ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

wp-1679809970130.jpg

சூரியன் ஓர் அதிசயம்!

152 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கொண்டு இங்கேயிருக்கும் நமக்கும், செடிக்கும், கொடிக்கும், உயிரினங்களுக்கும் மொத்த பூமிக்கும் ஆற்றலை அள்ளி வழங்கிக்கொண்டே இருக்கிறது. அட, ஆமாம் சந்திரனுக்கும் கூட!

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வலம் வருவதாக கொள்கிறது சமய நம்பிக்கை. அதையொட்டியே சூரியனின் அம்சம் பெற்ற சூரியனின் திருமகன் என்று வடிக்கப்பட்ட கர்ணனின் கதையை சொல்லும் திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், டிஎம்எஸ், பிபி ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன் என நால்வரும் பாடி சிலிப்பூர்ட்டும் ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!’ பாடலில் அப்படியொரு காட்சி உருவகம் தந்திருப்பார்கள். எப்படி எழுதியிருக்கிறார் கவியரசு கண்ணதாசன்! (சாதாரணமா பாட வேண்டிய அந்தப் பாடலை தாடையை எல்லாம் துடிக்க துடிக்க அசைத்து பாடுவதாக நடித்திருப்பார் நம் நடிகர் திலகம்!)

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி ஒரு பால்வெளியில் உட்காரந்து கொண்டு உலகிற்கெல்லாம் ஆற்றலை வாரி பொழிந்து கொண்டிருக்கிறது சூரியன். இன்னும் பல்லாயிரமாண்டுகளுக்கு அதைத் தொடரும்.

‘நெருப்புடா…’ என்ற பின்ணணி தீம் மியூசிக்கை ஒலிக்கவிட்டது போல தகதகவென சுழலும்  ஹைட்ரஜன், ஹீலியம், பிளாஸ்மா நிறைந்த கோளமான ஞாயிறை நோக்கி நெருங்கிப் போய் உள்ளிருப்பதை அதிசயமென அறிய நாளும் நகர்கிறது அறிவியல் உலகம். ஞாயிறிலிருந்து வெளியே வருவதே அதிசயம் என்று நிறுத்துகிறது என்னை.

ஞாயிறிலிந்து வெளியேறி 152 மில்லியன் கிலோ மீட்டர் பயணித்து 8.3 நிமிடங்கள் கழித்து பூமிக்கு வந்து தாவரத்தில் படும் கதிர், குளோரோஃபில் உருவாக உதவி செய்து உலகிற்கே உதவுகிறது. என் உடலில் படும் போது எனக்கு D3 சத்தை வாரி வழங்கி என்னை உறுதியாக்கி வாழ வைக்கிறது.   மனைவி துவைத்துப் போடும் வேட்டி சட்டை புடவை போர்வைகளை உலர்த்தி கிருமி நீக்கம் செய்து விடுகிறது.  சூரிய மின்சாரம் தொடங்கி, எல்நினோ, லா நினோ வரை எத்தனை நிகழ்கிறது சூரியனால்.  சூரியனின் வெய்யிலில் காயவைப்பதாலேயே இயங்கும் தொழில்கள் எத்தனை என்று எண்ணுகையில் சூரியன் காய்வதால்தான் இயங்குகிறது உலகம் என்ற எண்ணம் வந்து நின்று போகிறேன்.

இப்போது சாய்வாகவே சுழன்று சூரியனை சுற்றி வரும் பூமி இன்னும் பதினோராயிரம் ஆண்டுகளில் செங்குத்தாக அமர்ந்து சுற்றுமாம். அப்போது கோடைக்காலமும் பனிக்காலமும் மாறுமாம். அதன் பிறகு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளில் சூரியனின் எரிபொருள் வாயுக்கள் தீர்ந்து போய் நெருப்பு குறைந்து, வெறும் விண்மீனாக நிற்குமாம். அப்போது இருப்பவர்கள் பறக்கும் டாக்ஸியில் சூரியனில் போய் இறங்கலாம். ‘சென்னைக்கு மிக அருகிலுள்ள சூரியனில் வீட்டுமனை!’ ‘தி ஒரிஜினல் அண்டு ரியல் சன் சிட்டி’ என விளம்பரங்கள் வரலாம். ‘சன் டிவியிலிருந்து சன் வரை…’ என்று கவிப்பேரரசு ஒருவர் நூலெழதலாம்.
அதன் பிறகு சூரியன் வெடித்துச் சிதறி கருந்துளையாக மாறி பிறகு மறைந்தே போகலாம். 

அது எப்போது நடக்குமோ நடக்கட்டும். இப்போது என் அதிசயம்… அதோ அவ்வளவு தூரத்திலில் 152 பில்லியன் தூரத்தில் இருக்கும் ஒரு பொருளை என் வெற்றுக் கண்ணால் பார்க்க முடிகிறது! அதோ அவ்வளவு தூரத்தில் 152 பில்லியன் தூரத்திலிருக்கும் சூரியன் என்னை தன் கதிர்கைகளை நீட்டி என்னை தொடுகிறது… வாட் எ கனெக்ட்! என் உடலில் தன் வெப்பத்தை படரவிட்டு என்னைத் தழுவி மெழுகுகிறது. என் தோலில் கிருமித்தொற்றும் பூஞ்சைத்தொற்றும் வராமல் கழுவிக் காயவைத்துக் காக்கிறது. என் ஊணில் உதிரத்தில் டி3யை ஊற்றுகிறது.

(புற ஊதாக்கதிர்கள்  பாதிக்கும் என்பவர்கள் தோல் மருத்துவர் பரிந்துரைப்படி முகத்திற்கு வெய்யில் களிம்புகளை பூசிக்கொள்ளட்டும்)

சூரியன் ஓர் அதிசயம்!
அதோ அவ்வளவு தூரத்தில் 152 பில்லியன் தூரத்திலிருக்கும் சூரியன் என்னை தன் கதிர்கைகளை நீட்டி என்னை தொடுகிறது!  ‘அவதார்’ திரைப்படத்தில் ஈவா அன்னையின் எண்ணற்ற கரங்களால் ஜாக் சல்லிக்கு ஒரேயொரு முறை நிகழும் அந்த இணைப்பு எனக்கு தினம் தினம் நிகழ்கிறது!

‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி!

அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கம் தந்தாய் போற்றி!

தாயினும் பரிந்து சாலச் சகலரை அணைப்பாய் போற்றி!

தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம் துணைக்கரம் கொடுப்பாய் போற்றி!

தூயவர் இதயம் போலத் துலங்கிடும் ஒளியே போற்றி!

தூரத்தே நெருப்பை வைத்து சாரத்தைத் தருவாய் போற்றி!

ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி!

நானிலம் உள நாள் மட்டும் போற்றுவோம் போற்றி போற்றி!’

வாட் எ கனெக்ட்!

….

கோவையிலிருந்து வேட்டவலம் நோக்கிக் பயணிக்கையில், பெருந்துறையில் காலையுணவிற்கு நிறுத்திய இடத்தில், ‘எப்பா! சீக்கரம் எடுப்பா ஃபோட்டோவ, நேர் சூரியன், கண்ணு கூசுது!’

….

– பரமன் பச்சைமுத்து
பெருந்துறை
26.03.2023

#ParamanTouring #ParamanCovai #Perunthurai #ParamanPachaimuthu #Sun #ParamanOnSun #Karnan #Kannadasan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *