இருபதாண்டுகளுக்கு முன்பு பெங்களூர் வாழ் இந்தியா டாட் காம் பொறிஞனாக இருந்த போது என் மகள்களைத் தூக்கிக் கொண்டு திருச்சியில் காவிரியில் இறங்கிக் குளித்து, வயலூருக்கும் திருவானைக்கா கோவிலுக்கும் போயிருந்தேன். இன்று இறை பற்றிய புரிதலும் நம்பிக்கையும் வேறு வடிவம் பெற்றிருந்தாலும், எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவர்களுக்கு உரையாற்ற திருச்சி வந்ததும், வண்டியை திருவானைக்காவிற்கு விட்டேன்.
ஊரும் உலகமும் நிறைய மாறிவிட்டதைப் போலவே, கோவிலிலும் மாற்றங்கள் வரும்தானே.
…..
கூடுதல் இணைப்பு:
அருமையான வரிகள் கொண்ட திருவானைக்கா தேவாரம் :
தந்தை தாய்உல குக்கோர்
தத்துவன் மெய்த்தவத் தோர்க்குப்
பந்த மாயின பெருமான்
பரிசுடை யவர்திரு வடிகள்
அந்தண் பூம்புனல் ஆனைக்
காவுடை ஆதியை நாளும்
எந்தை என்றடி சேர்வார்
எம்மையும் ஆளுடை யாரே
…….
தெற்கு உள் வீதியிலிருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்த மதில்களைத் தாண்டி ஓங்கி வளர்ந்து உயர்ந்து காற்றிலாடும் தென்னை மரங்களில் குலைகுலையாய் தேங்காய்கள் பறிக்கப்படாமலே இருப்பது தெரிகிறது. (தெற்கு உள்வீதியில் ‘கண்ணன் காப்பி’ என்றொரு கடை, அருகில் போகையிலேயே காஃபி மணக்கிறது, பருகையில் ருசியில் மெய்மறக்கிறது. அங்கேயே காஃபி கொட்டையை அரைத்து ஃபில்டரில் இறக்கி தருகிறார்கள். வெறும் 10/- ரூபாய் என்று அறிவிப்போடு தந்து அசத்துகிறார்கள். ஆமாம், ‘கோவை கண்ணன் காப்பி’ இங்கே திருவானைக்காவில்)
சோழ மன்னன் காவிரியில் மூழ்கையில் முத்து வடம் நீரில் போனது, ‘சிவனே உனக்கு காணிக்கை’ என்றியம்பி மூழ்கி எழுந்து கோவிலுக்குள் வந்தால், காவிரி நீழ் சூழும்படி இருக்கும் சிவலிங்கத்தில் முத்துவடம் என்று சுந்தரர் தேவாரத்தில் இப்படி கதைகள் இருக்கின்றன என்று பரிக்கு சொன்னேன். அவற்றை விட ‘காவிரி நீர் உள்ளே கருவறை சிவனை சூழ்ந்து நனைத்து ஓடும், நான் பார்த்திருக்கிறேன்!’ என்று நாம் சொன்ன செய்து அவனை அரை நொடியில் வியப்பில் ஆழ்த்தியது.
எப்போதும் போல என்னை சிற்பங்கள் ஈர்த்தன. பாண்டியக் கோவில்களைப் போலவே வேலைப்பாடுகள் கொண்ட பல்லடுக்கு தூண்கள், அவற்றில் நேர்த்தியான சிற்பங்கள். கொடிமரத்தினருகில் அண்ணாந்து பார்க்குமளவு நல்ல உயரத்தில் விடையேறிய பெருமானக ஒரு சிற்பம், மண்டபத்தின் தூணொன்றில் முயலகனின் மீது ஒரு கால் அந்தரத்தில் உயர்த்திய ஒரு கால் என ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி சிற்பம் எனை நெனுநேரத்திற்கு நிறுத்தி வைத்தன. சிலைகள் என்னை சிலையாக நிற்க வைத்தன. ஊர்த்துவ தாண்டவத்தில் உயர்த்தி நிற்கும் காலும் பிட்டமும் இணையுமிடத்தில் இரண்டு கைகளை கோர்த்து நிற்பதாக இருக்கிறது வடிவமைப்பு.
(Contn.)
‘ஓ…!’ என்று நின்று விட்டோம். படத்தில் கவனியுங்களேன். கோர்த்த கைகளுக்கிடேயே இருக்கிறது உயர்த்திய கால்.
தென்னைகள் சளசளக்க, ஆளையே அடித்துத் தூக்கிவிடும் அட்டகாசமான காற்றும், சுகமான தட்பவெப்பமும், அதிகம் பரபரப்பில்லாத மனிதர்களும், கொஞ்சம் தண்ணீர் ஓடும் காவிரியும் என சுகமாக இருக்கிறது திருச்சிறாப்பள்ளி.
– பரமன் பச்சைமுத்து
திருச்சி
19.07.2023
#ParamanTouring #Trichy