாசகரின் பத்து பதிகங்களும் ஆறாவது வரியில் ‘திருப்பெருந்துறை உறை சிவபெருமானே!’ என்று குறிப்பது இந்த திருப்பெருந்துறையையும் அதில் உறையும் சிவனையும்தான்.

( திருப்பெருந்துறை என்று கூகுளில் தேடாதீர்கள். திருப்பெருந்துறை இன்று ‘ஆவுடையார் கோவில்’ என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது)

சிதம்பரம் போலவே சிவனுக்கு உருவமில்லை, லிங்கத்தில் வெறும் ஆவுடையார் மட்டுமே இருக்க, இறைவன் அருவமென்று உணர்த்தப்படுகிறார். ஆவுடையார் கோவிலென்ற பெயர் வந்ததும் அதனாலேயே.

மணிவாசகர் எழுப்பிய கருவறை மண்டபத்தை சுற்றி வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு மண்டபங்கள் கட்டப்பட்டு விரிந்திருக்கிறது கோயில்.  சிற்பக்கலையின் உன்னதத்தை மேற்கூரை கொடுங்கையிலும் சிற்பங்களிலும் காண முடிகிறது.

திருவாசகத்தை மாணிக்கவாசகர் இயற்றியது திருப்பெருந்துறையில். அதை இறைவன் எழுதியது தில்லைச் சிற்றம்பலத்தில், அதன் மூல ஓலைச்சுவடுகள் இருப்பது புதுச்சேரி மடத்தில். அதன் பிரதி இருப்பது இங்கே திருப்பெருந்துறையில்.

திருப்பெருந்துறையின் கோவில் வெளிச்சுற்றில் மணிவாசகருக்கு நடந்ததாக சொல்லப்படும் நிகழ்வின் குறியீடாக இருக்கும்  குருந்த மரத்தின் அடியில் நின்றிருந்தோம்.

‘அம்மா, இந்த மரத்தைப் பார்த்தா எப்படி இருக்கு?”

‘எலை வில்வம் மாதிரியே மூணு மூணா இருக்கு. காய் நாரத்தம்பிஞ்சு மாதிரி இருக்கு. அது இல்லடா தம்பீ!’

‘என்னம்மா?’

‘உங்கப்பா இதையெல்லாம் பார்த்தாரோ இல்லையோ தெரியல. ஆனா, இந்த எடத்தில வந்து நிக்க பாக்க எனக்கு கொடுத்து வச்சிருக்கு!’ கையை குவித்து வணங்கிய படி நிற்கிறார் அம்மா.

வேறென்ன வேண்டும்!

போற்றியென் வாழ்முதலாகிய பொருளே…!

– பரமன் பச்சைமுத்து
திருப்பெருந்துறை,
14.03.2023

#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #Thiruperunthurai#Manickavasagar #Thiruvasagam #Thiruvadhavoorar #Avudaiyarkoil #Aavudaiyarkoil

….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *