எம்எல்ஏவாக இல்லாமலேயே ‘எம்எல்ஏ பெஸரேட்’ சாப்பிடலாம்! விஜயவாடாவிலிருந்து காக்கிநாடா பயணித்த போது ஒரு முறை மலர்ச்சி மாணவர்கள் வலுக்கட்டாயமாக வாங்கித் தந்து சுவைக்கச் செய்தது ‘எம்எல்ஏ பெஸரேட்டு’.
‘அது என்ன எம்எல்ஏ பெஸரேட்டு? இந்த ஊரு எம்எல்ஏக்கி அது ச்சால இஷ்டமோ?! ஏமிரா… ஏமிரா… ஏய் ஏமிரா அது?’ என்று ராஜமௌலி பட வில்லன்கள் போல ஒண்ணு ரெண்டு தெலுங்கு வார்த்தைகளை வைத்துக் கொண்டு நேனு அடிகானு.
‘பரமன், எம்எல்ஏ பெஸரேட்டு சூப்பர் கா உன்டுந்தி! காவாலா? காவாலா?’ என்று அவர்கள் கேட்க, சரியென்று வாங்கினோம். ( ‘காவாலா’ சாங் எல்லாம் அப்போது வரவில்லை!)
கோதுமை மாவு இன்ன பிற மாவோடு, பச்சைப் பயிறு, பூண்டு, சீரகம், தக்காளி, முக்கியமாய் பச்சை மிளகாய் ஆகியவற்றை அடித்துக் கலந்து கல்லில் ஊற்றி வார்த்தெடுக்கும் ‘ஸ்டார்ச் கஞ்சி போடப்பட்டு இஸ்திரி போட்ட கதர் சட்டை போல’ மொடமொடவென்று வரும் தோசை போன்ற வஸ்துக்கு ‘பெஸரேட்’ என்று பெயர். ஆந்திரத்தில் உண்ணப்படும் இதை தெலுங்கு வழக்கு மொழிப்படி இறுதியில் உகரம் சேர்த்து ‘பெஸரேட்டு’ என்பர்.
கல்லில் வார்த்து எடுத்து மடிக்கப்பட்ட அதே பெஸரேட்டில் உள்ளே ஒரு கரண்டி உப்புமா வைத்து மடித்தால் அது ‘எம்எல்ஏ பெஸ்ரேட்டு’.
‘அடேய்! வேற மாநிலம் வந்தாலும் உப்புமாதானா நமக்கு!?’ என்று அலறிக்கொண்டே பிட்டு ஒரு விள்ளலை வாயில் போட்டோம். வித்தியாசமான சுவை.
இன்று குடியாத்தத்திலிருந்து திரும்புகையில் ரத்தினகிரி மலை முருகன் கோவிலுக்கு எதிரில் இருக்கும் ‘அலங்கார் ஹோட்டல்’லில் மெனுவில் ‘எம்எல்ஏ பெஸரேட்’ பெயரை பார்த்து புன்னைகைத்தோம்.
ஆந்திரம் ஆந்திரம்தானே என்றாலும் இணையான சுவையில் தருகிறார்கள். கம்பு தோசை, பச்சைப் பயிறு தோசை, பூண்டு பொடி தோசை என சிறப்பு வகைகள், வழக்கமான இட்லி, பூரி, பொங்கல் வகைகளும் கிடைக்கின்றன.
வண்டி நிறுத்த நல்ல வசதியான வளாகம், கழிப்பறை வசதி, வயிற்றைக் கெடுக்காத சுவையான நல்ல உணவு என அசத்துகிறார்கள் ரத்தினகிரி ‘அலங்கார் ஹோட்டல்’ வளாகத்தில்.
புதிதாக பூக்கும் போது வெள்ளையாகவும் அடுத்த நாள் சிவப்பாகவும் மாறும், முகப்பில் இருந்த ரங்கூன் மல்லி எம்மை ஈர்த்து, மணக்குடி வீட்டை நினைவில் கொண்டு வந்து நிறுத்தியது.
அடுத்த முறை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்தால், ரத்தினகிரி அலங்காரை முயற்சித்து பாருங்கள்.
( கோவிலுக்கு அருகில் இருப்பது ‘சுயசேவை உணவகம்’. நாம் குறிப்பிடுவது நெடுஞ்சாலையின் எதிர்ப்புறம் இருக்கும் பெரிய உணவகம்)
- பரமன் பச்சைமுத்து
ரத்தினகிரி
24.07.2023