
தமிழ் தெரியாத, தமிழ்நாட்டு உணவே பிடிக்காத, பேருந்து பயணத்தில் கூட தமிழ்ப்பாடலை கேட்க சகித்துக்கொள்ள முடியாத, மது, புகை போன்ற பழக்கங்களை வெறுக்கும் கேரள நாட்டு ஜேம்ஸ் தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக மனைவி மகன், உற்றார், உறவினர், ஊர்க்காரர்களோடு வாகனம் ஒன்றை அமர்த்திக்கொண்டு கேரளாவிலிருந்து தமிழகத்தின் வேளாங்கண்ணிக்கு வருகிறார்.
சாலைப் பயணத்தில் நண்பகல் நேரத்தில் உண்ட மயக்கத்தில் மொத்த பேரும் ஆழ்ந்து உறங்கி வழிகையில், ஜேம்ஸுக்கு மட்டும் விழிப்பு வருகிறது. தூக்கக் கலக்கத்தில் ஓடிக்கொண்டிருக்கும் வண்டியிலிருந்து சன்னல்கள் வழியே இருமங்கிலுமுள்ள சோளம், கம்பு வயல்களை பார்க்கிறார், ‘டிரைவர் வண்டியை நிறுத்து’ என்று மலையாளத்தில் சொல்கிறார். வண்டி நின்றதும் இறங்கியவர் சோளக்கொல்லையினுள்ளே புகுந்து நடந்து கொண்டேயிருக்கிறார். ஜேம்ஸ் சிறுநீர் கழிக்கப் போயிருக்கிறார் என்று எண்ணிய ஓட்டுநர் வண்டியை விட்டு இறங்கி காத்திருக்கிறார்.

அங்கே, வயல்களுக்குள் நடந்து நடந்து கடந்து உள்ளிருக்கும் ஒரு சிற்றூரின் உள்ளே நுழைந்து தெருக்களின் வழியாக தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறார் ஜேம்ஸ். இங்கே, நேரம் ஆக ஆக வண்டியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து ஜேம்ஸை காணோம் என்று பதறுகிறார்கள்.
தெருக்கள் வழியாக வளைந்து வளைந்து பயணித்த ஜேம்ஸ், ஒரு காரை வீட்டை நெருங்கியதும் சுவரோரம் இருந்த வக்கோல் போரிலிருந்து வைக்கோலை எடுத்து கவணையில் நிரப்பி் பசுமாட்டை சாப்பிடச் செய்கிறான். அருகில் நிற்கும் நாயிடம் நட்பாக சமிஞ்கை செய்கிறான். இடுப்பில் இருந்த வேட்டியை அவிழ்த்து விட்டு, கொடியில் உலர வைக்கப்பட்டிருந்த கைலியை எடுத்து கட்டிக்கொள்கிறான். வீட்டினுள்ளே நுழைந்து அங்கே தொலைக்காட்சியில் பழைய படம் பார்த்துக் கொண்டிருக்கும் மூதாட்டியிடமர்ந்து வாஞ்சையோடு தடவிக் கொடுத்து வெற்றிலைப் பெட்டியிலிருந்து ஒரு பாக்கை எடுத்து அவள் கையில் தந்து தின்னச் செய்கிறான். உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருக்கும் பெண்மணியைப் பார்த்து ‘குழலி… டீ போட போறேன், சக்கரை எங்க இருக்கு?’ என்று கேட்டுக் கொண்டே அடுக்களையில் நுழைகிறான்.
‘முருகையன் ஸ்பிரேயர் வாங்கிட்டு போனான், இன்னும் தரலை. போய் வாங்கிட்டு வர்றேன்!’ என்று சொல்லிக் கொண்டே மாடத்தில் இருக்கும் திருநீறை அள்ளி நெற்றியில் பூசிக்கொண்டு வாசலில் நின்ற டிவிஎஸ் எக்ஸல் வண்டியை எடுத்துக் கொண்டு வெளியே போகிறான்.
தங்கள் ஜேம்ஸ்ஸை தேடி ஊருக்குள் வந்த கேரளத்து கூட்டம் எதிரே வர, அவர்களை கவனிக்காமல் கூட சாதாரணமாக கடந்து போகிறான் ஜேம்ஸ்.
வந்தேயிராத தமிழ்நாட்டில் இதுவரை கேள்வியே படாத எங்கோயிருக்கும் ஒரு சிற்றூரில், முற்றிலும் தெரியாத தமிழ்மொழியை சிறப்பாக சுத்தமாக ஜேம்ஸ் பேசுவது எப்படி? ஜேம்ஸ் எப்படி விபூதி பட்டையோடு, வாயில் பீடியோடு? ஜேம்ஸின் குடும்பம் அதிர்ச்சியில் தெருவில் நிற்கும் போது, நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது படம். (இதற்கு மேல் கதையை சொல்லப் போவதில்லை, நீங்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்)
ஜேம்ஸாக மம்மூட்டி, குழலியாக ரம்யா பாண்டியன் என தேர்ந்த நடிகர்கள் வேண்டியதை சிறப்பாகத் தந்து நம்மை ஒன்ற வைக்கிறார்கள்.
ஒவ்வொரு காட்சிக்கும் மிகச் சரியாக பொருந்தும் பழைய தமிழ்ப்படங்களின் வசனங்களை, பாடல்களை தொலைக்காட்சியில் பின்ணணியில் ஓட விட்ட இயக்குநரின் ரசிப்பை கோர்த்தலை எவ்வளவு பாராட்டினாலும் தகும். உற்றுக் கவனித்தால், பாலசந்தர் படத்து ‘இருமல் தாத்தா’ பாத்திரம் போல, தொலைக்காட்சியே ஒரு கதாபாத்திரமாக படம் முழுக்க வந்துகொண்டிருப்பதை உணரலாம்.
‘இது நம்பற மாதிரி இல்லை! அதெப்படி முடியும்?’ ‘இது மாதிரில்லாம் நடந்திருக்கு!’ என்று இரு தரப்பு விவாதங்களை கிளப்பி விட்டிருக்கிறது படம். விவாதங்கள் இதற்குப் பிறகும் தொடரும். அது இயக்குநரின் வெற்றி. வழக்கமான ஃபார்முலாக்களிலிருந்து வித்தியாசமான ஒரு திரைப்படம் வேண்டும் என்போர்களுக்கு என் பரிந்துரை இந்தப் படம்.
‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்று படத்தின் தலைப்பை மலையாளத்தில் போடுகையில் அதன் நிழல் தமிழில் தெரிவது ஏன் என்று படம் பார்த்த பிறகே புரிகிறது. மலையாளப் படமுமல்ல, தமிழ்ப்படமுமல்ல, மலையாளத் தமிழ்ப்படம்.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ – ஓடிடியில் வித்தியாசமான திரைப்படம். பாருங்கள்.
– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து
#NanpakalNerathuMayakkam #Mammooty #FilmReview #ParamanReview #ParamanFilmReview #Paraman