தெலுங்கானாவில் நகரமும் இல்லாத கிராமும் இல்லாத கலவையான, காலகாலமான நம்பிக்கைகளில் ஊறிப் போய் இருக்கும் ஊரொன்றில் வாழும், வாய் துடுக்கும் குதூகலமும் நிறைந்த முதியவரான நிலக்கிழார் கொமரய்யா திடீரென இறந்து போய் விட, அதைத் தொடர்ந்து இறுதிச்சடங்குகள் எரியூட்டுதல் எல்லாம் முடித்த குடும்பத்தினர் அதன் தொடர்ச்சியான சடங்காக ‘பிண்டம் வைக்கும்’ உணவை காக்கை உண்ண மறுக்கிறது.
ஊரில் நன்றாக இருந்தவர்கள் ஒவ்வொருவராக நோயில் விழ, ‘செத்துப் போன கொமரய்யாதான் நிறைவேறாத ஆசையால ஊரையே பீடிக்கிறாரு! இனி ஒவ்வொருத்தரா சாவப்போறோம்!’ என்று பீதி கிளம்புகிறது ஊரில். ‘இறந்து போன தாத்தாவின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றுங்கள். பதினோறாம் நாள் பிண்டம் வைக்கும் போது காக்கை அதை உண்ண வேண்டும்! இல்லையென்றால் உங்கள் குடும்பத்தை ஊரை விட்டே தள்ளி வைத்து தண்டனை தருவோம், பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்கிறது பஞ்சாயத்து தீர்ப்பு.
ஒரு மனிதன் இறந்த பிறகு அவன் வீட்டார் வைக்கும் உணவுப் பிண்டத்தை காக்கை உண்பதன் மூலம் இறந்த அவனது ஆன்மா நிறைவு கொள்வதாக ஒரு நம்பிக்கை சமூகத்தில் காலம்காலமாக இருந்து கொண்டேயிருக்கிறது.
பதினோறாம் நாள் நெருங்க, புதிய பல பிரச்சினைகள் எழுகின்றன குடும்பத்திற்குள்ளே. காக்கை கடைசியில் உணவை உண்டதா? அந்தக் குடும்பத்திற்கு என்ன ஆயிற்று? இறந்து போன கொமரய்யா உணர்த்த விரும்பியது எது? அவரது அந்த நிறைவேறாத ஆசை என்ன? இவற்றை உணர்ச்சியும் காட்சியுமாக கதை பண்ணி கலக்கியிருக்கிறார்கள் ‘பலகம்’ என்ற பெயரில் (or பாலகம்?!).
ஓடிடியில் அமேசான் பிரைமில் வந்திருக்கும் இந்த தெலுங்குப் படத்திற்கு, பாடல்கள் மொழிமாற்றம் உட்பட, மிக அட்டகாசமாக தமிழ் வடிவம் தந்திருக்கிறார்கள்.
இறுதிக் காட்சிகளில் வரும் குறைந்த சதவீதம் தவிர படம் முழுக்க வேறெங்கும் சினிமாத்தனம் இல்லாத ஒரு சினிமா. யதார்த்தத்திற்கு மிக அருகில் நிற்கும் இது போன்ற படங்கள் வெற்றி பெறுவது சினிமாவுக்கு நல்லது. அது, புதிய படைப்புகளை படைப்பாளிகளை ஊக்குவித்து உருவாக்கும். டைலர் நரசய்யாவாக வரும் படத்தின் இயக்குநருக்கு வாழ்த்துகள்!
வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பலகம்’ – காக்கா செய்யும் சேட்டை. நன்று. பாருங்கள்.
: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
#Balagam #BalagamFilmReview #ParamanReviews #Paraman #ParamanPachaimuthu