சிறுவனாக இருந்த போது மனைப்பலகையையும் கிண்ணத்தில் எண்ணெய்யையும் தந்து ‘போய் புள்ளையார் வாங்கிட்டு வா! இந்தா எட்டணா!’ என்று தருவார்கள்.
கொழுக்கட்டையை விட இந்த மண் பிள்ளையாரை வீட்டுக்குக் கொண்டு வரும் நிகழ்வே ஒரு உற்சவம் போல குதூகல களிப்பு தரும் அரைக்கால் சட்டையணிந்த அவ்வயதில். பிள்ளையார் கொண்டு வருவது ஒரு சிறுவனுக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ, அதேயளவு மகிழ்ச்சி வீட்டிலுள்ளோருக்கும் பிள்ளையார் வாங்கி வரும் பொறுப்பை வீட்டின் சிறுவனிடம் தருவதில்.
மனைப்பலகையை கையில் எடுத்துக் கொண்டு போனால் உடனே உடனே குழைத்து சீராக்கிய களி மண்ணை நம் கண் முன்னேயே அச்சில் அடித்து பிய்த்து பிள்ளையாராக சுடச்சுட எடுத்துத் தருவார்கள். பொதுவாக எல்லோருக்கும் சாம்பல் அடித்த பிள்ளையார், எங்களைப் போல பிள்ளையாரைக் கொண்டு போய் நீராட்டு நடத்துகிறவர்களுக்கு எண்ணெய் விட்டு அடித்த பிள்ளையார்.
சென்னை நகரில் பெரும்பாலும் ஏற்கனவே அடித்து காயவைத்து வண்ணம் பூசிய பிள்ளையார்களே கிடைக்கின்றன. உடனே அடித்துத் தரும் பிள்ளையார்கள் கிடைப்பதில்லை.
இன்று விநாயகர் சதுர்த்தி. மாலை, மலர்ச்சி பேட்ச் 70 வகுப்பெடுக்க காலையில் புறப்பட்டு திருவண்ணாமலை வந்து சேர்ந்து விட்டேன். மணக்குடியில் இன்று காலை எடுத்த படத்தை சுடச்சுட பகிர்ந்தான் மணக்குடியிலிருந்து தம்பியொருவன்.
என் தலைமுறை வளர்ந்து அடுத்த தலைமுறையின் அடுத்த தலைமுறையின் அரும்பான சிறுவன் துருவன், அதே மனைப்பலகை, எண்ணெய் விட்டு அடித்து சுடச்சுட எடுத்த பிள்ளையாரோடு மனமெல்லாம் அதே குதூகல களிப்போடு நிற்கிறான். அதே மகிழ்ச்சியில் பின்னிருந்து கை கொடுத்து மகிழ்ந்து நிற்கிறது மூத்ததுக்கும் மூத்த தலைமுறை.
தலைமுறைகள் வருகின்றன, போகின்றன. மணக்குடிகள் இன்னும் மாறவில்லை. மாறவேண்டாம் அவை! மகிழ்ச்சி நிரம்பட்டும்.
( திருவண்ணாமலையிலும் உடனே உடனே அடித்துத் தரும் பிள்ளையார்களே கிடைக்கின்றன என்பதை கவனிக்கிறேன்)
– பரமன் பச்சைமுத்து
திருவண்ணாமலை
18.09.2023
#Manakkudi
#PillaiyarChathurthi #GaneshChathurthi #Paraman #ParamanPachaimuthu #மணக்குடி #பிள்ளையார் #விநாயகர்சதுர்த்தி #பரமன்