நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, இந்த எம்ஜிஆர் படத்தை?

SmartSelect_20230909_224637_Chrome

புவனகிரி ரெங்கராஜா திரையரங்கில் ‘சேர்’ டிக்கெட்டில் போய் அந்தப் படத்தைப் பார்த்தோம். ‘மேடை’ டிக்கெட், ‘பெஞ்ச்’ டிக்கெட் என்று குறைந்த விலை டிக்கெட்டிலேயே திரைப்படங்களை பார்த்திருந்த சிறுவர்களான எங்களுக்கு ‘சேர்’ டிக்கெட் ஒரு பேரனுபவம்.

எம்ஜியார், பானுமதி, சரோஜா தேவி, நம்பியார், எம்ஜி சக்கரபாணி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்த மூன்றே கால் மணி நேரப் படம் அது.

‘பரமா, இண்ட்ரோலுக்கு அப்புறம் படம் கலர்ல வரும்! இதான் மொத மொத கலர் படம்!’ என்று முன் பாதி முழுக்க சொல்லிக் கொண்டே இருந்தான் ஏகே ஸ்ரீநிவாசன். ஒரு பக்கம் ‘கோவிந்தராஜூலு செட்டியார்ஸ் சன்ஸ்’ ஜெகன், இன்னொரு பக்கம் ஏகே ஸ்ரீநிவாசன், நடுவில் பரமன் எனும் நான். ( ‘கோவிந்தராஜூலு செட்டியார்ஸ் சன்ஸ ‘ ஜெகன், ‘மணி ஜூவல்லர்ஸ்’ ஜெகன் ஆகி, இப்போது ‘சண்முகா ஜூவல்லர்ஸ்’ ஜெகன் என ஆகிவிட்டான். ஏகே ஸ்ரீநிவாசன் அண்ணமலைப் பல்கழகத்தின் ஊழியர் இப்போது)

மூன்று இடைவேளைகள் நான்கு இடைவேளைகள் எல்லாம் உண்டு படங்களில் அந்நாட்களில். ‘க்ரிங்ங்க்’ என்று மணி தொடர்ந்து அழுத்தப்பட்டு ஒலித்தால் அது அசலான இடைவேளை, மற்றதெல்லாம் ப்ரொஜெக்டர் சூடாகி ரீல் அறுந்து தாவிடாமல் இருக்க விடப்படும், ரீல் மாற்ற விடப்படும் இடைவேளைகள். வித்தியாசத்தை உணர்த்த ரீல் மாற்றும் போது ஒரு வகை விளக்கையும், அசல் இடைவேளைக்கு வேறு வகை விளக்கையும் எரிய விடுவார் ஆப்பரேட்டர்.

‘முறுக்கு மொளவடை… முறுக்கு மொளவடை…’ (மிளகுவடை = மொளவடை), ‘சோடா… கலர்…. சோடா… கலர்…’ என்று விற்பார்கள் திரையரங்கத்திற்கு உள்ளேயே.

இடைவேளைக்குப் பிறகு படத்தில் கலர் வந்ததும் திரையரங்கில் விசிலும் கைதட்டலும் பறந்தது இன்னும் நினைவில் வந்தது.

‘மானை தேடி மச்சான் வரப் போறான்’ என்ற பாடலின் வரிகள் ஜெகனுக்குள் தொற்றிக் கொண்டன.

சிறையில் அடைக்கப்பட்ட எம்ஜிஆர் ‘தூங்காதே தம்பி தூங்காதே!’ பாடும் போதும் கைதட்டல், விசில்கள் பறந்தன அரங்கில்.

புவனகிரியில் என்டிசி டியூஷனுக்கு வந்த நாட்களில் ஒரு நாள் டியூஷனுக்கு திடீர் விடுமுறை அளிக்கப்பட்டு நாங்கள் ரங்கராஜா திரையரங்கிற்குள் நுழைந்ததாக நினைவு.

எம்ஜிஆரே தயாரித்து எம்ஜிஆரே இயக்கிய படம், படத்தின் வெற்றியை கலைஞரிடம் தந்துவிடக்கூடாது என்பதற்காக சரியாகத் திட்டமிட்டு கவிஞர் கண்ணதாசனை வசனமெழுத வைத்து பட்டுக்கோட்டையை பாடலெழுத வைத்து மொத்த பெரும் வெற்றியையும் எம்ஜிஆரே அறுவடை செய்த தமிழ் திரையுலகின் மிக முக்கியமான திரைப்படம் என்பதெல்லாம் இப்போது தெரியும். அந்தக் காலத்தில் அந்த வயதில் தெரியாது.

மலைப்பாம்பு, கன்னித்தீவு, இளவரசி ரத்னா, அருவி வழியும் நாகக் குகை, எம்ஜிஆரின் பராக்கிரம கத்திசண்டைகள், இளவரசி முதுகில் நட்சத்திரக் குறியீடு, கயிறறுந்த அருவிப் பாலத்து காட்சிகள் என சுவராசியம் சொட்டச் சொட்ட செய்திருக்கிறார் எம்ஜிஆர். (ரஜினி நடித்த ‘மாப்பிள்ளை’ படத்தின் கிளைமாக்ஸ் அருவி கயிற்றுப் பாலம் காட்சிகள் எல்லாம் இதிலிருந்துதான் காப்பி எடுக்கப்பட்டன என்பதும், அதே ஒகேனேக்கலிலேயே எடுத்து விட்டார்கள் என்பதும் இப்போது புரிகிறது. ரஜினி கயிறு இழுக்கும் காட்சியில் தனது பாணி ‘ஸ்டைல்கள்’ செய்து மெருகேற்றி விடுவார்).

ஆர்எம் வீரப்பனின் மூல கதையில் சிறந்த திரைக்கதை செய்த எம்ஜிஆர் மிகச் சிறந்த இயக்குநராக இருந்திருக்கிறார். எம்ஜிஆரே எடிட்டிங் செய்தார் என்கின்றன தரவுகள். மக்களின் நாடியை அறிந்து வைத்து இருந்திருக்கிறார் எம்ஜியார் என்பது படம் முழுக்க தெரிகிறது. அதனால்தான் 18 லட்சம் ரூபாய்க்கு படமெடுத்து அந்தக் காலத்திலேயே 1 கோடியே 40 லட்சம் கண்டிருக்கிறார் இந்தப் படத்தில்.

‘நாளை காலை வந்து பாடல் எழுதித் தாருங்கள்!’ என்று எம்ஜிஆர் சொல்ல, தூங்கி தாமதமாக எழுந்து மதியமே கண்ணதாசன் வந்த நின்றதாகவும், அதனால் அந்தப் பாடலை பட்டுக்கோட்டையை வைத்து எம்ஜிஆர் எழுதி முடித்து விட்டதாகவும், அந்தப் பாடல்தான் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாடல், நடிகை பானுமதி ரீ டேக்குகளுக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால் கதையில் அவரை கொன்று நீக்கிவிட்டு சரோஜா தேவியைக் கொண்டு வந்தார் இயக்குநர் எம்ஜிஆர் என்றெல்லாம் கதைகள் உண்டு.

இந்தப் படத்தைத்தான் மாறுதல் செய்து ‘இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசி’ செய்தார்கள்.

செய்தி சானல்களைத் தாண்டி தொலைக்காட்சியை கண்டுகொள்ளாத நான் என்றாவது ஒரு நாள் அதிசயமாக மற்ற சானல்களை மேய்வேன். அப்படி மேய்கையில் இன்று ‘வசந்த் டிவி’யில் ஓடிக்கொண்டிருந்த இந்தப் படம் என்னை நிறுத்தியது.

கருப்பு வெள்ளையில் தொடங்கி பாதியில் கலராக மாறும் படம், எனக்குள் பள்ளி நாட்களை ஓட விட்ட அந்தப் படம்…

‘நாடோடி மன்னன்’

நீங்கள் பார்த்திருக்கிறீர்களா நானோடி மன்னன்?

– பரமன் பச்சைமுத்து
சென்னை
09.09.2023

#NadodiMannan #Paraman #WriterParaman #Bhuvanagiri #MGR #எம்ஜிஆர் #நாடோடிமன்னன் #பரமன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *