பறவை சூழ் உலகு…

பறவைகள் என்று மொத்தமாய் சொன்னாலும் எல்லா பறவைகளும் ஒன்றல்ல. தரைக்கு மேலே வானுக்குக் கீழே என்ற வெளியில் வசிப்பவை பறவைகள் என்றாலும் உற்றுக் கவனித்தால் நிலைகள் புரியும்.

மிக மிக உயரத்தில் மட்டுமே பறக்கும், உயரத்தில் மட்டுமே கூடு கட்டி வசிக்கும் பறவைகள் (செங்கழுகு, கருங்கழுகு), அதற்கு அடுத்த நிலையில் பறக்கும் வசிக்கும் பறவைகள் (நாரை, கொக்கு, வெள்ளை மடையான், ‘ரெட்டை வால் குருவி’ ‘கருவேட்டு வாலி’ ‘கரிச்சான்’ என வேறு வேறு பெயர்களில் அழைக்கப்படும் வால் பிளவுபட்ட குருவி, பச்சைக் கிளி), அதன் அடுத்த நிலையில் வசிக்கும் பறவைகள் (காகம் போன்றவை), அதன் அடுத்த நிலையில் பறக்கும் தரையில் வசிக்கும் பறவைகள் (செம்போத்து, மயில், சிவப்புக் கொண்டை ஆட்காட்டி), எப்போதாவது பறக்கும் தரையிலேயே வாழும் பறவைகள் (கோழி, சேவல்), பறக்கவே பறக்காது தரையிலேயே வாழும் வசிக்கும் பறவைகள் (காடை, பெங்குயின்) என எத்தனை நிலைகள் வகைகள் பறவைகள்.

நீரில் மட்டுமே வசிக்கும் நீர்க்காகம் போன்றவைகளும் உண்டே. ‘இதுல்லாம் ஒரு ரெக்கையா, இத வச்சிட்டு நீ பறக்கற.. த்தூ!’ என்று ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார் பாகம் 2’ல் பண்டோரா கூட்டத்தை வாட்டர் வேர்ல்டு கூட்டம் கேலி செய்வது போல, இந்தப் பறவைகளும் கேலி் செய்து கொள்ளுமோ என்னவோ.  பறவைகள் என்ன பேசினாலும் நமக்கு அது, ‘பறவை கத்துது’தான்.  பறவைகள் மொழி தெரிந்தவர் என்று பரப்பட்ட யாகவா முனிவர் என்பவர் இறந்தே விட்டார். அவருக்கு உண்மையிலேயே பறவைகள் மொழி புரியுமா என்ன?

‘கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே, என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்!’ ‘ஏய் குருவி, சிட்டுக்குருவி! ஒஞ் சோடி எங்க அதைக் கூட்டிகிட்டு எங்க விட்டத்துல வந்து கூடு கட்டு!’ என்பதெல்லாம் நாம் சொல்வதை பறவைகள் கேட்பதான விளிப்பு. பறவைகள் சொல்வதை நாம் கேட்கிறோமா? பறவைகள் பேசுவது நமக்கு புரியுமா?   ‘காக்கை மனிதன்’ என்றொருவர் இருப்பதாக ஊடகங்களில் கவனித்திருக்கிறேன்.  காக்கைகள் போலவே அவர் குரலெழுப்பினால் நூற்றுக்கணக்கான காக்கைகள் திரண்டு பறந்து வரும், உணவைத் தின்று போகும். ஒரு முறை ஒரு இறப்பு நிகழ்வு கரும காரியத்தில் காக்கைக்கு உணவிட அவரை விட்டு காக்கைகளை அழைக்கச் சொன்னார்களாம்,  ராமேஸ்வரத்திலிருந்து அவர் அழைக்க இலங்கையிலிருந்தெல்லாம் காக்கைகள் வந்து விட்டனவாம். அவரும் கூட காக்கைகள் பேசுவதை புரிந்ததாக சொல்லவில்லை.

தாமல் ஏரியில் வளர்ந்திருந்த கருவேல மரங்களில் இளைப்பாறிய சில பறவைகளும், நீரில் ஓரிடத்தில் மூழ்கி வேறிடத்தில் வெளிவந்த நீர்க்கோழியும் ( உண்மையில் அதன் பெயர் ‘நீர்க்காகம்’) எங்களை ஈர்க்க, இறங்கி விட்டோம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து.

பல பறவைகளை பார்த்து களிக்க மட்டுமே வாய்த்தது, படமெடுக்க முயல்கையில் படபடவென இறக்கை அடித்து கால்களை கிளைகளில் உந்தி காற்றில் கிளம்பி பறந்து தூரத்து மரங்களுக்குப் போய்விட்டன.  ‘இங்க பாரு! எவ்ளோ வேணா பாத்துக்க, ஆனா படம்ல்லாம் எடுக்காத, அப்புறம் என் ஆட்டுக்கு வயசு கொறைஞ்சிடும்!’ என்று சொன்ன ராமநாதபுரம் கிடை ஆட்டு மந்தை தாத்தா நினைவில் வந்தார் இந்த பறவைகள் நகர்ந்து வேறிடத்தில் அமர்ந்த போது.

நம் பிள்ளைகளை பறவைகளிடத்தில் கூட்டிச் செல்ல வேண்டும். அதே கார்ட்டூன் படங்கள் வேறு மாதிரி புரியும் அவர்களுக்கு, அல்லது கார்ட்டூன் படங்களே தேவைப்படாது.

– பரமன் பச்சைமுத்து
வேலூர்
22.07.2023

#BirdsWatch #ParamanTouring #DhamalLake #Birds #Nature #Environment #Paraman #ParamanPachaimuthu #LifeCoach #ParamanLifeCoach #பரமன் #பரமன்பச்சைமுத்து #Vellore

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *