கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி…

wp-1678883705545.jpg

‘ஹாலாஸ்ய மகாமித்யம்’ என்றொரு வடமொழி நூல் இருக்கிறதாம். நீங்களாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

வியாசர் எழுதிய ‘ஸகந்த புராணம்’ பற்றி ?

(நீங்களும் என்னை மாதிரிதானோ!ம்ம்!)
சரி, ஏ பி நாகராஜன் இயக்கி நடிகர்திலகம் சிவாஜி, நடிகையர் திலகம் சாவித்திரி நடித்த ‘திருவிளையாடல்’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா?

‘பரமன், இது எல்லாத்துக்கும் என்ன சம்மந்தம்?’ என்கிறீர்களா?  இது அனைத்தையும் சம்பந்தப் படுத்த ஒரே வரியில் சொல்வதானால் – ‘திருவிளையாடற்புராணம்’

‘ஹாலஸ்ய மகாமித்யம்’ ஆலவாய் நகரில் இறைவன் செய்த திருவிளையாடல்களை சொல்கிறதாம். இதையே வியாசர் தனது ‘ஸ்கந்த புராண’த்திலும் எழுதினார். வேதாரண்யத்தில் பிறந்து ஆலவாய் நகரில் மலர்ச்சி பெற்ற பரஞ்சோதி முனிவர் இதை மொழிபெயர்த்து தமிழுக்குக் கொண்டு வந்தாராம். மொழிபெயர்ப்பாக செய்யாமல், உள்வாங்கி செழுமைபடுத்தி எழுதினாராம். அதுவே ‘திருவிளையாடற் புராணம்’. மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி காலங்களில் தமிழ் பாடத்தில் படித்திருப்பீர்கள்.

இந்த திருவிளையாடற்புராணத்தின் 64 தொகுதிகளில் 4 தொகுதிகளை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை செய்து ஏபி நாகராஜன் இயக்கிய படமே ‘திருவிளையாடல்’.

மணக்குடி பக்கத்திலெல்லாம் கோயில் திருவிழாவென்றால் கூம்பு ஒலிபெருக்கி வழியே அலற விடப்படும் இந்தப் படத்தின் ஒலிச்சித்திரத்தை கேட்டு கேட்டு முழுப்படமும் வசனங்களும் ஏற்ற இறக்கத்தோடு என்னுள் பதிந்தே விட்டன.   

என் அம்மா, சித்தப்பாவெல்லாம் திருவிளையாடல் படத்து ரசிகர்கள். குறை சொல்பவரை சாதாரணமாக ‘நக்கீரர் பரம்பரை இவரு!’ என்று சொல்லுமளவுக்கு சமய இலக்கியத்தை சாமானியர்களிடமும் கொண்டு சேர்த்தது இந்தத் திரைப்படமே.

” கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே “
என்ற இந்தப் பாடலை தருமிக்கு இறைவன் எழுதித் தர, செண்பகப் பாண்டியனின் அவையில் நக்கீரர் அதில் குற்றம் கண்டுபிடித்து, வந்திருப்பது இறையென்று அறிந்தும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்று நிற்க, இறைவன் நெற்றிக் கண் திறக்க, பொற்றாமரைக் குளத்தில் போய் விழுந்து கிடப்பார் என்று திரைப்படம் சொன்ன காட்சி பலருக்கும் பதிந்து போனது.

ஏழைப் புலவன் தருமி காட்சிகளை விட, அவ்வயதில் நம்மை சிரிக்க வைத்து கவர்ந்தது ஹேமநாத பாகவதர் – பாணபத்தரர் காட்சிகளும் ‘பாட்டும் நானே பாவமும் நானே!’ பாடலும் அதன் முன் பின் நகையும்.

திரைப்படத்தில் வராத திருவிளையாடற்புராணத்தின் மற்றொரு ஈர்க்கும் தொகுதி – வைகை கரை உடைய வரும் வெள்ளமும் அதையொட்டிய நிகழ்வுகளும். குடிமக்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட பகுதியளவிற்கு வைகைக்கு கரை உயர்த்த வேண்டுமென்ற பாண்டிய மன்னனின் அரசாணையை ஏற்று ஒவ்வொருவரும் செயல்பட, வைகைக் கரையில் பிட்டு அவித்து விற்றுப் பிழைக்கும் ஏழை வந்தி பாட்டிக்கு எவரும் இல்லாமல் வருந்த, இறைவன் வந்தான் என்று விவரிக்கிறது திருவிளையாடற்புராணம்.

‘தலையில் சிம்மாடு, கவித்த கூடை, தோளில் மண்வெட்டியோடு இடுப்பில் மட்டும் உடை என தலைவன் ஆலவாய் நகரில் தரையில் இறங்கி வந்திருந்த போது எப்படியிருந்திருக்கும்!’ என்று சிறுவயதில் கற்பனை செய்து களித்ததை ஒவ்வொரு முறை திருவாலவாய் நகருக்கு போகும் போது நினைவு படுத்தி ஆழ்ந்திருக்கிறேன்.   இதை மனதில் வைத்து வைகையை பார்ப்பதற்காகவே ஒரு முறை ஆலவாய் நகருக்குப் போனதுண்டு.

( என் தந்தையின் மணிவிழாவிற்கு பதிப்பித்த மணிவிழா மலரில் ‘பிட்டுக்கு மண் சுவந்தவனை நெஞ்சில் சுமப்பவருக்கு…’ என்று அவரைக் குறிப்பிட்டேன் என்பது கொசுறு தகவல்)

வளர வளர, கூண் பாண்டியனின் நோய் தீர்க்க சோழ நாட்டிலிருந்து ஆளுடைப்பிள்ளை வந்து ‘மந்திரமாவது நீரு வானவர் மேலது நீரு’ என்று பாடி குணம் செய்தார் என்று பன்னிரெண்டாந்திருமுறை படித்த போதும், ‘திரு ஆலவாயான் திருநீரே!’ என்ற கடைசி வரியில் ‘ஆலவாய்’யில் தொக்கி, வைகையும் நடந்து வந்த தலைவன் கதையும் வந்து நிற்கும்.

மௌரியப் பேரரசின் கௌடில்யர் குறிப்புகளில் உள்ளது இந்த ஊர், மெகஸ்தனிஸின் குறிப்பில் உள்ளது இந்த ஊர், பண்டைய ரோமப்பேரரசோடு வணிகம் கொண்டது இந்த ஊர், சு வெங்கடேசனின் கட்டுரைகளில், கதைகளில் உணர்ச்சி பொங்க வரும் இந்த ஊர். இதில் எதைப்படித்தாலும் ‘ஆலவாய் நகர்’ வரும் போதெல்லாம், ‘தலைவன் நடந்து வந்த ஊர்!’ என்று கூடவே மண்டையினுள் ஒரு படம் ஓடும்.

‘சரிப்பா! இப்ப எதுக்கு இதெல்லாம்?’

என் அம்மாவுக்காக சில சிவ ஆலயங்களுக்குப் போன போது, ‘பொற்சபை, ரத்தின சபை பாத்துட்டாங்க! அடுத்து வெள்ளி!’ என்றொரு எண்ணம் வர, இதோ வந்து விட்டோம்.

…..

‘தம்பீ! நீ ரெண்டர வயசு புள்ளை. அப்ப வந்தேன் இந்த ஊருக்கு. மாதவிடாய் வந்து டூர் பஸ்லயே நான் மட்டும் உட்கார்ந்து இருந்துட்டேன். பாட்டியும் உங்கப்பாவும் உன்ன தூக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டாங்க. இந்த ஊர்ல நான் எறங்கவே இல்லை!’

‘நாப்பத்தியேழு வருஷத்துக்கப்புறம் இதோ வந்துட்டோமேம்மா! வண்டியிலேருந்து கீழ இறங்கு!’

கோவிலின் உள்ளே பொற்றாமரைக் குளத்தருகில் நெருங்க நெருங்க அம்மா உற்சாகமாகிறார். ‘இங்கதான் நடந்து வருவாரு!’ ‘அந்த படியிலதான் நக்கீரர் எழுந்திருப்பாரு!’ குழந்தையாக மாறி நிற்கிறார்.

சுந்தரேஸ்வரரை நெருங்கும் முன், அம்மாவை வலது பக்கம் திரும்பச் சொல்லி காட்டினேன். ‘அம்மா! வெள்ளியம்பலம் இதான்! டேய் பரி, வெள்ளியம்பலம்!’  கண்மூடி நிற்கிறார் அம்மா.

‘தம்பீ! காலை மாத்தி ஆடறாரு பாரு நடராஜர், நம்ம சிதம்பரம் மாதிரி இல்ல!’

‘ஆமாம்!’

என் இலக்கு முடிந்தது. ‘இனி வருவதெல்லாம் போனஸ்!’

குறிப்பிட மறந்து விட்டேன்! தேவாரத்திலும், சில சங்க இலக்கியங்களிலும் ஆலவாய், ஆலவாய் நகர், திருவாலவாய், நான்மாடக்கூடல், முக்கூடல், கூடல் நகர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கும் இந்த நகருக்கு இன்னொரு பெயர் உண்டு, இன்றைய வழக்கிலும் பல நூல்களிலும் உள்ள பெயர் அது. அது… மதுரை!

: அம்மா – ஆலய தரிசனம் – 4

– பரமன் பச்சைமுத்து
மதுரை,
15.03.202

#AmmaAalayaDharisanam #AmirthamPachaimuthu #MuPachaimuthuArakkattalai #ParamanTouring #ParamanAmirtham #Madurai #MaduraiMeenakshi #Thiruvilaiyadal #ThiruvidaiyalPuranam
#ParamanMadurai

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *