கடாரங்காயை பார்க்கும் போதெல்லாம் ராஜராஜ சோழனும், நார்த்தங்காயை பார்க்கும் போதெல்லாம் மணக்குடியும் என் அம்மாவும் அப்பாவும் நினைவுக்கு வருவர் எனக்கு.
கடாரங்காய்க்கும் நார்த்தம் காய்க்கும் வித்தியாசம் தெரியுமா உங்களுக்கு? எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, குடை ஆரஞ்சு எனும் கூம்பு ஆரஞ்சு எனும் கமலா ஆரஞ்சு, நார்த்தம், கடாரம் எல்லாம் ஒரே வகையில்தான் வருகின்றனவாம் என்றாலும் அவைகள் வேறு வேறு.
கடாரத்தின் மீது முதலாம் ராஜராஜன் படையெடுத்து வென்று வந்த போது, அங்கிருந்து கொண்டு வந்த பெரிய வகை காய்க்கு ‘கடாரங்காய்’ என பெயர் வைத்தனராம்.
மணக்குடியில் எங்கள் ஓட்டு வீட்டின் பின்னே எலுமிச்சம், நார்த்தம் என இரண்டும் கிளைத்து தழைத்து நிற்கும், காய்த்துத் தொங்கும். அணில்கள் கடித்துப் போட்டாலோ பெருமழை காலங்களிலோ தரை முழுக்க நார்த்தம் காய்களாக கிடைக்கும். சுஜாதாவின் ‘கரையெல்லாம் செண்பகப்பூ’வை மாற்றி ‘தரையெல்லாம் நார்த்தங்காய்’ என்பேன் நான். காய்த்துத் தள்ளும் நாரத்தங்காய்களை வைத்து ஜாம் செய்வார் அப்பா. நார்த்தம் ஊறுகாய் செய்வார் அம்மா. வெல்லம் வேண்டிய அளவு சேர்த்து புளிப்பும் இனிம்பும் கலந்த ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும் அது. இன்று வரை சென்னையில் எனக்கான நார்த்தம் ஊறுகாய் அம்மாவிடமிருந்து மணக்குடியில் இருந்துதான் வருகிறது.
சிறுவயதிலிருந்தே நாரத்தையோடு ஏதாவதொரு வகையில் தொடர்பில் இருக்கும் எனக்கு இங்கே, சென்னையிலும் ஒரு நாரத்தம் மரம் வாய்த்தது. பால்கனிப் பக்கம் போகும் போதெல்லாம், காய்த்துத் தொங்கும் தனது மினுமினுப்பான காய்களாலும் கரும் பச்சை தழைகளாலும் என்னை ஈர்த்து நிறுத்தி விடும் பக்கத்து மனையின் ஒரு நார்த்தம் மரம்.
பக்கத்து வீட்டு மருத்துவரின் நார்த்தம் மரம். நாய், பூனை, காக்கை, குருவி, செடி, கொடி என அனைத்தையும் அன்பாய் பார்க்கும் வித்தியாசமான மருத்துவர், அவர் மனையின் மரம் அது.
மழைக்காலத்தில், பனிக்காலத்தில், வெய்யில் மிகு கோடையில் என எல்லாக் காலங்களிலும் நார்த்தம் மரம் ஓர் அழகுதான். பெரிய பெரிய கரும் பச்சை காய்களோடு அமைதியாக நிற்கும். ‘ஏய்! எதாவது ஓர் உற்பத்தி பண்ணாலே ஆடறோம் நாங்க! இத்தனை காய்களை உருவாக்கிட்டு எப்படி அமைதியா நிக்கறே நீ!’ என்பது பக்கத்து மனை நாரத்தையின் மீது நான் கொண்ட வியப்பு.
குண்டு குண்டான கரும்பச்சை காய்களோடும், ‘இது ஆரஞ்சு மரம்!’ என்று எவரையும் ஏமாற்றலாம் என்னுமளவிற்கு மஞ்சள் மஞ்சளாக பழங்களையும் கொண்டு பார்க்கவே அட்டகாசமாக அணில்களையும், பட்டாம்பூச்சுகளையும், குயில்களையும், நம் உள்ளத்தையும் ஈர்த்து நிற்கும்.
பக்கத்து மனையின் டாக்டர் சாரும் அவரது மனைவியும் எப்போதாவது ஆட்கள் எவரையேனும் வரவழைத்து பழங்களை பறிப்பது, மழைக்காலங்களில் முன்னெச்சரிச்சையாக கிளைகளை கழிக்கப்பது என செய்து கொண்டிருப்பார்கள். மற்றபடி அதிகாலை, இருட்டு, இரவு, பகல், மழை, பனி, வெய்யில் என எல்லா நேரமும் நார்த்தம் மரத்தை அனுபவிப்பது என் கண்களே. எங்கேனும் ஊருக்குப் போய் விட்டு திரும்பி வந்து வீடு திறந்தால் முதலில் பார்ப்பது என் பால்கனி செடிகளையும் பால்கனியையொட்டிய நார்த்தம் மரத்தையுந்தான்.
அதிகாலை பால்கனி கதவை திறப்பது கூட நாரத்தையின் உச்சியோடு வானம் பார்ப்பதற்குத்தான். அணிலை, அணிலின் க்ரீச்சை, பட்டாம்பூச்சிகளை, புள்ளி வைத்த பெண் குயில்களை, சிவப்புக் கண் ஆண் கருங்குயில்களை, அண்டங காக்கைகளை, மயக்கும் மாலைகளை, கவிதைகளை என எனக்கு எப்போதும் நிறைய தரும் நார்த்தம் மரம்.
காலையில் பிஸ்கெட் கேட்டு கரையும் காக்கைகள் எனக்காக காத்திருப்பதும் இந்த நாரத்தை மரத்தில்தான்.
இந்த முறை ஊருக்குப் போய் வந்து கதவைத் திறந்தால், அதிர்ச்சி. ஓர் ஆள் நாரத்தை மரத்தை வெட்டிக் கொண்டிருந்தார். கண்களை நம்ப முடியவில்லை. வேறோரு மரமாக நிற்கிறது நாரத்தம் மரம். இலைகள் அத்தனையும் காய்ந்து வேறொரு வண்ணத்தில் சருகுகளாக. முழு மரமும் பட்டுப் போனது போல. உயிரற்ற மரமாக.
‘ஐயோ! என்ன ஆச்சு!’
பக்கத்து வீட்டு மருத்துவருக்காக காத்திருந்து தவிக்கிறேன் விசாரிப்பதற்கு.
‘சார்! என்ன சார் ஆச்சு?’
‘என்னவோ கரையான் போல. பட்டுப் போன மாதிரி இருக்கு சார். அதான் கிளைகளை வெட்டிட்டு அடிய மட்டும் விட்டுப் பார்ப்போம்னு செய்யறோம்!’
‘சத் சத் சத்!’
கத்தி வெட்டு விழுகிறது. அங்கேயே நிற்கிறேன் பேச்சற்றவனாக.
எனக்கே இப்படி என்றால் மரத்தை வளர்த்தெடுத்த அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் எப்படி இருக்கும்! கண்ணில் நீர் வராத குறையாக நிற்கிறேன்.
சிவப்புக் கண் ஆண் கருங்குயில்களும், புள்ளி போட்ட பெண் குயில்களும், காக்கைகளும் வேறு மரத்திற்கு போயிருக்கும். நாங்கள் என்ன செய்வது?
இந்த மரம் பிழைக்க என்ன செய்வது! பட்டுப் போகும் மரத்தை உயிர்ப்பிக்க வழி தெரியுமா உங்களுக்கு?
மரமே, மரமே பிழைத்துக் கொள்ளேன்!
– பரமன் பச்சைமுத்து
22.96.2023
#நார்த்தம்மரம் #பரமன் #Paraman #நாரத்தை #Narathai #Nartham #ParamanPachaimuthu #Trees #BalconyTree