நான்காம் வகுப்புப் படிக்கும் போது, நண்பர்களுக்கு பொருள்களை பரிசாகத் தரலாமென்ற பிரஞ்ஞை கூட எனக்கு இல்லாத அவ்வயதில், பலராம ஐயர் வீட்டு நட்ராஜ் ‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று கண்ணாடியும் மரச்சட்டமும் போடப்பட்ட, ஒரு கையளவு உயர அகலம் கொண்ட அம்மன் படமொன்றைத் தந்தான். மணக்குடியிலிருந்து சபரிமலைக்குப் போகிறவர்களின் குருசாமியாக இருந்த அவனது அப்பா, சபரிமலையிலிருந்து திரும்பும் போது அப்படியே சில கோயில்களுக்கும் சுற்றாலாவாகப் போனபோது, ஓர் ஊரில் இதை வாங்கி வந்தாராம். அந்தப் படத்திலிருக்கும் அம்மனின் மூக்குத்தி மட்டும் ஒளிர்வது மாதிரி ‘ஜிகினா’ வைத்து வரைந்திருந்தார்கள். ‘நன்றி!’ என்றாவது சொன்னேனா நினைவில் இல்லை. அப்பாவிடம் வந்து தந்துவிட, அவர் அதை பூசையறையில் வைத்துவிட்டதால், வெகுகாலம் இருந்த அந்தப் படம் மட்டும் இன்னும் நினைவில் உள்ளது.
…..
2023
நிலத்தில் ஓரிடத்தில் நிற்கிறீர்கள், உங்கள் இடப்பக்கமும் கடல், வலப்பக்கமும் கடல், முன்னேயும் பரந்து விரிந்த கடல் என்றால் எப்படியிருக்கும்! மூன்றும் வேறு வேறு கடல்கள் என்றால்!
‘பரந்து விரிந்த இத்தனை பெரிய நாட்டின் ஒரு கூர் முனையில் நிற்கிறோம், இதோ இந்தப் பக்கம் போனால் ஆப்பிரிக்கா, அந்தப் பக்கம் போனால் மாலத்தீவுகள், அப்படி போனால் ஆஸ்த்திரேலியா, அந்தப் பக்கம் இலங்கை, நடுவில் எங்கும் நிலமே இல்லை… நீர்… நீர்…கடல்… வெறும் கடல்….’என்ற எண்ணமும் கூடிவிட்டால்!
‘அந்தத் தவயோகி இங்கேதான் திரிந்திருக்க வேண்டும்! இதோ இங்கிருந்துதான் அந்தப் பாறை வரை நீந்திப் போயிருக்க வேண்டும்! அப்போது இந்தப் படிகள் எல்லாம் இருந்திருக்காது!’
‘அகத்தியரும் வந்திருக்கலாம், அருகர்கள் பலர் இங்கு வாழ்ந்து மக்களை வாழ்த்தியிருக்கலாம். நமக்கு விவரங்கள் தெரியவில்லை!’
எண்ணங்களின் கடலில் திளைக்கும் நம் முன்னே முப்பெருங்கடல்கள் ஆர்ப்பரிக்கின்றன. இடதில் நமக்குப் பரிச்சயமான வங்காள விரிகுடா, வலதில் மும்பையிலும் இலங்கையிலும் பார்த்த அரபிக் கடல், எதிரே இந்துமாக் கடல். கரையில் சூரிய உதயத்தைக் காண எல்லா இடங்களிலிருந்தும் வந்துள்ள மக்கள் கடல்.
நீரைக் கண்டாலே இறங்கிவிடும் நமக்கு, முன்னே மூன்று கடல் சங்கமம் என்றால்… விடமாட்டோமே! இறங்கினால்… ‘க்ளீன் வாட்டர்!’ ‘சார், ஆத்துத் தண்ணி மாதிரி சுத்தமா இருக்கு சார்!’ என்று என் ஓட்டுநர் கத்துமளவிற்கு மாசற்ற சிலீர் கடல்(கடல்கள்!) நீர். முழங்காலளவு நீரைத் தாண்டி இறங்கினால் ‘ஃப்ஷ்ஸ்ஸ்க்’ என்று ஊதி நம்மை நிறுத்துகிறார் காவல்துறை அதிகாரி.
இந்தியாவின் பல இடங்களிலிருந்தும் வந்து இந்த முனையில் குவிந்திருக்கும் பலதரப்பட்ட மக்களை காண்பதே ஓர் அனுபவம். அதிகாலையிலிருந்து காத்திருந்து, 06.15 ஆகியும் சூரியன் வராததால் தவித்து, அவரவர் மொழியில் ‘சூர்ய நஹி ஆவே?’ (குஜராத்தி)
‘க்யா, சூரஜ் நஹின் ஆயேகா?'(இந்தி) ‘சூர்யன் வர்றில்லே!’ (மலையாளம்) ‘சூர்யுடு ரா லேதா?’ (தெலுங்கு) ‘சூர்ய பருவுதில்லவே!’ (கன்னடம்) என வினவுவதைக் காண்பதுவும் தனி அனுபவம்தான். ‘சன் ரைஸ் அல்ரெடி ஹேப்பண்டு. த க்ளவுட்ஸ் ஆர் கவரிங்!’ என்று நமக்கு தெரிந்த மொழியில் எல்லாரிடமும் சொல்ல முடியவில்லை.
(எல்லா நாளும் சூரிய உதயம் எளிதாகத் தெரிவதில்லை என்பதை எவராவது சொல்ல வேண்டும் பயணிகளுக்கு. ‘நான் இதுவரைக்கும் மூணு தடவை வந்துருக்கேன். மூணு தடவயுமே சூரிய உதயம் பாக்க முடியலண்ணா!’ என்றான், நாகர்கோவிலிலிருந்து சென்னைக்குப் புறப்பட இருந்த என் காரை குமரிமுனைப் பக்கம் திருப்பிய குகன்)
அட்டகாசமான காற்றும் சாரலும் கடலென மக்களும் கடல் சங்கம்முமென நிறைக்கிறது கன்னியாகுமரி. அதனால்தான் ‘தெற்கில் வாழும் குமரியடி பாப்பா
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் – அதன் கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா’ என்று பாடினாரோ பாரதி!
அக்டோபர் இரண்டு அன்று சூரிய ஒளி காந்தி மண்டபத்திற்குள் விழும்படி வடிவமைத்துக் கட்டிய அந்த இந்திய வல்லுநருக்கு மலர்ச்சி வணக்கம்.
…..
இன்று காலை குமரிமுனையில் நிற்கையில், இப்போது வளர்ந்து ராணிப்பேட்டையில் ஒரு தொழிற்சாலையில் பணிபுரியும் என் நான்காம் வகுப்புத் தோழன் நட்ராஜ் நினைவில் வந்தான்.
‘சிவா! எங்கப்பா வாங்கிட்டு வந்தாங்க. இந்தா இது உனக்குதான்!’ என்று 1981ல் அவன் தந்தது, சபரி மலைக்குப் போய்விட்டு வரும் போது அப்படியே சுற்றுலா போன அவனது தந்தை குமரி முனையிலிருந்து வாங்கி வந்த கன்னியாகுமரி அம்மன் படம்!
….
பரமன் பச்சைமுத்து
கன்னியாகுமரி
24.04.2023