ஆரஞ்சு வண்ண கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாவை குடித்திருக்கிறீர்களா, நீங்கள்?

கோலி சோடா பாட்டில்களே வித்தியாசமாக இருக்கும். லெகர் போன்ற கம்பெனி சோடா பாட்டில்கள் காக்கைகள் என்றால், கோலி சோடா பாட்டில்கள் அண்டங்காக்கைகள் போன்று வித்தியாசமானவை, கொஞ்சம் அழகானவையும் கூட.

வெள்ளை வண்ணத்தில் பளிங்கு போல வரும் சோடா, கருப்பு வண்ணத்தில் வரும் கலர் சோடா என வகைகள் இருந்தாலும், ஆரஞ்சு வண்ணத்தில் இருக்கும் கோலி சோடாக்களையே கண்கள் தேடும் அவ்வயதில். இது தவிர பன்னீர் சோடா என்பது சில பைசாக்கள் கூடுதல் வி்லை கொண்ட உயர் ரகம்.

சிறுவர்களாலும், பழக்கமில்லாத பெரியவர்களாலும் ஒரு சோடாவை முழுதாக குடித்து முடிக்க முடியாது. பாதி குடிக்கும் போதே அதன் காரமும் அதிலிருக்கும் வாயுவும் தொண்டையை ஏதோ செய்ய ‘ர்ர்ற்ஏ!’ என்று ஏப்பம் விட்டு நிறுத்தி விடுவர். பழகிய பெரியவர்களுக்கும் மேடையில் பேசும் அரசியல்வாதிகளுக்கும் சோடா என்பது ஒரு கார போதை.

மற்ற சோடா, பானங்களில் வருவது போல கோலி சோடாவுக்கு எப்போதும் உலோக மூடிகள் இருக்காது. கோலி சோடாவின் ‘லாக்கிங் மெக்கானிசம்’ அறிவியலின் அட்டகாசம். திரவத்தோடு மேல் நோக்கி எழும் வாயுவையும் நிரப்ப, அதன் உந்து விசையில் மேலே கோலி தள்ளப்பட்டு தானாக மூடிக்கொள்ளும்.

‘சோடா கட்டை’ என்று ஒன்றை வைத்து ஒரு தட்டு தட்டினால், ‘புஸ்க்’ என்று வாயு வெளியேற விலகும் உள்ளிருக்கும் கோலி. வெறும் கட்டைவிரலை பாட்டிலின் வாயில் வைத்து இன்னொரு கையால் ஒரு தட்டு தட்டி ‘புஸ்ஸ்’ என்று திறக்கும் ஆசாமிகளை பாகுபலி போல வியந்து பார்த்திருக்கிறேன் அவ்வயதில்.

கோலி சோடாவை குடிக்கும் போது பாட்டிலின் எந்தப் பக்கம் மேல்பக்கம் இருக்க வேண்டும் என்று தெரியாமல் தவறாக வைத்துக் கொண்டு குடிக்கும் போது, உள்ளிருக்கும் கோலி ஓடி வந்து அடைத்துக் கொள்ளும். ‘ம்… மூடிகிச்சி, சோடா வரல்ல!’ என்று அழுத சிறுவர்களைப் பார்த்து சிரித்திருக்கிறேன் நான்.

கோலி சோடாக்கள் பெரும்பாலும் பெரு நிறுவனங்களிலிருந்து வருவதில்லை. சிறு குறு தொழில் செய்யும் உள்ளூர் தொழில்முனைவோர்களின் தயாரிப்பு அவை.

கோலி சோடாக்கள் பெருமளவு கொண்டாடப்பட்ட காலத்தில், இந்த இடத்தில் ஒரு சோடா ஃபேக்டரி இருந்தது. ‘சோடாக்கட’ என்றே மக்கள் அதை குறிப்பிடுவார்கள் என்றாலும் அது கடையல்ல, கோலி சோடா தயாரிக்கும் தொழிற்சாலை.

திருவண்ணாமலையிலிருந்து திண்டிவனம் சாலையில் வரும் போது மேடான சாலை இயல்பாக சரியும் இடத்தில் சோமாசிப்பாடி வரும், இடப்புறம் பெரிய அரசமரமும் சில அடிகள் தூரத்தில் இந்த சோடாக்கடையும் இருக்கும்.

சுப்பராயன் மாமாதான் இந்தக் கடைக்கு அழைத்துப் போவார். ஊரிலிருந்து யார் சோமாசிபாடி வந்தாலும் கூட்டிப் போய் கோலி சோடா வாங்கித்தருவார். பாட்டிலை சரியாக பொருத்தி விட்டு இயந்திரத்தில் இருக்கும் விசைப்பிடியை பிடித்து மூன்று சுற்று சுழற்றினால், பாட்டிலின் உள்ளே சோடா திரவத்தையும் அதிக அழுத்தத்தில் வாயுவையும் நிரப்பி கோலியை மேலெழும்ப வைத்து மூடிக்கொள்ளும். நம் கண் முன்னே சுற்றி பாட்டிலில் நிரப்பி ‘ஃப்ரெஷ்’ஆக தருவார்கள் சோடாவை.

‘சோடா கடை’யும் அதைத் தாண்டி சிறிது தொலைவில் வளர்ந்து நிற்கும் பெரிய அரசமரமும் சோமாசிபாடியின் அடையாளங்களாகவே இருந்தன. எம்ஜியார் ஆட்சியில் உச்ச செல்வாக்கில் இருந்த ப.உ.சண்முகம் போன்ற அமைச்சர்கள் தொகுதி பக்கம் வந்தால் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நின்று மற்றவர்களோடு பேசும் இடம் அந்த சோடாக்கடைதான்.

(சோமாசிபாடி என்றால் சோடாக்கடை, பெரிய அரசமரம், ஊரின் வெளியே பரந்து விரிந்து கருவேல மரங்கள் அடர்ந்திருக்கும் ஏரி என்பவை என்னுள்ளே பதிந்து போன என் சிறுவயது அடையாளங்கள்)

இந்த சோடாக்கடையிலிருந்து திருவண்ணாமலை அன்பு தியேட்டர், விபிசி தியேட்டர் உட்பட ஆராஞ்சி, கனபாபுரம், கீழ்ப்பெண்ணாத்தூர், மங்கலம், அவலூர்பேட்டை என சுற்று வட்டார பகுதிகளின் கடைகளுக்கு போய்ச் சேர்ந்தனவாம் இங்கு தயாராகும் கோலி சோடாக்கள்.

காலம் மாறிவிட்டதே! சிறு தொழில்கள் சில நலிந்ததால் கோலி சோடாக்கள் ஒழிந்தே போயின. நான்கு மாதங்களுக்கு முன்பு ‘அடையார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்’ரின் புதிய கிளையை திறந்து வைத்து விட்டு உள்ளே பொருட்களை பார்வையிட்ட போது கோலி சோடா மாதிரியே ஒன்றை பார்த்து கையிலெடுத்தேன். ‘பழைய ஹெரிட்டேஜ்ஜ விரும்பறவங்களுக்காக சும்மா அதே கோலி சோடா மாதிரி பாட்டல் பண்ணி உள்ள ட்ரிங்க்ஸ் வச்சிருக்காங்கண்ணா!’ என்று விளக்கினான் பரி.

‘புஸ்ஸ்ஸுனு வருமா இது? வராது. புஸ்ஸுன்னு வரும் அது அப்படீங்கறதுக்காகத்தான் அதை அடையாளமா வச்சி ஒரு படத்துக்கே ‘கோலி சோடா’ன்னு பேரு வச்சாரு ஒரு இயக்குநர்!’

திருவண்ணாமலையில் இரண்டு நாட்கள் மலர்ச்சி வகுப்பெடுத்து விட்டு இன்று மாலையில் சென்னையில் வகுப்பெடுப்பதற்காக காலையில் புறப்பட்டு பயணிக்கும் போது ஓட்டுநரிடம், ‘காலைல பண்ண எக்ஸைக்கு இப்ப நல்லா பசிக்குது. திண்டிவனம் போற வரைக்கும் தாங்காது. எங்காவது ஒரு நல்ல கடையில நிறுத்துங்க, ஒரு காஃபிய குடிச்சிடுவோம்!’ என்று சொல்லி வைத்தேன்.

‘சார், காஃபி கடை சார்!’ என்று வண்டியை நிறுத்திய இடத்தில் இறங்கியதும் என் வாய் விரிந்தது. காரணம், இறங்கிய ஊரின் பெயர்.

சோமாசிபாடி!

சில தினங்களுக்கு முன்பு எம்எல்ஏ பிச்சாண்டி திறந்து வைத்த புதிய பிரமாதமான பயணியர் நிழற்குடை ஒன்று தென்படுகிறது கண்ணில். ப.உ.ச நினைவுக்கு வத்தார். எ வ வேலு ஆட்சி செய்கிறார் இப்போது என்பதும் நினைவுக்கு வந்தது.

அந்த பெரிய மரம் வீழ்ந்து அருகிலேயே வேறொரு கன்றை நட்டு வளர்த்து அதுவும் இன்று பெரிய மரமாக நிற்கிறது. ஏரியில் கொஞ்ச இடத்தை மண்ணிட்டு நிரப்பி அரசு அலுவலகம் ஒன்றை கட்டிவிட்டார் பல ஆண்டுகள் திருவண்ணாமலையில் கலெக்டராக இருந்த கந்தசாமி. ஏரியும் மாறி கிடக்கிறது.

‘இந்த ஊர்ல ஒரு சோடாக்கடை இருந்ததே!’

‘ஆமாம் சார்! இரண்டு கடை தள்ளி அந்த இடத்துல இருந்தது. இப்ப இல்லை.’

சுப்பராயன் மாமா காலமாகி பல ஆண்டுகள் ஆகி விட்டன. சோடா கடையும் இல்லை.

சோடாக்கடை இருந்த இடத்திற்கு முன்பு நின்று ஒரு படம் எடுத்துக் கொள்கிறேன்.

(படத்தில் என் பின் பக்கம் மரத்தைத் தாண்டி தூரத்தில் தெரிவது திருவண்ணாமலையின் அருணாச்சல மலை. இடப்பக்கம் சோடாக்கடை இருந்த இடம்)

ஆரஞ்சு வண்ண கோலி சோடா குடித்திருக்கிறீர்களா, நீங்கள்? என் தொண்டை மிடறில் இன்னும் இருக்கிறது அப்போது குடித்த கோலி சோடாவின் காரம்.

– பரமன் பச்சைமுத்து
சோமாசிபாடி
13.09.2023

#ParamanTouring #Somasipadi #Thiruvannamalai #KoliSoda #கோலிசோடா #பரமன் #பரமன்பச்சைமுத்து #சோமாசிபாடி #Paeaman #ParamanPachaimuthu

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *